நண்பனின் தங்கை திருமணத்திற்கு சென்று இருந்தேன். எனக்கு நண்பனை தவிர வேறு யாரும் அந்த வீட்டில் அவ்வளவாக பழக்கமில்லை.
திருமண வீடு வழக்கமான தனது கலகலப்புடன் சொந்தம், சுற்றம், நட்பு என ஒரே பரபரப்பு.
‘நானும் வந்து விட்டேன்’ என்று நண்பனை பார்த்து கையசைத்து விட்டு ஒரு ஓரமாய் எங்கே அமரலாம் என இடம் தேடினேன்.
அப்போது 85 வயசுக்கு மேலே புதுப்புடவை கட்டி ‘ஜம்’முனு அமைதியா அமர்ந்திருந்த ஆயா பக்கத்தில் உட்கார்ந்தேன்.
சும்மா மொபைல் நோண்டாமல், ஆயா கிட்ட பேச்சு கொடுத்தேன்.
திருமணம் நடப்பது ஆயாவின் கடைசி மகனின் பேத்திக்கு என்ற விஷயம் தெரிந்தது.
ஆயாக்கு மொத்தம் மூன்று மகன் இரண்டு பெண். கொள்ளு பேத்தி சமஞ்ச வரைக்கும் பாத்தாச்சு ஆயா…!
கேட்டவுடன் ஒரு பக்கம் ஆச்சரியத்தில் ஆயாக்கு “வாழ்த்துக்கள்!” கூறினேன்.
அதற்கு பெரிய சலிப்புடன் ஆயா, “காடு வா வாங்குது; வீடு போ போங்குது, ஏன் தான் இன்னும் உயிரோட இருக்கேன்னு தெரியலப்பா” என்று கனத்த இதயத்தோடு கூறிய போது ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன்.
“நகை நட்டு, புது சேலை, கொள்ளு பேரன் பேத்தி, எவ்வளவு சந்தோஷமா அனுபவிச்சுக்கிட்டு இருக்கீங்க. இதெல்லாம் பார்க்கவே கொடுப்பினை வேணும் பாட்டி” என்றேன்.
அதற்கு ஆயா “அந்த மூலையில் இருக்க அம்மிக்கல்லப் பாரு! எப்படி ‘பளபள’ன்னு புதுசா இருக்கு. ஆனா மத்த நேரத்துல அது எங்க இருக்கும் எப்படி இருக்கும் என்று உனக்கு தெரியுமா?” என்று கேட்டார்.
“மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வந்தவுடன் அம்மிக்கல்லுக்கு அதிகம் வேலை இல்லை என்பதால் பெரும்பாலும் அது ஏதாவது ஒரு மூலையில் அம்மிக்கல்லே தெரியாத அளவுக்கு அதன் மேல் வீணா போன பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்திருப்போம்.
அதை தூக்கிப் போடவும் மனசு இருக்காது. அழுக்கு படிந்த ஒரு அடசல்” என்று கூறினேன்.
ஆயாவும் “சரிதான், அதேபோல அவசர தேவைக்கும் சுப காரியங்களுக்கும் சடங்கு சம்பிரதாயத்துக்கு மட்டும் பயன்படும் ஒரு பொருள். அப்படித்தான் நானும்” என்றார்.
“தேவை இருக்கும் பொழுது, விருப்பமே இல்லை என்றாலும் வேலை செய்யாமல் இருக்க முடியாது. தேய்ந்து ஓடா போனாலும் மீண்டும் கொத்தி கொத்தி புதுப்பித்துக் கொள்வார்கள்.
இதற்கு மேல் இது பயன்படாது என்று தெரிந்தவுடன் மூலையில் வைத்து விடுவார்கள். அவருடைய தேவைக்காக மட்டுமே அவ்வப்போது பயன்படுத்துவார்கள். மரியாதை கொடுப்பது கூட சாங்கியதற்கு மட்டுமே.
அப்படித்தான் நானும். ஏதோ நகை புடவை எல்லாம் போட்டு இன்னைக்கு மட்டும் இப்படி ராணி மாதிரி வேஷம் போட்டு வைத்திருக்கிறார்கள்.
மற்ற நேரத்தில் எவ்வளவு கஷ்டம் தெரியுமாப்பா!
வயசாயிடுச்சு! அடிக்கடி மறதி என்பதால் லைட்டு பேன் ஆஃப் பண்ணாமல் வந்தால் மருமக திட்டுவா.
பாத்ரூமில் தண்ணீர் ஊத்தாமல் வந்துவிட்டால் பேரன் பேத்திகள் திட்டும்.
உடம்புக்கு முடியவில்லை என்றால் பீ மூத்துரம் அள்ளகூட நான் பெத்த மக்கள் வருவதில்லை.
எனது அறையை விட்டு வெளிப்புறத்திற்கு வர வேண்டுமென்றால் கூட கை தாங்கலாக கூட்டிச் செல்ல ஆள் இல்லை தெரியுமா” என்று கண்ணீர் வடித்தார்.
ஆனா இன்னைக்கு வீட்டுக்கு பெரிய கட்ட என்பதால் இப்படி உட்கார்ந்து இருக்கேன். கை கால் நல்லா இருக்கும்போதே நிம்மதியா, யாருக்கும் தொந்தரவு இல்லாம கண்ண மூடனும் என்று தான் கடவுளை வேண்டுகிறேன்.”
ஆயாக்கு சமாதானம் கூறி டாப்பிக்கை மாற்றி கொஞ்சம் கலகலப்பாக சிரிக்க வைத்து விட்டு, பந்தி ரெடியாயிருச்சு வந்த வேலையை கவனிக்க வேண்டியது தான் என்று கிளம்பினேன்.
ஆயா சொன்னது மாதிரியே சடங்குக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டனர். மீண்டும் ஆயா தனது இருக்கையிலேயே போய் அமர்ந்து கொண்டார்.
எனது எண்ண ஓட்டத்தில்.. ஐந்து குழந்தைகளைப் பெற்று கொள்ளு பேரன் பேத்தி வரைக்கும் பார்த்த ஆயாக்கு இந்த நிலை என்றால், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்று மிக்ஸி கிரைண்டர் பயன்படுத்தும் நமக்கு எந்த நிலைமையோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது எனது மனைவியின் செல் போன் அழைப்பு வந்தது.
“ஏங்க! மிக்ஸியில் அரைப்பதற்கு நேரமில்லை, வரும் போது இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 லிட்டர் மாவு, ரசப்பொடி வாங்கி வந்துருங்க!”
கதி. பழனியப்பன்