அமில மழை என்பது அமிலத் தன்மை மிகுந்த மழைப்பொழிவைக் குறிக்கும். காற்றின் மாசுபடுத்திகளான கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகளே அமில மழையினை உண்டாகின்றன.
பொதுவாக மழைநீரானது காரஅமில நிலையைக் கொண்டிருக்கும். அமில மழையானது வீரியமிக்க அமிலத் தன்மையைப் பெற்றிருக்கும்.
இன்றைய சுற்றுசூழலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் அமில மழை முக்கியமானது. அமில மழை என்பது மழையாகவோ, பனியாகவோ, பனிபுகையாவோ பெய்யலாம்.
எரிமலை குமுறலின்போது இயற்கையாகவே அமில மழைப்பொழிவு ஏற்படலாம். மனிதனின் செயல்பாடுகள் மூலம் ஏற்படும் காற்று மாசுபாட்டின் காரணமாகவும் அமில மழைப்பொழிவு நிகழுகிறது.
அமில மழைப்பொழிவின் காரணமாக சுற்றுசூழலில் உள்ள உயிரினங்கள் மிகவும் பாதிப்படைகின்றன. கட்டங்களில் அரிப்பு ஏற்படுகிறது.
நீர்நிலைகள் மற்றும் நிலத்தில் அமில படிவு ஏற்படுகிறது. வனப்பகுதிகள், மரங்கள், மலைபகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதோடு உயிர் சமநிலையிலும் பாதிப்பினை உண்டாக்குகிறது.
மழை நீரில் பி.எச்சின் மதிப்பு 5.3 குறையும் போது அது அமிலமழை என்றழைக்கப்படுகிறது.
அமிலப் படிவானது கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, சுவீடன், நார்வே, ஜெர்மனி, தென் அமெரிக்கா, தெற்காசியா, இலங்கை, தென் இந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
அமில மழையின் வகைகள்
அமில மழைப்பொழிவானது ஈரப்பதம் உள்ள பொழிவு, உலர்ந்த பொழிவு என இரு வகைளில் நிகழ்கிறது.
அமில மழையானது நிலப்பரப்பினை அடைவதற்கு முன் காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் கலந்து ஈரம் படிவமுடைய மாசுபடுத்தியாகவும், ஈரப்பதத்துடன் கலக்காமல் இருந்தால் உலர்ந்த படிவமுடைய மாசுபடுத்தியாகவும் இருக்கும்.
ஈரப்பத அமில மழைப் பொழிவு
ஈரப்பத அமில மழைப் பொழிவானது மழையாகவோ, பனியாகவோ, பனிப்புகையாகவோ நிகழ்கிறது.
ஈரப்பதமான இடத்தில் மாசுபடுத்திகள் உள்ள காற்றானது வீசும் போது மாசுபடுத்திகள் ஈரப்பதத்துடன் இணைந்து அமிலமாக மாறி ஈரப்பத அமில மழையாக அவ்விடத்தில் பொழிகிறது.
இந்நிகழ்வு நிலத்தில் மற்றும் நீரில் வாழும் விலங்குகளை அதிகமாக பாதிப்படையச் செய்கிறது.
உலர்ந்த அமில மழைப் பொழிவு
உலர்ந்த இடத்தில் மாசுபடுத்திகள் உள்ள காற்றானது வீசும் போது அவ்விடத்தில் உள்ள தூசு மற்றும் புகையுடன் இணைந்து நிலத்தில் உலர்ந்த நிலையில் அமிலப் படிவங்களை ஏற்படுத்துகிறது.இதுவே உலர்ந்த அமில மழைப் பொழிவு ஆகும்.
மழை பெய்யும்போது அமிலப் படிவுகள் மழைநீரில் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. காற்றில் உள்ள அமில மாசுபடுத்திகளின் 50 சதவீதமானது அமிலப் படிவங்களாக பூமியை வந்தடைகின்றன.
அமில மழை கண்டுபிடிப்பு
1800-ல் நடைபெற்ற தொழிற் புரட்சியின் போது அமில மழையானது முதலில் கண்டறியப்பட்டது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் ராபர்ட் அங்கஸ் ஸ்மித் என்பவர் 1852-ல் காற்றிலுள்ள மாசுபடுத்திகளே அமில மழையைத் தோற்றுவிக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்.
1960-ல் அமில மழைப் பொழிவானது மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.
அமில மழைப்பொழிவினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள் பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை 1972-ல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அமில மழை என்ற வார்த்தை முதலில் பயன்படுத்தப்பட்டது.
அமில மழைப் பொழிவிற்கான காரணங்கள்
அமில மழைப்பொழிவிற்கான காரணங்களை இயற்கை மூலங்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
இயற்கை மூலங்கள்
எரிமலை வெடிப்பே இயற்கையில் அமில மழைப் பொழிவிற்கு முக்கிய காரணமாகும். எரிமலை வெடிப்பின்போது அமில மழைப்பொழிவிற்கு காரணமான மாசுபடுத்திகள் அதிகளவு வெளியிடப்படுகிறது.
இம்மாசுபடுத்திகள் மழையாகவோ, பனியாகவோ, பனிபுகையாவோ அமில மழைப்பொழிவினை ஏற்படுத்துகின்றன.
மின்னல் மற்றும் காட்டுத்தீ மூலம் தாவரங்கள் அழிப்பு மற்றும் உயிரியல் செயல்முறைகளை அழித்தல் ஆகியவையும் அமில மழைப் பொழிவிற்கான இயற்கை மூலங்கள் ஆகும்.
மின்னல்கள் ஏற்படும்போது நைட்ரஜன் ஆக்ஸைடுகள் இயற்கையில் அதிகளவு உருவாகி அமில மழையைத் தோற்றுவிக்கின்றன.
செயற்கை மூலங்கள்
தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், வாகனங்கள் ஆகியவையே அமில மழைக்குக் காரணமான கந்த-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஜைடுகளை அதிக அளவு வெளியேற்றுகின்றன.
நிலக்கரி எரிப்பினால் மின்சாரம் தயார் செய்யப்படும் அனல்மின் நிலையங்களில் இருந்துதான் அதிகளவு அமில மழைக்கு காரணமான காற்று மாசுபடுத்திகள் வெளியிடப்படுகின்றன.
தொழிற்சாலைகளும், வாகனங்களும் அமில மழைக்கான மாசுபடுத்திகளை தினந்தோறும் காற்றில் கலக்கின்றன.
கந்த-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஜைடுகள் காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் இணைந்து கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம், அமோனியம் நைட்ரேட் போன்ற அமிலக் கூறுகளை உண்டாக்குகின்றன.
உலர்ந்த காலநிலையில் கந்த-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஜைடுகள் அமிலப் படிவங்களாக நிலப்பரப்பில் சேகரமாகின்றன.
இந்த அமிலப் படிவங்கள் மழை நீரில் கரைந்து நிலத்தின் மேல் மற்றும் உட்பரப்புகளை பாதிப்பதோடு, கடல்நீரினையும் பாதிக்கின்றன.
அமில மழைப் பொழிவின் விளைவுகள்
அமில மழைப்பொழிவு உயிரினங்கள், காடுகள், ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்பரப்புக்கள், நிலப்பரப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பெரிதும் பாதிப்படையச் செய்கிறது.
நீர்நிலைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களில் ஏற்படும் பாதிப்பு
அமில மழைப்பொழிவானது நேரடியாகவோ அல்லது காடுகள், வயல்வெளிகள், சாலைகள் ஆகியவற்றில் விழுந்து ஆறு குளம், கண்மாய், கடல் ஆகியவற்றில் சேகரமாகிறது.
இவ்வாறு சேகரமாகும் மழைப்பொழிவால் நீர்நிலைகளின் பி.எச் மதிப்பு குறையத் தொடங்குகிறது. குறைந்த பி.எச் மதிப்பையும், அதிகளவு அலுமினியத்தையும் அமில நீர் கொண்டுள்ளது.
இதனால் நீர்வாழ் உயிரினங்களில் பெரும் பாதிப்பை இம்மழைப் பொழிவு ஏற்படுத்துகிறது.
நீர் வாழ் விலங்குகள் மற்றும் தாவரங்கள் உயிர் வாழ நீரின் பி.எச் மதிப்பு 4.8 கீழ் செல்லக் கூடாது.
நீரின் பி.எச் மதிப்பு குறையும்போது மீன் முட்டைகள் பொரிப்பதில்லை. மேலும் மீன்களும் உயிரோடு இருப்பதில்லை.
இதனால் நீர்நிலைகளின் உயிர்சூழ்நிலையில் பெரும் பாதிப்பு உண்டாகிறது.
மண்ணில் ஏற்படும் பாதிப்பு
அமில மழைப்பொழிவானது மண்ணின் வேதியியல் மற்றும் உயிரியல் தன்மையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மண்ணின் உயிரியல் தன்மைக்கு மண்ணானது குறிப்பிட்ட பி.எச் மதிப்பினைக் கொண்டிருக்க வேண்டும். அமில மழைப்பொழிவால் மண்ணின் பி.எச் மதிப்பு குறைகிறது.
இதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு மண்ணின் உயிரியல் தன்மை மாற்றம் அடைகிறது.
மேலும் இம்மழைப்பொழிவால் மண்ணில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் பிரித்தெடுக்கப்படுகிறது.
இதனால் மண்ணின் வேதியியல் பண்புகளில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.
தாவரங்கள் மற்றும் காடுகளில் ஏற்படும் பாதிப்பு
உயர்ந்த பகுதிகளில் உள்ள காடுகள் அமில மழைப்பொழிவால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
மண்ணில் உள்ள கால்சியம் நீக்கப்படுவதால் மரங்கள் இலைகளை உதிர்த்து குளிரினைத் தாங்கும் தன்மையினை இழந்து விடுகின்றன. பல தாவரங்கள் இறந்து விடுகின்றன.
அமில மழையானது மரங்களில் நோய்களை உண்டாக்கியும் மரப்பட்டைகளை சேதப்படுத்தியும் அவற்றை அழிக்கின்றது.
அமில மழைப்பொழிவால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, போலந்து, சுவிஸ்சர்லாந்து ஆகியவற்றில் உள்ள காடுகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.
கட்டிடங்களில் ஏற்படும் பாதிப்பு
சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் அமில மழையால் பெரும் பாதிப்பினைச் சந்திக்கின்றன.
இம்மழைப்பொழிவு கட்டிடங்களை பலவீனமாக்கி அழிக்கும் தன்மை உடையவை.
நவீன கட்டிடங்கள், கார்கள், இரும்பினாலான பாலங்கள், வானூர்திகள், குழாய்கள் ஆகியவை அமில மழையால் பாதிப்படைகின்றன.
பராம்பரிய கட்டிடங்களிலும் அமில மழையானது சரிசெய்ய முடியாத பாதிப்பினை உண்டாக்குகிறது.
மனிதர்களில் உண்டாகும் பாதிப்பு
அமில மழையானது மனிதர்களில் நேரடியான பாதிப்பினை ஏற்படுத்துவதில்லை.
அமில மழைக்கான மாசுபடுத்திகள் காற்றில் கலந்து மூச்சு குழாய் அழற்சி நோய், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
அமில மழையைத் தடுக்கும் முறைகள்
அமில மழைக்குக் காரணமான கந்தக-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஜைடுகள் நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படும் அனல் மின்நிலையங்களால் பெரிதும் வெளியிடப்படுகின்றன. எனவே நிலக்கரிக்குப் பதில் இயற்கை எரிவாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.
மின்சாரம் தயார் செய்வதற்கு சூரிய ஒளி, காற்றின் ஆற்றல், நீர் ஆற்றல், அணுசக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
தனிநபர் வாகன பயன்பாட்டினைக் குறைத்து பொதுவாகனப் பயன்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
தேவையற்ற இடங்களில் மின்சாரப் பயன்பாட்டினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அமில மழையை குறைப்பதற்கு ஒவ்வொருக்கும் கடமை உள்ளது என்பதை எல்லோரும் உணர்ந்து செயல்படவேண்டும்.
அரசாங்கமும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு அமிலமழை உள்ளிட்ட பேரழிவில் இருந்து சுற்றுசூழலைக் காக்க முயற்சி செய்து வருங்கால சந்ததியை பாதுகாப்புடன் வாழ வகை செய்ய வேண்டும்.
-வ.முனீஸ்வரன்