‘ஊர் கூடித் தேர் இழுத்தோம்!’ என்று சொல்வார்கள். அதுபோல இன்று காலையில் இருந்து அப்பா சுந்தரத்திற்கும் மகன் பிரவினுக்கும் சண்டை. தெருவே கூடிவிட்டது.
பிரவின் இதுவரை இது போன்று இருந்தது இல்லை. ‘பிரவின் என்றால் அமைதியான பையன்’ என்று தான் அனைவருக்கும் தெரியும். இன்றைய பிரவின் அனைவருக்கும் புதிதாக தெரிந்தான்.
“நீ மொதல்ல வீட்ட விட்டுப் போயா!
உன்னால என் நிலைமைய புரிஞ்சு இருக்க தெரியல?
நான் என் குடும்பத்தப் பார்ப்பேனா? இல்ல உன் மெடிக்கல் செலவப் பார்ப்பேனா?
உனக்கு மருத்துவம் பார்த்து நான் ஓஞ்சி போயிருவேன் போல!
உருப்படியான வேலை ஏதும் பார்க்க உனக்கு துப்பில்லை. வீட்ல சும்மா உட்கார்ந்துட்டு, என் கண்ணு போச்சு காது போச்சுனு ஏதாவது சொல்லி உசுர வாங்கிற.
இப்போ உன் கண் ஆபரேசன் பண்ணி என்ன பண்ண போற?
என் புள்ள உடம்பு முடியாம இருக்கான். நான் அவன பார்க்கவா? இல்ல உன்ன பார்க்கவா? சுயநலம் பிடிச்ச மாதிரி உன் உடம்ப மட்டும் பார்க்கணும்னு நெனைக்கிற. இதுக்கு அப்புறம் உனக்கு கண்ணு தெரிஞ்சு என்ன பார்க்க போற?
நீ வாழ்ந்து முடிச்சிட்ட. இனிமே தான் என் பையன் வாழனும். அவன் உடம்ப குணப்படுத்த நான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன். அவன கொஞ்சம் வாழ விடுப்பா!” என்று கத்தியபடி சுந்தரத்தின் நெஞ்சின் மீது கையை வைத்து வெளியே தள்ளினான் பிரவின்.
பார்வை மங்கலாக தெரியும் சுந்தரம் தடுமாறி வீட்டின் வெளியில் கீழே விழுந்தார்.
பார்வை குறைபாடு சரி செய்ய ஆபரேசன் செய்வதற்காக மகன் பிரவினிடம் பணம் கேட்டது தப்பாக போய்விட்டது.
சுந்தரம் அவரின் மனைவி மீனாட்சி இருவருக்கும் ஒரே மகன் பிரவின். பிரவினை நன்கு படிக்க வைத்து, நல்ல குடும்ப பெண்ணாய் பார்த்து மணம் முடித்து விட்டனர்.
பிரவின் மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு பையன் விவேக்.
சுந்தரம் வயது மூப்பின் காரணமாக வேலைக்கு செல்ல முடியவில்லை.
அவர் உடல் வேலை பார்க்க ஒத்துழைப்பு தரவில்லை. அதனால் மகனிடம் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார்.
இதுவரை அதனை பிரவின் வெளிபடுத்தியது இல்லை. ஆனால் இன்று என்ன பிரச்சனையோ தெரியவில்லை அப்பா சுந்தரத்திடம் பொங்கி விட்டான்.
கீழே விழுந்த சுந்தரத்தை கண்களில் கண்ணீருடன் மீனாட்சி தாங்கி பிடித்தாள்.
“போதும்டா! இதோட நிப்பாட்டு. இதுக்கு மீறி அவர பேச உனக்கு அருகதை இல்லை. இனிமே உன் தயவுல நாங்க இருக்க மாட்டோம்.
எப்போ அவர் மேல கைய வச்சியோ போதும். உன்னை கை எடுத்து கும்பிடுறேன். அவரயா சுயநலம் பிடிச்சவருனு சொல்ற?” என்று மீனாட்சி மகன் பிரவினிடம் கையை கூப்பியபடி கூறினார்.
“அம்மா நீ பேசாம வீட்டுக்குள்ள போ. அந்தாளு வீட்ட விட்டு வெளிய போனா தான் கஷ்டம் தெரியும். அவரு வீட்ல பொம்பள மாதிரி உட்காந்து இருப்பாரு அவருக்கு நான் எல்லா பார்த்து வைக்கணும்.
ஒரு வேலைக்கு சேர்த்து விட்டா பார்த்தாரா? கண்ணு தெரியல, மூச்சு வாங்குது, பயமா இருக்குது இப்படி ஏதாவது பொய் சொல்லிகிட்டு வந்திருவாரு வெட்கமில்லாம!” என்று மீனாட்சியிடம் பிரவின் வாக்கு வாதம் செய்து கொண்டு இருந்தான்.
“வேணாம்பா! போதும்! சுயநலம் பிடிச்ச அப்பாவும் அம்மாவும் வீட்ட விட்டு வெளிய போயிருவோம்.
உனக்கு இனிமேல் எங்களால எந்த பிரச்னையும் வராது. நீ உன் பையன நல்லா பார்த்துக்கோ!” என்று மீனாட்சி கீழே விழுந்த தன் கணவன் சுந்தரத்தை தாங்கி பிடித்து கண்களில் கண்ணீருடன் அங்கிருந்து நகர்ந்தார்.
பிரவின் மனைவி பிரியா, மகன் விவேக் இருவரும் கண்களில் கண்ணீருடன் மீனாட்சி, சுந்தரத்தை “போக வேண்டாம் வீட்டுக்கு வாங்க!” என்று அழைத்தனர்.
“நீங்க முத உள்ளே போங்க!” என்று கத்தியபடி பிரவின் வீட்டுக்குள்ளே சென்றான்.
தெருவெங்கும் கூடிருந்த கூட்டம் அந்த நிமிடம் பிரவினை ஆச்சரியாமாக பார்த்தபடி “இவனா இப்படி!” என்று கூறியபடி கலைந்து சென்றது.
“எங்க போக போறாங்க. வந்திருவாங்க. அவர வச்சிக்கிட்டு அம்மாவால வெளியில இருக்க முடியாது. நைட் இல்ல காலைல வந்திருவாங்க!” என்று சலிப்புடன் பிரவின் கூறி பிரியாவை சமாதானபடுத்தியபடி வீட்டுக்குள் சென்றான்.
“நீங்க பண்ணது பெரிய தப்பு. உங்க அப்பாவ நீங்க வெளியில தள்ளினத, தெருவே பார்த்திட்டு இருக்கு.
உங்க அப்பாவ எதிர்த்து பேசுறீங்க. அவர அசிங்கப்படுத்தி விட்டீங்க. அவங்க ரெண்டு பெரும் வீட்டுக்குள் வர்ற வரைக்கும் நான் உன்கிட்ட பேச மாட்டேன்” என்று பிரியா கூறினாள்.
“நம்ம பையனுக்கு ஆப்ரேசன் பண்ண 5 லட்சம் தேவைன்னு உனக்கு தெரியும்ல. அதுக்கே நான் என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.
அதுல எங்க அப்பா கண் ஆப்ரேசன், மூட்டு ஆப்ரேசன் பண்ணனும்னு சொல்லிட்டே இருந்தா கோவம் வருமா? வராதா?” என்று பிரவின் கூற, அதனை பிரியா ஏற்று கொள்ளவில்லை.
சில மணி நேரத்திற்கு பிறகு கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு பிரவின் எழுந்து சென்று பார்த்தான். வெளியில் அவன் குடியிருக்கும் வீட்டு ஓனர் சதாசிவம்.
அப்பா சுந்தரமும் சதாசிவமும் சிறுவயது முதலே நண்பர்கள். சதாசிவம் வீட்டில் தான் பிரவினுக்கு ஞாபகம் தெரிந்த நாளிலிருந்து (கிட்ட தட்ட 30 வருசத்திற்கு மேலாக) குடியிருக்கின்றனர்.
சதாசிவத்தை பார்த்ததும் பிரவினுக்கு கோவம் வந்தது.
அவனின் மனதில் “’ச்சு இந்தாளு வந்து அப்பாவ பத்தி பெருமையா பேசி நான் செஞ்சது தப்புன்னு அட்வைஸ் பண்ணுவாரே!’ என தோன்றியது.
இருந்தாலும் அவரை “வாங்க மாமா!” என்று வீட்டுக்குள் அழைத்தான் பிரவின்.
“வாங்க அப்பா. வீட்டுக்கு வராத ஆள் வந்திருக்கீங்க!” என்று பிரியா சதாசிவத்தை உள்ளே அழைத்தாள்.
வீட்டுக்குள் மஞ்சள் பையுடன் வந்து அமர்ந்தார் சதாசிவம். முகத்தில் கவலை தெரிந்தது.
“என்ன பிரவின் என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு இப்படி ஒரு கோவம் உனக்குள்ள இருந்து வெளிய வந்திருக்கு.
அது கோவம் இல்ல அரக்கன். நீ இப்படி பண்ணுவனு நான் எதிர்பாக்கல. மனசு கவலையா போச்சுடா!” என்று கண்களில் கண்ணீருடன் சதாசிவம் பேசினார்.
பிரவின் அமைதியாக இருந்தான்.
“சொல்லுங்க அப்பா. நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம மாமாவ, அத்தைய இப்படி அசிங்கப்படுத்தி வீட்ட விட்டு அனுப்பிட்டார். அவங்க பாவம் எங்கள சும்மா விடுமா?
திடீர்னு இவருக்கு என்ன தான் ஆச்சுனு தெரியல. நீங்க சொன்ன மாதிரி ஏதோ அரக்கன் வந்துடான் போல. மாமா, அத்தை ரொம்ப மனசு ஒடஞ்சி போயிருப்பாங்க” என்று பிரியா கூற, அவளை முறைத்து பார்த்தான் பிரவின்.
“உள்ளே போ. போய் குடிக்க சதாவம் மாமாக்கு டீ கொண்டு வா!” என்று பிரவின் கண்களில் கட்டளை இட்டான்.
அங்கிருந்து சலிப்புடன் சமையலறையை நோக்கி நகர்ந்தாள் பிரியா.
“மாமா உங்களுக்கே தெரியும், என் பையன் விவேக் உடல் நிலை சரி இல்லாமல் இருக்கான்னு. அவனுக்கு ஆபரேசன் பண்ண டாக்டர் சொல்லி ஒரு வருசத்திற்கு மேல ஆச்சு. 5 லட்சம் மேல ஆகும்னு சொல்லிட்டாங்க.
வீட்ல என் ஒருத்தன் வருமானம் தான். அத வச்சிட்டு நான் எந்த பிரச்சனைய சமாளிக்க?
வாழ போற பையன காப்பாத்தவா? இல்ல அவர காப்பாத்தவா? அவரு கண்ணு சரியாய் தெரியல, மூட்டு வலினு அடுக்கிட்டே போறார்.
அம்மா இந்த மாதிரி எதுவும் சொன்னதில்லை. இருக்கிறத வச்சு சமாளிச்சு போகுதுல, அந்த மாதிரி என்ன இருக்கோ அத வச்சு சமாளிக்க வேண்டியது தான.
பார்வை சுத்தமா தெரியாம இருந்தா சரின்னு சொல்லலாம். பார்வை கொஞ்சம் மங்கலா தெரியுது.
காது நல்ல கேக்குதுல? டிவி பார்க்க போறாரு. அதான் அவருக்கு இப்போதைய வேலை!” என்று மன வலியுடன் பிரவின் சதாசிவத்திடம் கூறினான்.
அதனை அமைதியாக கேட்டு கொண்டு இருந்தார் சதாசிவம். பிரியா டீயை கொண்டு வைத்தாள்.
“இந்தாங்க மாமா டீய குடிங்க!” என்று பிரியா உபசரித்தாள்.
“இல்ல பிரவின், நீ என்ன சமாதானம் சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன். உங்க அப்பாவ சுயநலவாதின்னு சொன்ன, அவரு சுயநலமா நெனச்சு இருந்தா, நீ உயிரோட இருந்திருக்க மாட்ட.
உன் பையன் வயசு இருக்கிறப்போ நீ உடம்பு முடியாம படுத்த படுக்கையா இருந்த. என்ன பிரச்னைனு தெரியாம ஒவ்வொரு ஆஸ்பத்ரியா ஏறி ஏறி டாக்டர் எல்லாரும் கைய விரிசிட்டங்க.
உன்னைய காப்பாத்த சென்னைக்கு கூட்டிட்டு போய் அங்க ட்ரீட்மென்ட் பார்க்க சொன்னங்க. அப்போ உங்க அம்மா நகைய வித்து தான் சென்னைக்கு கூட்டிட்டு போனான் உங்க அப்பன்!” தொடர்ந்து பேசினார் சதாசிவம்.
“சென்னைக்கு போய் ஆஸ்பத்திரியில சேர்த்தான். அப்போவே ஆப்ரேசன் பண்ண லட்ச கணக்குல கேட்டாங்க,
ஆப்ரேசன் பண்ண ரெடி பண்ணிட்டு, உங்க அம்மாவ மட்டும் சென்னைல தங்க வச்சிட்டு, மதுரைக்கு வந்து இங்க இருந்த சொந்த வீட்ட அவசரமாக வித்துட்டு, அந்த காசு பத்தல, தான் சொந்தமா நடத்திட்டு இருந்த பட்டறைய வித்துட்டு, உனக்கு ஆப்ரேசன் பண்ண வச்சு உன்ன காப்பாத்தி கூட்டி வந்தான்!
ஊர்ல எல்லாரும் உங்க அப்பன, அம்மாவ திட்டுனாங்க. இருக்கிற பணத்தை எல்லாம் இப்படி செலவு செஞ்சு அந்த பையன காப்பாத்திடுவானா? அப்படின்னு!
உங்க அப்பன்ட அந்த சமயம் எதுவும் இல்ல.
பிள்ள பெத்துகிற வயசு தான, இன்னொரு பிள்ளையக்கூட பெத்துக்க வேண்டியது தான, இப்படி இருக்கிற எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கதியா வந்து நிக்கிறீங்களேன்னு ஊரெல்லாம் பேச்சு.
அப்போ உங்க அப்பன் சொன்னான்.
“என் பையன விட இந்த சொத்து ஒன்னும் முக்கியம் இல்ல. என்னை நம்பி இந்த உலகத்திற்கு வந்தவன் அவன். அவனை ஒரு போதும் கைவிட மாட்டேன்.
இனி எனக்கு இவன் ஒரு பையன் போதும். அவனுக்காக வாழ்ந்து காலத்தை கழிச்சிருவேன்னு சொன்னவன் உங்க அப்பன் சுந்தரம்!” என்று அழுத்தமான மனதுடன், தான் கொண்டு வந்த மஞ்ச பையிலிருந்து பேப்பர் வெளியில் எடுத்தார் சதாசிவம்.
“இப்போ நீ குடியிருக்கிற வீட்ட என் பேர்ல வித்திட்டு தான் உன்ன காப்பாத்தினான். இதோ பாரு பத்திரம்!“ என்று வீட்டு பத்திரத்தை அவன் முன் வைத்தார் சதாசிவம்.
“உன்னை காப்பதிட்டு, அப்புறமா அவன் வாழ்க்கைல எதுவும் சிறப்பா நடக்கல; தொழில் முடக்கம்; கஷ்டம் மட்டும் தான் இதுவரை பார்த்திட்டு இருந்தான்.
ஆனா எவ்ளோ கஷ்டத்திலும் உன் மருத்துவ செலவ தொடர்ந்து பார்த்து உன்னை ஒரு ஆளாக்கி விட்ருக்கான்.
அந்த விசயத்த உன் அப்பனும் அம்மாவும் உன்னிடம் சொல்லிருக்க மாட்டங்க. சொன்னா மனசு கஷ்டபடுவன்னு சொல்ல மாட்டாங்க.
அவ்ளோ சுயநலம் அவங்களுக்கு. உன்னைய காப்பற்றமா இருந்திருந்தா இந்த வீட்டுக்கு சொந்தகாரன் அவன்தான். நல்ல வசதியோட இருந்திருப்பான்!”
“அப்போ சுயநலம் பார்க்கல உன் அப்பன். சுயநலம் பார்த்திருந்தா இப்போ நீ இல்லை.
நல்ல வசதியோட இருந்திருப்பான். காசுக்கு யார் கையையும் ஏந்தி நின்றுக்க மாட்டான். உனக்காக எல்லாத்தையும் எழந்துட்டு நிர்க்கதியா இருக்கான்.
நல்ல வசதி இல்லனாலும் மரியாதையா இருந்தவன் உங்க அப்பன் சுந்தரம். என்ன பிரச்னை வந்திருந்தாலும் நீ உன் அப்பன நீ பேசிய பேச்சு மன்னிக்க மாட்டேன்.
உன் அப்பன் மேல மரியாதைக்கு தான் உன்னை வீட காலி பண்ண சொல்லாம இருக்கேன். இல்லனா காலி பண்ண சொல்லிருப்பேன். “
“என்னடா பொல்லாத பண கஷ்டம் உனக்கு. அவன் உன்ன வளர்த்து ஒரு ஆளாக்கிருக்கான்.
அத விட பணம் பெருசா. அப்பா கைய பிடிச்சு வளர்ந்துட்டு, வளர்ந்ததுக்கு பிறகு அவர தள்ளி விட்றதா? என்னடா நியாயம்!
நீ உன் அப்பனுக்கு பண்றத தான் நாளைக்கு உன் பையன் உனக்கு பண்ணுவான். எந்த அப்பாக்களும் சுயநலம் பார்க்கிறது இல்ல.
தன் புள்ள, தன் குடும்பம்னு தான் அவங்களால முடிஞ்ச வரை தனக்காக இல்லாம தன் குடும்பத்திற்காக ஓடுறாங்க“ என்று சதாசிவம் கூறினார்.
பிரவின் கண்களில் இருந்து கண்ணீர் ‘மளமள’வென கொட்ட ஆரம்பித்தது. தவறை உணர்ந்தான்.
சுந்தரம் மீனாட்சி இரு தெய்வங்களைத் தேடி வீட்டிலிருந்து நகர்ந்தான் பிரவின். மூவராகத் தான் வீட்டிற்கு வருவான்.
தாயும் தந்தையும் ஒரு போதும் சுயநலம் பார்க்க மாட்டார்கள்.
அவரின் கையை பிடித்து வளரும் நாம் அவர் நம் கையை பிடிக்கும் சூழல் வரும்போது கை கொடுப்போம்; ஆதரிப்போம்.
இது நன்றி கடன் அல்ல; நமது கடமை.
மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104