கண் கலங்குகிறது! என் கண் முன் நிற்கும்
உன்னை இழந்து விட்டேனோ என்று…
எம்மொழியில் உன்னிடம் மன்னிப்பு கேட்பேன்
எனத் தெரியவில்லை
உன்னோடு இருந்தவரை உணராத பாசத்தை
இன்று அனுதினமும் உணருகிறேன்
மாறாத உன் அன்பை மறந்து விட்டேன்
எனக்காக நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
எனக் கோபம் கொண்டேன்
ஆனால் நீ ஓடியதே என் ஆசையை
நிறைவேற்றத்தான் என்பதை உணராமல்…
உனது சிறு சிறு ஆசைகளைக்கூட
எனக்காக தியாகம் செய்தாயே
நான் யார் உனக்கு?
எதற்காக இவ்வளவு பொறுமை?
நான் அனைவருக்கும் அழகான பூவாக
தெரிய வேண்டும் என எண்ணி
நீ யாருக்கும் தெரியாத
வேராகவே புதைந்து விட்டாயே…
நீ எனதருகினில் இருந்தும் நெடுந்தூரத்தை
நம் இடையினில் உணருகிறேன்.
ஏனோ இந்த சொல்ல முடியாத சோகம்…
காலங்கள் பல கடந்து
அனுபவங்கள் பல அறிந்து கொண்டேன்
மனிதர்கள் பல விதம் எனப் புரிந்து கொண்டேன்
ஆனால் உன்னை போல் ஒருவரை இன்னும் காணவில்லை…
நீ யார் ?
தொடுதிரையில் உலகம் தொலைந்து கொண்டிருக்கும்
காலகட்டத்தில், வந்த அழைப்பை எடுக்கத் தெரியவில்லை
என நீ கூறுகையில் மரணக் குழியினில்
புதையுண்ட தருணம் போல் உணருகிறேன்…
உன்னைப் பிடிக்காது என்று வாய் வார்த்தையில்
எளிதாகக் கூறி விடுகிறார்கள்
மனம் ஏனோ அவர்களை வெறுக்க மறுக்கிறது
உணர வைக்காதது உன் தவறா
உணராமல் போனது தான் என் தவறா
காரணம் யார் இயற்கையா? விதியா?
மிதிவண்டியில் உன்னோடு வர போட்டி போட்ட நான்
வாழ்நாள் முழுவதும் உன்னோடு வர வேண்டும்
என ஏன் எண்ண மறந்தேன்?
எவ்வளவு ஆயிரம் சம்பாதித்தாலும்
வேலை முடித்து வரும் உன் கூடையினில்
இருக்கும் திண்பண்டத்திற்கு ஈடாகுமா?
நான் வாங்கும் சிறு பரிசினைக் கூட
மார்தட்டி ஊரேல்லாம் பெருமை பேசினாய்
அதன் பின் இருக்கும் உன் தியாகம் தெரியவில்லை
அன்று உன்னை வெறுக்க இருந்த காரணங்கள்
இன்றளவும் இருக்கின்றன
மனம் ஏனோ அதை மறந்து உன்
மார் தவழும் குழந்தையாக வாழ நினைக்கிறது
எப்போதும் என் கண்ணீரைத்
துடைக்க வரும் முதல் கரம் நீதான்…
அப்படி நான் உனக்கு என்ன செய்தேன்
என எனக்குத் தெரியவில்லை…
அப்பா என்னும் இடத்தை அவரைத் தவிர
யாராலும் பூர்த்தி செய்திட முடியாது.
அவரோடு இருந்த நாட்களை எண்ணுகையில்
சொக்கம் அது போலத்தான் இருக்கும் என உணர்கிறேன்…
மு.சீத்தாலட்சுமி