அமர்நீதி நாயனார் சிவனடியாரின் கோவணம் இருந்த தராசுத் தட்டை சமநிலைப்படுத்தத் தானே துலாக்கோலில் ஏறிய வணிகர்.
சிவனும், சிவனடியார்களும் சமமான நிறை உடையவர்கள் என்பதை அமர்நீதியாரின் கதை மூலம் தெரிந்து கொள்ளலாம். விரிவாகத் தெரிந்து கொள்ள கதையைத் தொடருங்கள்.
அமர்நீதி நாயனார் பண்டைய சோழ நாட்டில் பழையாறை என்னும் ஊரில் பிறந்தார். பழையாறை இன்றைக்கு கும்பகோணத்திலிருந்து 6 கிமீ தூரத்தில் உள்ள ஊர். பழையாறை சோழ பேரரசின் பழைய தலைநகராக விளங்கிய பெருமை உடையது.
அமர்நீதியார் ஆடை, பொன், இரத்தினங்கள் உள்ளிட்ட பொருட்களை வாணிபம் செய்து பெரும் செல்வந்தராக விளங்கினார். அவருக்கு சிவனாரிடம் பேரன்பு இருந்தது. ஆதலால் அவர் சிவனடியவர்களுக்கு உணவும், உடையும் அளித்து தொண்டு செய்து வந்தார்.
பழையாறைக்கு அருகில் உள்ள திருநல்லூர் என்னும் ஊரில் உள்ள சிவலாயத்திற்கு சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஆதலால் அவ்வூரில் திருமடம் ஒன்றினை நிறுவி சிவனடியார்களுக்கு உணவினையும், உடையையும் அளிக்கும் திருத்தொண்டை சிறப்பாக செய்து வந்தார்.
ஒரு திருவிழா சமயத்தில் அமர்நீதியார் தம்முடைய குடும்பத்தோடு மடத்தில் தங்கியிருந்து, சிவனடியார்களுக்கு தொண்டு செய்து கொண்டிருந்தார்.
அப்போது அமர்நீதியாரின் திருத்தொண்டை உலகறியச் செய்ய சிவனார் விருப்பம் கொண்டார்.
ஆதலால் இளம் சிவனடியாராக திருநல்லூர் மடத்தை அடைந்தார். கையில் தண்டு ஒன்றினைக் கொண்டு அத்தண்டில் இரு கோவணங்களைக் கட்டி இருந்தார்.
சிவனடியாரைக் கண்டதும் “தாங்கள் முதன்முறையாக இம்மடத்திற்கு வருகைத் தந்து இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.” அமர்நீதியார் இன்முகத்துடன் வரவேற்றார்.
“தாங்கள் சிவனடியார்களுக்கு உணவு, உடை தந்து தொண்டு புரிகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். ஆதலால் நேரில் தங்களைக் காண வந்தேன்.”
“தகுந்தவர்களைக் கொண்டு அமுது செய்யப்பட்டிருக்கிறது. ஆதலால் தாங்கள் திருவமுது உண்ண வாருங்கள்” என்றார் அமர்நீதியார்.
“நான் காவிரியில் நீராடிவிட்டு அமுதுண்ண வருகிறேன். வெளியில் மழைவரும் போல் இருக்கிறது. ஆதலால் என்னிடம் உள்ள ஒரு கோவணத்தை உம்மிடம் தருகிறேன்.
நான் குளித்துவிட்டு எனது கோலில் உள்ள கோவணத்தை அணிந்து கொள்வேன். திரும்பும்வழியில் மழையில் நனைய நேர்ந்தால் உம்மிடம் கொடுத்த கோவணத்தை வாங்கிக் கொள்கிறேன்.
மேலும் இது உலகத்தில் எதற்கும் ஈடு இணையில்லாதது. ஆதலால் இதனை மிகவும் பத்திரமாக வைத்திருங்கள்.” என்று கூறி கோவணத்தை
அமர்நீதியாரிடம் கொடுத்துவிட்டு நீராட சிவனடியார் சென்றார்.
அமர்நீதியாரும் சிவனடியாரின் கோணவத்தை மடத்தில் பாதுகாப்பான இடத்தில் பத்திரப்படுத்தினார். சிறிது நேரத்தில் சிவனருளால் கோவணம் வைத்திருந்த இடத்தில் இருந்து மறைந்து விட்டது.
சற்று நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. மழையில் நனைந்தபடி சிவனடியார் திருமடத்திற்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் அமர்நீதியார் துடைப்பதற்கு துணியைக் கொடுத்து அமுதுண்ண அழைத்தார்.
“அமுதுண்ணுவது இருக்கட்டும். மழையில் நான் முழுவதுமாக நனைந்து விட்டேன். ஆதலால் தங்களிடம் கொடுத்த கோவணத்தை முதலில் தாருங்கள்.” என்றார் சிவனடியார்.
அமர்நீதியாரும் “இதோ எடுத்து வருகிறேன்” என்றபடி கோவணத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்திற்கு விரைந்து சென்றார். ஆனால் அவ்விடத்தில் கோணவத்தைக் காணவில்லை.
மடம் முழுவதும் நன்றாக தேடிப் பார்த்தார். எங்கும் கோவணத்தைக் காணவில்லை. வெறும் கையுடன் சினடியார் இருந்த இடத்திற்குத் திரும்பினார்.
“அடிகளே, தாங்கள் அளித்த கோவணத்தை பத்திரமாக ஓரிடத்தில் வைத்திருந்தேன். ஆனால் தற்போது அவ்விடத்தில் கோவணத்தைக் காணவில்லை.
மேலும் திருமடம் முழுவதும் தேடியும் எங்கும் தங்களின் கோவணம் கிடைக்கவில்லை. ஆதலால் தாங்கள் இக்கோவணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.” என்றபடி அடியவர்களுக்கு தானம் கொடுப்பதற்கு வைத்திருந்த கோவணம் ஒன்றினைக் கொடுத்தார்.
“நான் பெருமை மிக்கது என்று சொல்லியதால் நீரே அதனை மறைத்து வைத்துவிட்டு அதற்குப் பதிலாக வேறொன்றைத் தருகிறேன் என்கிறீர். இதில் அடியார்களுக்கு கோவணத் தானம் அளிக்கிறீர்கள் என்று நாடகம் வேறு போடுகிறீர்” என்று கடுமையாகப் பேசினார்.
அதனைக் கேட்டதும் அமர்நீதி நாயனார் “ஐயா, உடல் நடுக்கத்தைப் போக்கும் பொருட்டாவது இந்த கோவணத்தை வாங்கி அணிந்து கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் தண்டிலிருக்கும் ஈரகோவணத்திற்கு ஈடாக புதுக்கோவணங்களைத் தருகிறேன்” என்று மன்றாடினார்.
“சரி, துலாக்கோலைக் (தராசு) கொண்டு எனது கோவணத்திற்கு ஈடான புதுகோவணத்தை அளந்து தாரும்.” என்றார் சிவனடியார்.
துலாக்கோலைக் கொண்டு வந்த அமர்நீதியார் ஒரு தட்டில் அடியாரின் கோவணத்தை வைத்தார். மற்றொரு தட்டில் தன் கையிலிருந்த கோவணத்தை வைத்தார். அடியாரின் கோவணம் இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது.
உடனே அமர்நீதியார் அடியவர்களுக்கு தானமளிக்க வைத்திருந்த கோவணங்களை எல்லாம் வைத்தார். அப்போதும் அடியவரின் கோவணத் தட்டு தாழ்ந்தே இருந்தது.
அமர்நீதியார் தன்னிடமிருந்து பட்டாடைகள், பொன், நவரத்தினம் என எல்லாப் பொருட்களையும் தட்டில் வைத்தார். அப்போதும் அடியவரின் கோவணத் தட்டு தாழ்ந்தே இருந்தது.
“ஐயா, நல்வழியில் தேடிய பொருட்களை எல்லாம் துலாத்தட்டில் வைத்தும் சமமாகவில்லை.
ஆதலால் நான், என்னுடைய மனைவி, குழந்தை என எல்லோரும் துலாக்கோலில் அமரப் போகிறோம். தாங்கள் எங்களை அடிமைகளாக ஏற்றுக் கொள்ளுங்கள்.” என்றார்.
‘நான் இதுவரை செய்த அடியார் தொண்டு குற்றமற்றது என்றால் தராசு சமநிலை பெறட்டும்’ என்று எண்ணியவாறு மனத்திற்குள் ஐந்தெழுத்தை ஓதிக் கொண்டு துலாக்கோலில் ஏறினார். துலாக்கோல் சமநிலை அடைந்தது.
அவ்விடத்தில் இருந்த வேதியர் மறைந்தார். இடப வாகனத்தில் அம்மையப்பர் காட்சி தந்தனர். அம்மையப்பர் இருவரையும் கண்ட அமர்நீதி நாயனார் மெய் சிலிர்த்து இறைவனைப் போற்றி வழிபட்டார்.
இறையருளால் துலாக்கோல் புட்பக விமானமாக மாறி அமர்நீதியார் குடும்பத்தினரோடு சிவலோகத்தை அடைந்தது. சிவனடியில் நீங்கா இன்புற்றிருந்தார் அமர்நீதி நாயனார்.
அமர்நீதி நாயனார் குருபூஜை ஆனி மாதம் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
சிவனடியார்களிடம் மாறாத பக்தி கொண்ட இவரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன் என்று புகழ்கிறார்.