உலகொடு நம்மை உறவெனப் பிணிக்கும்
உறுபசை அன்பெனச் சாற்று
இலகொடு வாழ்வை இயங்கிட செய்யும்
இன்பொருள் அன்பெனும் ஊற்று
நலத்தொடு நம்மை நடையிட வைக்கும்
நறுமண மல்லிகைக் காற்று
இலங்குநல் பொன்னும் இழையணி முத்தும்
இதற்கிலை சரிநிகர் மாற்று
அன்பெனும் விதையை அகத்தினில் விதைத்தால்
அதுதரும் விளைச்சலோ அரிது
நண்பெனும் சிறப்பை நாட்டினில் கொடுக்கும்
நாட்படு தேறலின் பெரிது
பண்பெனும் விளக்கம் பாரெலாம் ஒளிரும்
பார்வையில் முளைத்தெழும் கிழக்கு
இன்பெனும் வாழ்வின் இயங்கியல் கருத்தை
இசைபட வழங்கிடும் இனிது
முன்வினைப் பயனை முறித்திடு மருந்தும்
முழுமுதற் கடவுளும் அன்பே!
கொன்முனை வாளின் கூர்நுனி முனையின்
கூரிய ஆயுதம் அன்பே!
என்வினைச் சூழ்ந்தென் இருள்மிகு கவிழ்ந்தென்
இயங்குவார் அன்புளம் முன்பே
தன்வினை வாலைத் தருக்குமோ காலம்
தாழ்விலை அழிவிலை நண்பே!

பேரினப் பாவலன்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!