ஒரு குருகுலத்தில் பல மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். ஒரு நாள் குருவானவர் தனது மாணவர்களுக்கு போட்டி ஒன்றினை அறிவித்தார்.
“மாணவர்களே நாளை உங்களுக்கு ஓவிய போட்டி ஒன்றினை நடத்தப் போகிறேன். நீங்கள் என்னிடம் இருந்து கற்று கொண்ட பாடங்களை நீங்கள் வரையும் ஓவியத்தின் மூலம் அறிந்து கொள்வேன்.” என்று கூறினார்.
ஓவியப் போட்டிக்கான தலைப்பானது நாளை உங்களுக்கு போட்டியின் போது அறிவிக்கப்படும். நீங்கள் நாளைக்கு காலையில் ஓவியம் வரைவதற்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்.
மாணவர்களும் “சரி குருவே. நாளை நாங்கள் போட்டிக்கு தயாராக வருகிறோம்” என்று ஒருமித்த குரலில் கூறிவிட்டு சென்றனர்.
மாணவர்கள் அனைவரும் மறுநாள் காலையில் ஓவியம் வரைவதற்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு குருகுலத்திற்கு வந்தனர்.
குரு மாணவர்களிடம் அமைதி பற்றிய உங்கள் சிந்தனையை ஓவியமாக வரையுங்கள் என்றார். எல்லோரும் ஓவியத்தினை வரைந்தனர்.
போட்டியின் இறுதியில் குரு ஒவ்வொரு மாணவரின் ஓவியத்தையும் பார்வை இட்டார்.
ஒரு மாணவன் அழகான ஏரியை வரைந்திருந்தான். மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. ஏரியில் மலையின் பிம்பம் அழகாக இருந்தது.
மற்றொருவன் பூக்களை வரைந்திருந்தான். ஓவியத்தில் இருந்த பூக்களானது அவற்றை பறிக்கத் தூண்டியது.
இன்னொருவன் அழகான புறாக்களை வரைந்திருந்தான். அவற்றின் அழகு அனைவரையும் கவர்ந்திழுத்தது.
இவ்வாறாக எல்லோரும் ஓவியங்களை நன்றாகவும், அழகாகவும் வரைந்திருந்தனர். கடைசியாக இருந்த மாணவனின் ஓவியத்தைப் பார்த்த குரு அவனைக் கட்டியணைத்துக் கொண்டார்.
ஓவியத்தில், கடலில் வானம் கறுத்த மேகங்களுடன் இடி மின்னலுடன் மழையைப் பொழிகிறது; காற்றும் பலமாக வீசுகிறது. பறவைகள் பயத்துடன் பறக்கின்றன.
கடலில் ஒரு கப்பலானது நிதானமாக பிரச்சினைகளைச் சமாளித்து செலுத்தப்படுகிறது.
மாணவர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அமைதி என்ற தலைப்பிற்கும் ஓவியத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்று எண்ணினர்.
அவர்களின் எண்ணத்தை அறிந்த குரு “மாணவர்களே இந்த ஓவியம் அழகாக தத்ரூபமாக இருக்கிறது. இந்த ஓவியத்தில் கறுத்த மேகங்கள் கொண்ட கடல், இடிமின்னலுடன் கூடிய மழை, நிதானமான கப்பல்; ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது? என்று தானே எண்ணுகிறீர்கள்.” என்றார்.
பிரச்சினையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல.
பிரச்சினையும், போராட்டமும் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு எதற்கும் கலங்காமல், எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி.
எனவே நிதானமாக உள்ள கப்பல் பரிபூரணமான அமைதியில் இருக்கிறது.
இந்த ஓவியத்தை வரைந்த மாணவனே என்னிடமிருந்து பாடங்களை நன்றாக கற்றிருக்கிறான்.” என்று அவனைப் பாராட்டினார்.
அனைத்து சௌரியங்களும் அமையப் பெற்று எந்தவித பிரச்சினையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.
ஆயிரம் துன்பத்திற்கு நடுவே ‘நிச்சயம் ஒரு நாள் விடியும்| என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பதுதான் அமைதி.
எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும், யார் என்ன தொல்லைகள் தந்தாலும் தனக்கு நேரும் மான அவமானங்களைவிட தான் எட்ட வேண்டிய இலக்கே தனக்கு பெரியது என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் அமைதி.
சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி. ஆகவே பிரச்சினைகளை புறம்தள்ளிவிட்டு நமக்கான இலட்சியத்தில் உறுதி கொண்டு அமைதியாக சாதனை செய்வோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!