அரசின் பரிசு – சிறுகதை

“கவர்மண்டு அறிவிச்ச பொங்கல் பரிச நாளைக்கு நம்ம கூப்பங் கடைல குடுங்காங்களாம். நான் இன்னைக்கு ராத்திரி 8 மணிக்கு வரிசைக்கு போப்போறேன். நீ வர்யா செல்லம்மா?” என்று கேட்டாள் கண்ணாத்தாள்.

“நாளைக்கு காலையில அம்மாவ பாக்க கவர்மண்டு ஆஸ்பத்திரிக்குப் போகனும். சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு, தொடஞ்சு எடுத்திட்டு வரனும். நீ எனக்கும் சேர்த்து வரிசையப் போட்டுரு. நான் வந்து உங்கூட சேர்ந்துக்குறேன்.” என்றாள் செல்லம்மா.

“சரி, பிள்ளைகள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு, ஆஸ்பத்திரிக்கு போயிட்டு சீக்கிரம் வந்துரு. திடீருனு காசு குடுக்குறத நிப்பாட்டிடுவான்” என்றபடி கண்ணத்தாள் நகர்ந்தாள்.

‘காலையில சீக்கிரமா எந்திரிச்சு வேலைகளை முடிச்சுட்டு ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வந்து அரசின் பரிசு வாங்கப் போகனும்’ எண்ணிக் கொண்டாள் செல்லம்மா.

மறுநாள் காலையில் 5 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு அம்மாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குச் சென்றாள் செல்லம்மா.

“எம்மா,  இன்னைக்கு கூப்பன் கடையில பொங்கல் பரிசு கொடுக்காங்கலாம். கண்ணாத்தாள எனக்கும் சேர்த்து வரிச போடச் சொன்னேன்.

அவ நேத்து ராத்திரி எட்டு மணிக்கே வரிசைக்கு போய்ட்டா. சீக்கிரமா, உனக்கு சாப்பாடு வாங்கி குடுத்திட்டு தொடச்சி எடுத்திட்டு போறேன். திடீருனு காசு குடுக்குறத நிப்பாட்டிடுவாங்கனு கண்ணாத்தா சொன்னா.”

“நாளைக்கு என்ன தொடஞ்சி எடுத்துக்கலாம். ஆஸ்பத்திரி சாப்பாட்ட மட்டும் சீக்கிரம் வாங்கி கொடுத்திட்டு போ. நானே கரண்டிய இடது கைல வைச்சு சாப்புட்டுகிறேன். நீ காலகாலத்துல போயி பணத்த வாங்கு” என்று அறுவைச்சிகிச்சை செய்த வலதுகையை தடவியவாறே அவசரப்படுத்தினாள் அம்மா.

வழக்கத்திற்கு மாறாக‌ அரைமணி நேரம் தாமதமாகவே செல்லம்மா மருத்துவமனை உணவினை வாங்கி அம்மாவிடம் தந்துவிட்டு அவசரமாக வீட்டை நோக்கி ஓடினாள்.

பொங்கல் பரிசு

தெருமுனையிலே கண்ணாத்தாள் செல்லம்மா வீட்டினை நோக்கிச் செல்வதைப் பார்த்தாள். “ஏய், செல்லம்மா, இன்னும் ரெண்டு பேருதான் வரிசயில நிக்காங்க. அவுக வரைக்கும்தான் பொங்க பரிசு கொடுப்பாங்களாம். சீக்கிரம் கூப்பங் கடைக்குப் போ.” என்று கத்தினாள்.

“ஐயே, அரிசி, சக்கர வாங்க பைய எடுத்திட்டு வாரேன். செத்த பொறு” என்றாள் செல்லம்மா.

“நீ வீட்டுக்குப்போய் பொங்கலுக்கு அரிசி, சக்கர வாங்க பைய எடுத்துட்டு வர நேராயிரும். எங்கிட்ட ஒரு பை இருக்கு. நீ அரிசிய மடியில வாங்கிட்டு சக்கரைய இந்தப் பைல வாங்கிக்க. சீக்கிரம் போ” என்று விரட்டினாள் கண்ணாத்தாள்.

ரேசன் கடைக்கு விரைந்தாள் செல்லம்மா. வெளியே ஒருவரும் இல்லை.

பக்கத்தில் இருந்த அறையில் ஒரு போலீஸ்காரர், ரேசன் கடை ஊழியர், கூட்டுறவு சொசைட்டி நபர் என மூவர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை செல்லம்மா பார்த்தாள்.

“என்ன செல்லம்மா? லேட்டா வந்திருக்க. பணம் கொடுத்து முடிச்சாச்சு. பட்டுவாடா கணக்க வாங்க கவர்மண்டுக்கு ஆபிசர் வந்துக்கிட்டுருக்கார். கணக்கு செட்டில் பண்ணப் போறாம்.” என்றார் ரேடுசன் கடை ஊழியர்.

“எண்ணே, அம்மாவ ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்த்து சாப்பாடு வாங்கி கொடுத்திட்டு வரேன். நேராயிருச்சு. என் கார்டுக்கு பணத்தை கொடுத்தீங்கினா பெரிய மவ தலைப் பொங்கல சிரமம் இல்லாம சமாளிச்சுருவேன்.” என்று கெஞ்சலாகக் கேட்டாள்.

“அதலாம் முடியாதும்மா. நான் கணக்கு வழக்க முடிச்சுட்டேன்” என்றார் கறாராக ரேசன் கடை ஊழியர்.

“எண்ணே, கொஞ்சம் பெரிய மனசு பன்னுங்க.” என்றாள் செல்லம்மா. அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.

வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து பெண் அதிகாரி வந்தார். செல்லம்மா அவரிடமும் கெஞ்சலைத் தொடர்ந்தாள்.

தன்னுடைய தலைப் பொங்கலை சமாளிக்க தன் தாய் பட்டபாடு அவரின் நினைவில் வந்தது.

செல்லம்மாவின் வடிவில் தன் தாயை உணர்ந்த அவர், செல்லம்மாவிற்கு உண்டான அரசின் பரிசைக் கொடுக்குமாறு ரேசன்கடை ஊழியரிடம் கூறினார்.

அரசின் பரிசு பெற்ற செல்லம்மாள் அரசு அதிகாரியைத் தன் மகளாக உணர்ந்தாள்.

வ.முனீஸ்வரன்

One Reply to “அரசின் பரிசு – சிறுகதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.