அப்பா – சிறுகதை

அப்பா

“சரவணா, மகாளய அமாவாசையான நாளைக்கு, அப்பாவுக்கு பித்ரு வழிபாடு செய்யலாமான்னு, ஒரு எட்டு போய் ஐயர பாத்து கேட்டுட்டு வந்திருரேன்” என்றாள் அத்தை மங்கம்மா.

“ம்..ம்… பாப்போம்” என்றபடி அம்மாவையும், அக்காவையும் பார்த்தான் சரவணன் விரக்தியாக.

அம்மாவும் அக்காவும் ஏதும் பேசாமல் சரவணனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை மாட்டிக் கொண்டு “வரேன்மா…” என்றவாறு வெளியே கிளம்பினான்.

 

விறுவிறுவென்று ஐயரின் வீட்டிற்கு சென்று வாசலில் இருந்து “சாமி, சாமி” என்று சத்தமிட்டான்.

“யாரு?” என்றபடி சதாசிவம் ஐயர் வெளியே வந்தார்.

சரவணனைப் பார்த்ததும் “சிதம்பரத்தின் பிள்ளையா?… வாடா அம்பி என்ன விசயம்?” என்றார்.

“நாளைக்கு மகாள அமாவாசை வருதுல.. அதான், அப்பாவுக்கு பித்ரு வழிபாடு செய்யலாமான்னு கேட்டுப் போக வந்தேன்.”

“சிதம்பரம் இறந்து எவ்வளவு நாள் ஆகுது?”

“நாளை வந்தா, நாற்பத்தி ஐஞ்சாவது நாள்.”

“முப்பது கழிஞ்சிடுதில்லையோ, தாராளமா செய்யலாம். காலம்பற ஆத்தங்கரையில பித்ரு தானம் செஞ்சிட்டு, சிவன் கோவிலுக்குப் போயி மோட்ச தீபம் போட்டுரு. அப்புறம் உங்க வழக்கப்படி விரதம் இருந்து, மதியானம் காக்கைக்கு படையலிட்டு, விரதத்தை முடிச்சுக்கோ. சிதம்பரம் எவ்வளவு நல்ல மனுசன். அவருக்குப் போயி இப்படி ஒரு முடிவு.” என்றார் சதாசிவம் ஐயர்.

பதிலேதும் கூறாமல், கனத்த மனதுடன் அப்பாவைப் பற்றி எண்ணியடியே வீட்டிற்கு வந்து சோபாவில் அமர்ந்து பர்ஸை திறந்தான். அப்பா புகைப்படத்துக்குள் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

‘கொஞ்சம் கவனமா நடந்து வந்திருந்தால், இப்ப எங்கூட நேர்ல பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பீங்களே. அந்த லாரிக்காரனுக்குதான் கண்ணு தெரியாம உங்க மேல ஏத்திட்டானா?’ என்று மனதிற்குள் எண்ணிய போது, கண்களில் அவனையும் அறியாமல் நீர் அருவியாகக் கொட்டியது.

 

சரவணனின் அப்பா சிதம்பரம் அன்பான மனிதர். மளிகைக் கடையில் வேலை பார்த்தாலும் நேர்மையுடன் வாழ வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்.

தன்னுடைய மகனும், மகளும் வல்லவனாகவும், நல்லவனாகவும் வாழக் கற்றுக் கொடுத்தவர். வருமானம் குறைவாக இருந்த போதிலும் சரவணனைக் கல்லூரியில் படிக்க வைத்தார்.

சரவணனும் பொறுப்பாக நடந்து கல்லூரிப் படிப்பை முடித்து, வங்கி ஒன்றில் தேர்வாகி வேலைக்குச் சேரும் வேளையில்தான் எதிர்பாராத லாரி விபத்தில் சிதம்பரம் காலமானார்.

‘வேலைக்குப் போயி முதல் மாதச் சம்பளத்த உங்கிட்ட குடுத்து ஆசீர்வாதம் வாங்கனும்முன்னு நினைச்சேன். எனக்கு கைநிறைய சம்பளம் கிடைக்கப் போறதால, இரண்டு மாசத்துல மளிகைக் கடை வேலையை விட்டுட்டு நிம்மதியா இருங்கப்பான்னு சொல்லன்னு இருந்தனே’ என்று சரணவன் மனதிற்குள் மருவினான்.

“என்னடா சரவணா, அழுதுகிட்டு இருக்க, ஐயர பாத்து விவரம் கேட்டியா?” என்றாள் மங்கம்மா.

“ம்..ம்..” என்றான் ஒற்றையாக.

“அழாதேய்யா, சிதம்பரம் நம்மள சாமியா இருந்து காப்பாத்துவான்.” என்றாள்.

கண்களைத் துடைத்துக் கொண்டே சதாசிவம் ஐயர் கூறியதை மங்கம்மாவிடம் தெரிவித்தான்.

“சரிய்யா, ஐயரு சொன்ன மாதிரியே செஞ்சிருவோம்.” என்று சொல்லிவிட்டு அடுப்பறையினுள் புகுந்தாள்.

 

மறுநாள் காலையில் விடியற்காலையிலேயே ஆற்றங்கரைக்கு சென்று பித்ரு தானம் முடிச்சிட்டு, சிவன் கோவிலில் மோட்ச தீபம் போட்டு விட்டு வீட்டிற்கு வந்தான்.

மதியம் பன்னிரெண்டு மணியாகையில் அப்பாவின் படத்திற்கு மாலையிட்டு, உணவுப் பதார்த்தங்களை படையலிட்டான். அம்மா உணவினை இலையில் எடுத்து வந்து சரவணனிடம் கொடுத்து மாடியில் காகத்திற்கு வைக்கச் சொன்னாள்.

காகத்திற்கு உணவிட்டுவிட்டு, கலங்கிய மனதுடன் அப்பாவின் படத்திற்கு தீபாராதனை காட்டினான். வழிபாடு முடிந்ததும் அம்மா சரவணனை சாப்பிடச் சொன்னாள்.

சரணவன் அசையாது அப்பாவின் புகைப்படத்திற்கு முன்னால் அமர்ந்து அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அம்மாவும், அக்காவும் சரவணனுக்கு இடபுறத்தில் இரண்டு அடி தள்ளியும், அத்தை வலதுபுறத்தில் ஒரு அடி தள்ளியும் அமர்ந்தனர். இரண்டு நிமிடங்கள் கரைந்தது.

 

ஒரு கருப்பு கட்டெறும்பு சரவணனின் விரலில் ஏறியது. உணர்ச்சி வந்தவனாய் எறும்பை கவனித்தான். அதற்குள் எறும்பு அவனுடைய முழங்காலை நோக்கி வரத் துவங்கியது. முழங்காலில் ஏறியதும் தலைத் தூக்கி சரவணனை பார்த்துவிட்டு இறங்கி அம்மாவை நோக்கி நகர்ந்தது.

அம்மாவின் புடவையில் ஊறி பின்னர் கை வரை சென்று முகர்ந்துவிட்டு, இறங்கி அக்காவின் மேல் ஏறி தலை உயர்த்தி பார்த்துவிட்டு இறங்கியது.

பின்னர் சரவணனைக் கடந்து சென்று, அத்தையின் காலை முகர்ந்துவிட்டு தலையை மேலே தூக்கிப் பார்த்துவிட்டு, நேராக படையலை நோக்கி போனது.

படையலில் இருந்த இனிப்பை கடித்து வாயில் கவ்வியபடி நிலைவாயில் படியை நோக்கி நகர்ந்தது.

அனைவரும் எறும்பையே பார்த்துக் கொண்டிருந்தனர். சரவணன் எறும்பு வெளியே செல்வதைக் கண்டதும் “அப்பா, அப்பா” என்று எறும்பைப் பார்த்து கத்தினான்.

“பாத்தியா பார்வதி, சிதம்பரம்தான் எறும்பா வந்து நம்ம மேல ஏறி நலம் விசாரிச்சிட்டு, அவனுக்கு பிடிச்ச இனிப்ப எடுத்திட்டுப் போறான்…” என்றாள் அத்தை.

அம்மா ஏதும் கூறாமல் எறும்பையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

வ.முனீஸ்வரன்

 

Comments

“அப்பா – சிறுகதை” அதற்கு 3 மறுமொழிகள்

  1. பாரதிசந்திரன்

    கதை கன‌த்த சோகத்தை அள்ளி அப்பியது.
    இழப்பு மிக மோசமான வலியை தரக்கூடியது.
    கண்முன் காட்சி அப்படியே படமாகத் தெரிந்தது.
    மறுபிறப்பு, படையல், முன்னோர் வழிபாடு, நம்பிக்கை இவை அனைத்தும் ஒரு சேர கதையில் வெளிப்பட்டுள்ளன.
    பண்பாட்டு மானிடவியல் கூறுகள் வெளிப்பட்டுள்ளன.

  2. DHANANCHEZHIYAN M

    மறைந்த எல்லோரும் இந்த மண்ணில் ஏதோ ஒரு ரூபத்தில் நம்ம எண்ணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    எண்ணங்களின் பிரதிபலிப்பே நாம் காணும் வடிவங்களாக மாறுகின்றன. அருமையான சிறுகதை எழுத்தாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    நன்றி

  3. Premalatha

    Emotional story