அயனிமம் கிளர்வுற்ற நீர்

அயனிமம் கிளர்வுற்ற நீர்- நீருடன் ஓர் உரையாடல் -18

தோட்டத்தில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி சில நாட்கள் ஆகிவிட்டன. வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்திற்கு விரைந்து சென்றேன். நல்ல வேளையாக எந்த தாவரமும் வாடிப் போகவில்லை.

மனம் அமைதியடைந்தது.

தண்ணீர் குழாயில் பிளாஸ்டிக் நெடுங்குழாயை மாட்டினேன். தண்ணீர் குழாயைத் திறக்க, நீர் பிளாஸ்டிக் நெடுங்குழாய் வழியே பீறிட்டு வந்தது.

அதில் வந்த நீரை முதலில் தொட்டிகளில் இருந்த பூச்செடிகளுக்கு பாய்ச்சினேன். அவை அசைந்தன. ‘நீர் கிடைத்ததால் அவை மகிழ்ந்து சிரித்தனவோ?’ என்று மனதில் தோன்றியது.

மண் தரையில் அவரைக் கொடி, பூசணிக் கொடி, தக்காளிச் செடி முதலியன இருந்தன. அவற்றிற்கும் நீர் பாய்ச்சினேன். மண் ஆர்வமுடன் நீரை உள்வாங்கிற்று.

மதில் சுவரை ஒட்டியிருந்த, மா, வாழை மற்றும் முருங்கை மரத்திற்கும் நீரை பாய்ச்சினேன். அப்படியே, வாழை இலைகள் மற்றும் முருங்க மரக்கிளைகளிலும் நீர் பாய்ச்ச, அவை இன்னும் பசுமையாக காட்சி தந்தன. போதுமான அளவு தண்ணீரை தாவரங்களுக்கு பாய்ச்சி முடித்தேன்.

அந்த இடமே குளிர்ச்சியாக இருந்தது. காகம், குருவிகள் மற்றும் மைனா உள்ளிட்ட பறவைகள் அங்கு உலா வந்தன. பறவைகளின் ஒலியும், காற்றில் அசைந்து தாவரங்கள் எழுப்பிய ஒலியும் என்னை வெகுவாக கவர்ந்தன.

அப்பொழுது, நான் புதியதாக வாங்கியிருந்த ஒரு அறிவியல் புத்தகம் பற்றி என் நினைவிற்கு வந்தது. அதனை இங்கு எடுத்து வந்து வாசிக்கலாம் என்று தோன்றியது. அதன்படி, அந்த புத்தகத்தை எடுத்து வந்து, நிழலான பகுதியில் அமர்ந்தேன்.

அந்தப் புத்தகத்தில் ஆங்கிலத்தில் ‘Plasma’ எனப்படும் அயனிமம், பற்றி எழுதப்பட்டிருந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன்.

சட்டென என் முகத்தில் ஏதோ விழுந்தது. மேலே பார்க்க, மரக்கிளைகள் அசைந்தன. முகத்தில் தடவிப் பார்க்க, விழுந்தது நீர் துளிகள் தான் என்பதை அறிந்துக் கொண்டேன்.

காற்று சற்று வேகமாக வீசியதில், மரத்தில் பாய்ச்சிய நீர்துளிகள் சிதறி, என் மீது பட்டிருப்பதை உணர்ந்தேன்.

மீண்டும் வாசிப்பை தொடர்ந்தேன். புத்தகத்திலும் நீர் துளிகள் விழுந்திருந்தன. அதனை துடைக்க முற்பட்டேன்.

“இருங்க சார். என்ன அவசரம்?” – நீரின் குரல் ஒலித்தது.

நீர் தான் பேசுகிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

“என்ன அவசரமா? அப்படியே விட்டா இந்த தாள் நனைஞ்சு கிழிஞ்சிடுமே.”

“நீங்க அவசரமா தொடச்சீங்கன்னா தான் தாள் கிழியும். இப்படியே விட்டுபாருங்க. தானா நானே போயிடுவேன்.”

“அதுசரி, தாள்ல இருக்கும் மை ஊறி பரவிடும். அப்புறம் படிக்கிறதற்கு கடினமாயிடும்.”

“ஓ.. இத நான் யோசிக்கல. ஆனா, நான் இப்ப மை மீதா இருக்கேன்.”

“இல்ல இல்ல. நல்ல வேளையா வெண்மையான பகுதியில தான் இருக்க.”

“பாத்தீங்களா, நான் எப்பவுமே நல்லது தான் செய்வேன்.”

“சரி சரி”

“சரி சார். இது என்ன புத்தகம்? எத பத்தி படிக்கிறீங்க?”

“அதுவா? அயனிமம் நிலை பற்றி படிக்கிறேன்.”

அயனிமம் என்றால் என்ன‌?

“அயனிமம்மா அப்படீன்னா..”

“அயனிமம் என்பது ஒரு நிலை. அதாவது, நீ திட, திரவ மற்றும் வாயுன்னு மூன்று நிலையில இருக்கல. அதுமாதிரி, அயனிமம் என்பது நான்காவது நிலை. அதப் பத்திதான் படிச்சிக்கிட்டு இருக்கேன்.”

“சரி சார். இதுபத்தி இன்னும் விளக்கமா சொல்ல முடியுமா?”

“முயற்சிக்கிறேன். ஒரு பொருள், அயனிமம் நிலையில இருக்குதுன்னா, அதுல நேர்மறை மற்றும் எதிர்மறை அயனிகள், எலக்ட்ரான்கள், கிளர்வுற்ற மற்றும் நடுநிலை அணுக்கள், தனி உறுப்புகள், மூலக்கூறுகள் மற்றும் புறஊதா ஒளி முதலியவை எல்லாம் சேர்ந்த கலவையா இருக்கும்.”

“அப்படியா… புதுசா இருக்கு?”

“ஆமா இது புதுசு தான். பூமியில ஒரு பொருள் இயற்கையா அயனிம நிலையில இருப்பதில்ல. செயற்கை தொழிற்நுட்ப முறைகள பயன்படுத்தி தான் இதப் பெற முடியும்.”

“நீங்க சொல்றத கேட்டா, அதிக வெப்பநிலையில தான் அயனிம நிலைய கொண்டுவர முடியும்போல!”

“நீ சொல்றது பாதி சரி.”

“என்ன சார் சொல்றீங்க?”

“ஆமாம், நீ சொன்னா மாதிரி, அதிக வெப்ப நிலையில அயனிமம் நிலை உருவாக்கபடுது. அதுக்கு ‘சூடான அயனிமம்’ என்று பெயர். குறைந்த வெப்பநிலையிலும், அதாவது அறுபது டிகிரி செல்சியஸுக்குள்ளும் ஒரு பொருள அயனிமம் நிலைக்கு கொண்டுவர முடியும். அதற்கு ‘குளிர் அயனிமம்னு’ சொல்றாங்க.”

“சிறப்பு சார். இப்ப சொல்லுங்க. நான் அயனிம நிலையில இருக்க முடியுமா?”

“நிச்சயமா. அயனிமம் கிளர்வுற்ற நீர் (Plasma activated water) இருக்கு.”

“ஓஓ… அப்ப இதுக்கும், நான் சாதரண நிலையில இருப்பதற்க்கும் என்ன வித்தியாசம்?”

“சொல்றேன். அயனிமம் கிளர்வுற்ற நீருல அமிலத்தன்மையோட, எதிர்வினை ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகளும் இருக்கின்றன. ஆனா, இந்த மூலக்கூறுகள், அயனிமத்தை உருவாக்கப் பயன்படும் வாயுக்கள், மின்னழுத்தம் மற்றும் திரவங்களைப் பொறுத்து இருக்கும்.”

“புரியலையே?”

“இம்ம்.. உதாரணத்துக்கு, அயனிமம் கிளர்வுற்ற நீர உற்பத்தி செய்ய, ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் நீர் மூலக்கூறுகள் பயன்படுத்தனா, அதுல ஆக்ஸிஜன் அணு, ஒற்றை ஆக்ஸிஜன், சூப்பர் ஆக்சைடு, ஓசோன், ஹைட்ராக்சில் தனியுறுப்புகள் நைட்ரஜன் அணுக்கள், ஹைட்ரஜன் பெராக்சைடு, பெராக்ஸி நைட்ரைட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட் அயனிகள் முதலியன உருவாகியிருக்கும்.”

அயனிமம் கிளர்வுற்ற நீர் நன்மைகள்

“சரி சார். இத விடுங்க. அயனிமம் கிளர்வுற்ற நீரால ஏதாச்சும் நன்மை இருக்கா?”

“இம்ம்… பயன்கள் இருக்கே.”

“ஆம்… இத இத்தான் எதிர்பார்த்தேன்”

“இம்.. அயனிமம் கிளர்வுற்ற நீரை பயன்படுத்தி பாக்டீரியா வளர்ச்சியைக் தடுக்க முடியும். அதனால், இதனை கிருமிநாசினியாக பயன்படுத்த முடியும்.”

“சிறப்பு சார்.”

“இன்னும் இருக்கு. அயனிமம் கிளர்வுற்ற நீரால தாவர விதைகள சுத்தீகரிக்க, அவற்றோட முளைப்புதிறன் மேம்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிறுக்காங்க. ஆய்வுக்காக, கம்பு விதைகளை ஐந்து நிமிடம் அயனிமம் கிளர்வுற்ற நீரால கழுவ, அதன் முளைப்புத்திறன் சுமார் ஐம்பது சதவிகிதம் வரைக்கும் அதிகரித்ததாம்.”

“ஓ…ஓ…”

“இதுமட்டுமில்ல, தாவர வளர்ச்சிக்கு தேவையான நைட்ரேட்டு சத்தும், நைட்ரேட்டு நிறைந்த அயனிமம் கிளர்வுற்ற நீரால தரமுடியும். அதோட, அயனிமம் கிளர்வுற்ற நீரால் சுத்தீகரிக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி மற்றும் காளான் போன்றவற்றின் இயல்பான நிறம் மாறாம அப்படியே புதுமலர்ச்சியாகவே சில நாட்கள் வரைக்கும் இருக்குதாம்.”

“நன்றி சார். என்ன பற்றிய புது தகவல்கள சொன்னீங்க.”

“நல்லது.”

“சரிங்க. நான் கிளம்புறேன். நீங்க வாசிப்ப தொடருங்க.” என்று கூறிச் சென்றது நீர்.

குளிர்ச்சியான அந்தச் சூழலில், எனது வாசிப்பை மீண்டும் தொடங்கினேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீரின் ஒட்டுந்தன்மை – நீருடன் ஓர் உரையாடல் – 19

நீரின் சுவை – நீருடன் ஓர் உரையாடல் – 17

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்