“இட்லி, கிச்சன்ல இருக்கிற ஹாட் பாக்ஸில இருக்கு, மதிய சாப்பாடு எல்லாம் டைனிங் டேபிளில்ல எடுத்து வச்சிருக்கேன். வடகம் வேணும்னா வறுத்துக்கோ.
இல்லைனா செல்ஃப்ல இருக்குற, மஞ்ச மூடி போட்ட பாட்டில்ல மிச்சர் வச்சிருக்கேன். அதை எடுத்துக்கோ”, சொல்லிக்கொண்டே மாடிப்படிகளில் இறங்கி சென்று கொண்டிருந்தாள் அவள்.
” சரிம்மா” என்று ஒரு வார்த்தை மட்டும் பதிலாக வந்து ‘படார்’ என்று சாத்திக் கொண்டது கதவு.
வீட்டிலிருந்து வெளியே வந்த அவள், 7A பஸ்ஸை பிடிக்க வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தாள்.
போகும் வழியில் தான், மேல் வீட்டில் புதிதாய் யாரோ குடிவந்திருப்பதாக, அன்றொரு நாள் சொன்ன செய்தி அவளுக்கு ஞாபகம் வந்தது.
அதைப் பற்றி என்ன என்று கேட்க கூட நேரமில்லாதவாறு, தன்னைச் சூழ்ந்து இருக்கும் வேலைகளை எண்ணி நொந்து கொண்டாள்.
வார விடுமுறையின் போது அவர்களை பற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சாலை, இவளைப் போன்று நூற்றுக்கணக்கான விறுவிறு மனிதர்களை, அவர்கள் விரும்பிய இடத்திற்கு கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருந்தது.
அனைத்து அலுவலகங்களும் திறக்கும் காலை வேளை ஆதலால், சோம்பலுக்கு இடமின்றி வேக வேகமாக சென்று கொண்டிருந்தனர் மனிதர்கள்.
ஆனால் அந்த 7A மட்டும் மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அவர்கள் அவசரம் புரியாததினாலா, இல்லை தன்னை சர்வீஸ் கூட செய்யாமல் உபயோகிக்கும் சுயநலக்காரர்கள் என்ற கோபத்தினாலா என்று தெரியவில்லை.
ஊர்ந்து வந்த பேருந்துக்குள் வேகமாக நுழைந்தனர், அந்த 7A-காக தவம் கிடந்தவர்கள். அவர்களுள் ஒருத்தியாய் நுழைந்த அவள், கூட்டத்தின் நெரிசலில் கம்பியினை கரம் பிடித்தாள். கணவனை இழந்த அவளது கைகளை, அவனை விட அதிகமாக பற்றியது அந்தக் கம்பிகள் தான்.
பஸ்ஸிற்குள் நுழைந்தவர்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டபின், பஸ்ஸிற்குள் உள்ளேயும் வெளியேயும் வேடிக்கை பார்ப்பது சகஜம்தானே.
அவ்வாறு அவள் உள்ளே வேடிக்கை பார்த்தபோது, அவள் மகள் படிக்கும் பள்ளியின் சீருடையில், மகளின் வயதையொத்த ஒருபெண், தன்னருகில் ஒரு பையனோடு சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.
பள்ளி விடுமுறை காலமான இந்த நாட்களில், பள்ளிச் சீருடையில் அவள், தன் வயதையொத்த ஒரு ஆணிடம் பேருந்துக்குள் இடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சென்று கொண்டிருப்பதை பார்க்க அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
இது போன்ற விஷயங்கள் அன்றாடம் சகஜம் ஆகி வருகின்ற ஒன்று என்று அவளுக்கு தெரிந்தே இருந்தது.
சுற்றி இருப்பவர்கள் இது போன்றவற்றை கண்டும் காணாமலும் இருப்பதே, அதை கூறாமல் கூறுகிறது அல்லவா.
என்றாலும் அவள் மனதிற்குள் திடீரென்று வீட்டில் தனியாக விட்டு வந்த மகள் சுஜாதாவின் ஞாபகம் எட்டிப் பார்த்தது. மனம் மகளை பற்றியே சிந்திக்கக் கால்கள் அவளை அலுவலகத்திற்கு கொண்டு போய் சேர்த்தன.
வழக்கம் போல் அலுவலகத்தின் வேலைகளில் அவள் மனம் ஈடுபடத் தொடங்கியது. மணி 11 ஆனது.
“மேடம் இந்தாங்க காபி”, என்ற பியூனின் குரல் அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது.
அந்த அலுவலகத்தில் அவளுக்கு மட்டும் தான் காபி; மற்ற அனைவரும் டீ குடிக்கும் பழக்கம் உடையவர்கள்.
வழக்கத்திற்கு மாறாக இரண்டு காபிகளை பியூன் கையில் கண்ட அவள்,”என்ன சுந்தரம்? ரெண்டு காபி இன்னைக்கு வாங்கிருக்கிங்க போல”, என்று கேட்டாள்.
“ஆமா மேடம், மேனேஜர் பையன கூட்டிட்டு வந்துருக்காரு, அந்த பையனுக்கு தான் காபி” என்று அவன் கூற, அவளுக்கு சற்று வியப்பாக இருந்தது.
காலேஜ் ஒரு வேள லீவா இருந்துருக்கும். அதான் தனியா பையன் வீட்ல என்ன பண்ணுவான்னு ஆஃபீஸ்க்கு கூட்டிட்டு வந்துட்டாரு போல என்று அவளே சமாதானம் கூறிக் கொண்டாள்.
தன்னை போல் அவரும் ஒரு சிங்கிள் பேரண்ட் என்று நினைத்த போது அவள் மனம் அவரது நிலைக்காக சற்று வருந்தியது.
நேரம் ஆக ஆக குறைந்து கொண்டே வந்த அலுவலகத்தின் சுறுசுறுப்பு, மதிய உணவு வேளை வந்ததும் வேகமாக கூடியது.
ஏனென்றால் அந்த இடைவேளையில் தான் உலக நடப்பில் இருந்து உள்ளூர் கதை வரை உரையாடுவார்கள்.
டிபன் பாக்ஸின் உருட்டல்களையும் மீறி மேனேஜர் பையனை அலுவலகத்திற்கு கூட்டி வந்தது பற்றி அவர்கள் பேசிக் கொண்டது அவள் காதில் விழுந்தது.
“அந்த பையன் இவர் வேலைக்கு வந்ததுக்கு அப்பறம், வீட்டுக்கு யாரோ ஒரு பொண்ண கூட்டிட்டு வர்றானாம். அத யாரோ பக்கத்து வீட்ல பாத்துட்டு இவர்கிட்ட கம்பிளையின்டு பண்ணிருக்காங்க. அதான் அவர் கையோட பையனை இன்னைக்கு இங்க கூட்டிட்டு வந்துட்டாரு” ரசத்தை உறிஞ்சி குடிச்சுகிட்டே குமார் கூறினான்.
அதனைக் கேட்டு கொண்டிருந்த விஜயா,”உங்களுக்கு எப்டி ஸார் தெரியும்?” என்று கேட்டாள்.
“அதே தெருல தான் என் சித்தப்பா இருக்காரு. அவர் தான் இந்த விஷயத்தை நேத்து போன்ல சொன்னாரு”, என்று தன் தகவல் தொடர்பு பற்றி பெருமையாக கூறிக் கொண்டான்.
“பாவம் சிங்கிள் பேரண்ட் ஸார். சொந்தக்காரங்க இந்த காலத்துல அவுங்க அவுங்க புள்ளய வளக்கவே கஷ்டபட்றாங்க. இதுல எங்க இவருக்கு ஹெல்ப் பண்ண முடியும்”, மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே கரிசனப்பட்டார் கல்யாணராமன்.
“எல்லாம் இந்த டெக்னாலஜி பார்க்கிற வேலை ஸார். ஸ்மார்ட் போனும், கம்ப்யூட்டரும் தான் ஸார் இந்த காலத்து புள்ளைங்கள கெடுக்குது”. என்றார் ராஜன்.
தான் அருகில் இருப்பதால் அவர்கள் தன்னைப் பற்றி பேசவில்லை; இல்லையென்றால் தனக்காகவும் அவர்கள் நாக்கு பரிதாப வார்த்தைகளை சம்பிரதாயத்திற்குத் தெளித்து விட்டு, தன் குடும்பத்தையும் ஒரு பொழுதுபோக்காகவும் புறம் பேசுவதற்கான தலைப்பாகவும் எடுத்துக்கொள்ளும் என்று அவள் அறிந்திருந்தாள்.
வழக்கத்திற்கு மாறாக அன்று அவள் அலுவலக வேலைகளை வேகமாக முடித்து விட்டாள். அன்று காலையிலிருந்து நடந்த நிகழ்வுகள் அவள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருந்தன. அதுவே அவளது வேலைகளை துரிதப்படுத்தி இருக்கலாம்.
மீண்டும் 7A காக காத்துக் கொண்டிருந்தாள். ராஜன் கூறிய வார்த்தைகள் மட்டும் அவள் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தன.
அன்றொரு நாள் கூட சுஜாதா புது செல்போன் வாங்கித் தரும்படி அடம்பிடித்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. கால்கள் பேருந்து நிலையத்தில் நிற்க, மனம் மட்டும் வீட்டை நோக்கி விறுவிறு நடை போட்டுக் கொண்டு இருந்தது.
கனத்த மனதுடன் வீட்டை அடைந்தாள். வாசலில் செருப்பைக் கழட்டும் போது, உள்ளிருந்து மகள் செல்போனில் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள், அவளது கைகளை கதவைத் தட்டுவதில் இருந்து தடுத்தது.
“உனக்கு தாண்டி போர், எனக்கு இப்பலாம் போர் அடிக்கிறதே இல்ல. அவன்கூட இருந்தா நேரம் போறதே தெரியாது. அவன் சிரிக்கிறத பாக்கணுமே, எவ்ளோ அழகா இருப்பான் தெரியுமா? செம்ம கியூட் டி அவன்”. பேச்சொலி நின்றது.
அந்த பக்கம் இருந்த அவள் தோழி ஏதோ கூற, “அம்மா வேலைக்கு போன கொஞ்ச நேரத்துல வருவான்; அம்மா வர்றதுகுள்ள போய்டுவான் டி”.
மறுபடியும் மௌனம்.
பின்னர், “இப்ப அவன் தூங்குறான் டி, இல்லைனா உன்கிட்ட பேசிட்டு இருப்பேனா” என்று சொல்லி சிரித்தாள். ஒருநிமிடம் அமைதி.
பின்னர் “ரொம்ப பொறாம படாத டி, தூங்குறப்ப கூட எவ்ளோ கியூட்டா இருக்கான் தெரியுமா?” என்று சொல்லி அவள் முத்தம் குடுக்க, அதற்கு மேல் வெளியே நிற்க பொறுக்காதவளாய் கதவை படார் என்று திறந்தாள்.
அந்த சத்தத்தில் விழித்துக்கொண்டு, அவள் மடியில் கிடந்தவாறே தன் பொக்கை வாய் தெரிய “வீல்” என்று அழுதான், புதிதாய் வந்த ஒருவயது மேல் வீட்டு கண்ணன்.
– ஞாழல், புதுக்கோட்டை
சமுதாயத்தின் நிகழ்வுகளால் எல்லோரையும் சந்தேகிக்கும் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதை அன்றொரு நாள் சிறுகதை அழகாக விளக்குகிறது.
கதை எதார்த்தமாய் நடை போடுகிறது. சமுகப் பிரச்சனையில் நாகரீகம் படுத்தும் பாடு விளக்கப்பட்டுள்ளது அழகு.
“கணவனை இழந்த அவளது கைகளை, அவனை விட அதிகமாக பற்றியது அந்தக் கம்பிகள் தான்”..
அழகான வரிகள், எதார்த்தமான கதை, எளிமையான எழுத்து… 👌
Nice one
Nice story