அமைதி வேண்டும் உலகிலே

அமைதி வேண்டும் உலகிலே – இதுதான் பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக உள்ளது.

இன்றைக்கு இந்தியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு இருக்கின்றனர். அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான்.

இந்த காலகட்டத்தில், சீனாவுடன் போர் என்பது எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கலாம் என சில இந்தியர்கள் நினைக்கலாம்.

சீனாவின் கனவுகளை முறியடிக்க அதனுடன் போர் புரிய வேண்டும்; சீனாவிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என சில அமெரிக்கர்கள் நினைக்கலாம்.

ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு போர் ஒரு தீர்வாக அமையாது. போர் என்பது மீளமுடியாத அழிவுப் பாதைக்கு, ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் அழைத்துச் செல்லும்.

இந்திய சீனப் போர்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லை பிரச்சினை உள்ளது. அது பேசித் தீர்க்க முடியாத நிலையை எட்டி வருவதாக இந்தியர்களாகிய நாம் உணர்கிறோம்.

எந்த விலை கொடுத்தாவது நம் நாட்டின் உரிமையை நிலைநாட்டுவது நமது கடமை. எனவே போர் தவிர்க்க முடியாதது என நாம் நினைக்கலாம்.

இந்த போரின் தன்மை எப்படி இருக்கும்?

யோசித்துப் பார்ப்போம்.

அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக‌, சீனா உலகின் மூன்றாவது பெரிய ராணுவ பலத்தைக் கையில் வைத்திருக்கின்றது.

தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி என மூன்று வழிகளிலும் தாக்குவதற்கு அளப்பரிய ஆற்றல் கொண்டது.

அதே நேரத்தில் இந்தியாவும் சாதாரணமானது அல்ல.

உலகின் நான்காவது பெரிய இராணுவ வலிமை உள்ள நாடு இந்தியா.

அனுபவமும், ஆற்றலும் வாய்ந்தது இந்திய ராணுவம். கூடவே இந்தியாவின் நண்பர்களின் பலமும் அதிகம்.

இருநாடுகளும் அணு ஆயுதங்களையும் தன்னிடம் வைத்துள்ள நாடுகள். ஆகவே இந்திய சீனப் போர் என்பது மிகப்பெரிய போராக இருக்கும்.

போரின் விளைவுகள்

அந்த போரின் விளைவுகள் எப்படி இருக்கும்?

துனது நட்பு நாடுகளைத் துணைக்கு அழைக்காமல் இந்தியாவும், சீனாவும் போர் புரிகின்றன என வைத்துக் கொள்வோம்.

அப்படி என்றால் இது முந்நூறு கோடி மக்களுக்கிடையே நடைபெறும் போராட்டமாக இருக்கும். ஆதாவது உலக மக்களில் 30 சதவீதம் பேர் போரினால் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இருவரும் தமது நட்பு நாடுகளை போருக்கு வரவேற்றால், அது 800 கோடி பேரை பாதிக்கக்கூடிய, மூன்றாவது உலகப் போராக மாற வாய்ப்பு இருக்கின்றது.

எளிதில் சரிசெய்ய முடியாத சமூக, பொருளாதார மற்றும் தனிமனித பாதிப்புகளை இந்த போர் ஏற்படுத்தும்.

ஒட்டு மொத்த மனித இனமும் அழிவது என்பது, மூன்றாவது உலகப் போரின் சாத்தியங்களில் ஒன்று.

மனித நாகரிகத்தின் தொட்டில்களாக விளங்கி புத்தனை உலகிற்கு கொடுத்தது இந்தியா; கன்புசியசை உலகிற்கு கொடுத்தது சீனா.

இருவரும் தங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, போர்தான் தீர்வு என எண்ணுவது மனித சமுதாயத்தின் துரதிர்ஷ்டம்.

உண்மையான‌ பிரச்சினைகள்

இருபத்தோராம் நூற்றாண்டில் மனிதனை அச்சுறுத்தும் உண்மையான‌ பிரச்சினைகள் சுற்றுசூழல் சீர்கேடு மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகும்.

பணம், பணம் என்று மனிதன் பித்துப் பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறான்.

இயற்கையை கண்மூடித்தனமாக மனிதன் அழித்துக் கொண்டு இருக்கிறான். மீண்டும் சரி செய்ய முடியாத அளவிற்கு, பூமியின் சுற்றுசூழல் மோசமாகிக் கொண்டு செல்கிறது.

காற்றும் நீரும் நஞ்சாகிக் கொண்டு வருகின்றன. உலகம் சூடாகிக் கொண்டு வருகின்றது.

இன்னும் 50 வருடங்களில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று யோசித்தால், எதிர்மறையான எண்ணங்களே தலைதூக்குகின்றன.

சுற்றுப்புற சீர்கேட்டைத் தடுக்காமல், ஒட்டு மொத்த மனித இனமும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

நாடு, மதம், இனம், மொழி என்று எந்தவித பாகுபாடும் இல்லாமல், அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தால்தான், இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து மனிதன் இந்த பூமியில் வாழ முடியும்.

அதனை உணர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பு, உலகிற்குத் தலைமையேற்கத் துடிக்கும் சீனா மற்றும் இந்தியாவிற்கு நிறையவே உள்ளது.

அமைதி வேண்டும் உலகிலே – அப்போதுதான் உண்மையான பிரச்சினைகளை நிதானமாக ஆராய்ந்து, மனித சமுதாயம் நீடித்து வாழ வழி செய்ய முடியும்.

அதை விடுத்து, நீயா? நானா? என்று போட்டி போட்டுக் கொண்டு போர் புரிந்து, அதற்கான விலையை ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் கொடுக்க வைத்தால், இந்தியாவையும், சீனாவையும் கோமாளிகள் என்றே வரலாறு பதிவு செய்யும்.

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.