அப்துல் கலாம் என்ற வழிகாட்டி

“உங்களின் வாழ்க்கை உயரவும் இந்தியா வல்லரசாகவும் கனவு காணுங்கள் கூடவே கடுமையாக உழையுங்கள்” என்பதே அப்துல் கலாம் நமக்கு விடுத்த அன்புக் கட்டளை.


என் வாழ்க்கையே நான் மற்றவர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்று சொன்ன மகாத்மா காந்தியைப் போன்றது தான் அப்துல் கலாமின் வாழ்வும்.

கிராமத்தில் பிறந்தாலும், பெரிய பணக்காரனாக இல்லாவிட்டாலும், தமிழ் வழியே படித்திருந்தாலும் ஊக்கமும் முயற்சியும் இருந்தால் யாரோடும் போட்டியிட்டு முன்னேற முடியும் என்று நிரூபித்தவர் அவர்.

எடுத்துக் கொண்ட முயற்சி எதுவாக இருந்தாலும் அதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் வெற்றி நம்மைத் தேடி வரும் எனச் சாதித்துக் காட்டியவர் அவர்.

தோல்விகள் வரும்போது துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் தடைக் கற்கள் படிக்கற்களாகும் என வாழ்ந்து காட்டியவர் அவர்.

சிறந்த தனிமனிதனாக மட்டும் செயல்படாமல் மற்றவர்களோடும் சுமூகமாகப் பழகி நல்ல ஒத்துழைப்போடு குழுவாகச் செயல்படுவதே நாம் சார்ந்த நிறுவனத்திற்கும், நமக்கும் வெற்றியை ஈட்டித் தரும் என்பதை அறிந்தவர் அவர்.

தலைமைப் பொறுப்பைத் தயங்காது ஏற்றவர் அப்துல் கலாம். தன் குழு வெற்றி பெற்ற போது பாராட்டுக்கும் புகழ்மாலைக்கும் தன் குழுவினரை முன்னிறுத்தியவர். தோல்வி அடைந்த போது மற்றவர்களின் விமர்சனக் கணைகள் தம் குழுவினரை வீழ்த்தாமல் இருக்கத் தான் முன்னின்று தடுத்தவர்.

அறிவும் ஆற்றலும் உடையவர் அடக்கமும் பெற்றிருந்தால் அனைவரின் மதிப்பையும் பெறுவர் என்று சொல்லாமல் சொல்லித் தந்தவர் அவர்.

தன்னலம் கருதாது பொதுநலம் கருதி உழைக்க வேண்டும் என்பதே அறிவியல் படித்த அப்துல் கலாம் நமக்குச் சொல்லித் தரும் அரசியல். அதிகாரமும் பதவியும் நம்மை மக்களிடமிருந்து பிரித்து விடக் கூடாது என்பது அவர் வாழ்ந்து காட்டிய பாதை.

இளையோர்க்கு வழிகாட்டும் வண்ணம் அறிவை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட மேதை அவர்.

அப்துல் கலாம் அவர்கள் காட்டிய வழியில், வாழ்வில் முன்னேற மற்றும் பிறரை முன்னேற்றக் கனவு காண்போம், கடினமாக உழைப்போம்.

– வ.முனீஸ்வரன்