அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் என்ற பாடல் பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியான ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினேழாவது பாசுரம் ஆகும்.
வாயிற்காவலர் அனுமதிக்க, கோபியர் உள்ளே நுழைகிறார்கள். நந்தகோபனின் இருப்பிடம் சென்று அவரை எழுப்பி, அடுத்துப் படுத்திருந்த யசோதையையும் எழுப்பி, ஆர்வத்தினால் கண்ணனை எழுப்பி அவன் குறிப்பால் பலராமனையும் எழுப்பும் அழகான பாசுரம் இது.
திருப்பாவை பாடல் 17
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபால எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கோலோர் எம்பாவாய்
விளக்கம்
ஆயர்பாடி மக்களுக்கு ஆடையையும், தண்ணீரையும், உணவினையும் குறைவில்லாது தானம் தருமம் செய்யும் எங்கள் தலைவராகிய நந்தகோபரே பள்ளி எழுந்தருள வேண்டும்.
பூங்கொடி போன்ற ஆயர்குலப் பெண்களின் கொழுந்து போன்ற தலைவியே, எங்கள் குலத்திற்கு விளக்கு போன்றவளே, எங்கள் இறைவியான யசோதையம்மையே எழுந்திருக்க வேண்டும்.
வாமன அவதாரத்தின் போது மூன்று அடி நிலத்தை மாபலியிடம் தானமாகப் பெற்று, பின்னர் வானளவு உயர்ந்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை ஒரு அடியாகவும் அளந்த தேவர்களின் தலைவனான கண்ணனே, உறக்கத்தை விடுத்து எழ வேண்டும்.
சிவந்த பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த திருவடிகளை உடைய பலராமனே எழ வேண்டும்.
நீயும் உன் தம்பியுமான கண்ணனும் எழுந்து எங்களுக்கு சேவை தரவேண்டும்.