அன்றைய விலையில் பொய்கள்

முடியை இழுத்து முன்நெற்றி வரை சீவி

வழுக்கையை மறைக்கிறேன்

மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு

தொப்பையை மறைக்கிறேன்

இருப்பவனிடம் இல்லாமையை மறைக்கிறேன்

ஏழையிடம் பணத்தை மறைக்கிறேன்

உளறிக் கொட்டி சிலரிடம் காதலை மறைக்கிறேன்

பேசாமல் இருந்து என் வன்மத்தை மறைக்கிறேன்

மனைவியிடம் சிலதும் பிள்ளைகளிடம் சிலதுமாய்

எல்லோரிடமும் எதை எதையோ எப்படி எப்படியோ

நாள் முழுவதும் மறைக்கிறேன்

பின்னிரவின் தனிமையில் எல்லா உண்மைகளும்

நிர்வாணமாக படருகிறது என் மீது

கனவெல்லாம் பேரம் பேசி

காலையில் எழுந்ததும் மீண்டும் வாங்குகிறேன்

சில பொய்களை – அன்றைய விலையில்

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849