அரசியல் ஒரு பூக்காடு

அரசியல் என்பது பூக்காடு – பல

அற்புதம் நிகழ்த்தும் தேன்கூடு

உரசிப் பார்த்திட கண்கூடு – அது

உள்ளுறை இல்லா வெறும் கூடு

 

சிரிப்பாய் பேசியே மயக்கும் – சிறு

செவ்வந்தி போல்சில மலருண்டு

விரிந்தே கிடந்து எடுக்கும் – போது

விரைந்தே தாக்கும் சிலவுண்டு

 

உதிர்ந்தே போயினும் பலரின் – மன

உணர்வில் வாழும் சிலவுண்டு

மதிபோல் குளிரும் ஆதவன் – தனது

மனம்போல் வெம்மையும் இங்குண்டு

 

சதிதான் இதுவென தோற்றவர் – பலர்

செப்பிடும் மொழியும் கேட்பதுண்டு

விதிதான் இதுவென அதிர்வாய் – இங்கு

வென்றவர் கூற்றும் வருவதுண்டு

 

எதுவாய் இருப்பினும் பயமில்லை – இனி

எப்படி இருப்பினும் கவலையில்லை

மதுவென பாய்ந்து மக்கள் – தமது

மனங்களை கெடுப்பினும் தவறில்லை

 

இதமாய் ஒருநாள் ஓட்டுக்காய் – இங்கு

எம்மிடம் தேடியே வருவதனால்

சுதந்திரம் இங்கே இருப்பதனால் – அதை

சுகமென நாமும் சுமந்திடலாம்

– இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.