இன்றைக்கு இந்தியாவில் மன்னராட்சி முறை மறைந்து மக்களாட்சி முறையானது நடைபெற்று வருகிறது. மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஏற்று நடத்தும் அரசு என்பதாகும்.
மக்களாட்சியில் நாட்டின் குடிமகனே ஆள்பவரும், ஆளப்படுபவரும் ஆவார். எனவே குடிமக்கள் தங்கள் உரிமைகள், கடமைகள், நாட்டு நடப்புகள் பற்றி அறிந்து இருக்க வேண்டும். இத்தகைய விழிப்புணர்வை அரசியல் கட்சிகள் உருவாக்குகின்றன.
மக்களின் கருத்தை அவை முன்நிறுத்த துணை புரிகின்றன. எனவே அரசியல் கட்சிகள் மக்களாட்சி முறையை வெற்றியடையச் செய்ய உதவுகின்றன என்றே கூறலாம்.
மக்களாட்சியில் அரசியல் கட்சிகள் வெளிப்படையாக செயல்படும் அமைப்புகள் ஆகும். ஆகவே அவை மக்களுக்கும் அரசுக்கும் இடையில் பாலமாகவும், பல்வேறு பிரச்சனைகளை விவாதிக்கும் மேடையாகவும் செயல்படுகின்றன.
கட்சி என்றால் என்ன?
மக்கள் ஒரு கூட்டமைப்பாக செயல்பட்டு தேர்தலில் பங்கேற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப் பெறச் செய்யும் அமைப்பு அரசியல் கட்சியாகும்.
அவை மக்கள் சமூகத்தை உயர்த்த நல்ல திட்டங்களையும், கொள்கைகளையும் அமைத்து செயல்படவேண்டும்.
அரசியல் கட்சிகளில் தலைவர்கள், செயல் உறுப்பினர்கள், தொண்டர்கள் என மூன்று அமைப்பினர் உள்ளனர்.
அரசியல் கட்சிகளின் தன்மைகள்
பொதுவாக அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று முக்கிய பொதுக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. அவை ஆட்சி, அதிகாரங்களில் பங்கு ஏற்பதை தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தங்களின் திட்டங்களையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்துகின்றன. அவை ஓரளவிற்கு நிலைத்திருக்கும் தன்மை பெற்றவையாக உள்ளன. தனக்கென்று தெளிவான நோக்கங்களையும், செயல் திட்டங்களையும் கொண்டிருக்கின்றன.
கட்சிகளின் செயல்பாடுகள்
கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. தேர்தலின் போது வாக்காளர்களிடம் தங்கள் கட்சிக் கொள்கைகளையும் திட்டங்களையும் முன் வைக்கின்றன. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆளும் கட்சியாக செயல்பட்டு ஆட்சி அமைக்கிறது.
தேர்தலில் பெரும்பான்மையை இழக்கும் கட்சி எதிர்கட்சி ஆகிறது. அது மாற்று கருத்துக்களை முன்வைத்தும், அரசின் தோல்விகள் மற்றும் தவறுகளை விமர்சனம் செய்கின்றன. சட்டங்களை உருவாக்குவதில், தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.
கட்சிகள் பொதுக் கருத்துக்களை உருவாக்குகின்றன. பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து அவற்றை வெளிப்படுத்துகின்றன.
கட்சிகளின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம்
அரசியல் கட்சியானது படிநிலை நிர்வாக அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் மூலம் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கட்சியின் உயர்நிலைப் பதவி தலைவர் பதவியாகும்.
தலைவருக்கு உதவிட செயலர்களும், பொருளாளர்களும் உள்ளனர். இவர்களுடன் கட்சிப் பணி செய்திட செயற்குழு உள்ளது. செயற்குழு அவ்வப்போது கூடி பிரச்சனைகளை விவாதித்து கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுக்கின்றது.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு அதில் கட்சியின் தீர்மானங்களும் செயல்பாடுகளும் வரையறுக்கப்படுகின்றன.
கட்சியின் மாநாடுகள் கட்சியின் வலிமையையும், உறுப்பினர்களுக்கிடையே கட்டுப்பாட்டு உணர்வினையும், பெரும் ஆதரவினையும் வெளிக்காட்டுவதோடு பொது மக்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
ஆட்சி முறையின் வகைகள்
ஆட்சி முறையானது ஒரு கட்சி ஆட்சி முறை, இரு கட்சி ஆட்சி முறை மற்றும் பல கட்சி ஆட்சி முறை என மூன்றாக வகைபடுத்தப்படுகிறது.
ஒரு கட்சி ஆட்சி முறை
இம்முறையில் ஓர் ஆளும் கட்சி மட்டுமே இருக்கும். எதிர்கட்சிகள் செயல்பட அனுமதி கிடையாது. முன்னாள் சோவியத் யூனியன் ரஷ்யா இதற்கு எடுத்துக் காட்டாகும்.
இரு கட்சி ஆட்சி முறை
இம்முறையில் இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே செயல்படும். எடுத்துக்காட்டு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை.
பல கட்சி ஆட்சி முறை
இம்முறையில் இரண்டுக்கு மேற்பட்ட பல கட்சிகள் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டு இந்தியா, பிரான்சு, இத்தாலி, இலங்கை ஆகியவை.
இந்தியாவில் பல கட்சி முறை
பரந்து விரிந்த இந்திய நாடும், அதன் பன்முகத்தன்மையும் பல அரசியல் கட்சிகள் உருவாக காரணமாய் உள்ளன. உலகில் அதிக எண்ணிக்கையுடைய அரசியல் கட்சிகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
பல்வேறுபட்ட மாநிலப் பிரச்சனைகள், பலவகையான சாதி, சமூக, பண்பாடு மற்றும் மொழி பிரிவுகளின் காரணமாக பலகட்சி அமைப்பு முறை இந்தியாவில் காணப்படுகிறது.
தேர்தல் முடிவிற்கு பிறகு மத்திய அரசில் கூட்டாட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்போது மாநில கட்சிகள் தேசிய கட்சிகளுக்கு ஆதரவளித்து கூட்டாட்சி அமைக்க முற்படும் முக்கிய பங்கினை பல கட்சி அமைப்பு முறை ஆற்றுகிறது.
மாநில கட்சிகள்
சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற (கீழ் அவை) தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் அல்லது குறிப்பிட்ட இடங்களைப் பெற்ற கட்சிகள் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்தினரால் ஒப்புதல் பெற்றவை மாநிலக் கட்சிகள் ஆகும்.
தேசியக்கட்சிகள்
குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநிலகட்சி என ஒப்புதல் பெற்ற கட்சிகள் தேசிய கட்சிகளாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் தங்கள் கட்சியைப் பதிவு செய்ய வேண்டும்.
தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது. அமைப்பு ரீதியான மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு சிறப்பு சலுகைகளை அளிக்கிறது. கட்சி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கிறது.
அரசியல் கட்சியின் ஒப்புதல் பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே கட்சி சின்னத்தை தேர்தலில் பயன்படுத்துவர்.
அரசியல் கட்சிகள் மக்களாட்சி சிறப்பாக நடைபெற உதவுகின்றன. இவை மக்களாட்சியின் முதுகெலும்பாகவும் செயல்படுகின்றன.
மறுமொழி இடவும்