கொரானா தந்த கொடூரத்தில்
நட்டமாகிப் போனது,
எங்களின் வியாபாரம்!
படிக்க பணம் கட்ட முடியல,
பாதை மாறிப் போனது
எனது பள்ளிப் பயணம்!
மீனுக்குட்டியை
அரசுப்பள்ளியில் சேர்க்கப் போகிறேன்!
அப்பாவின் இந்தக் கூற்றால்,
மொத்த குடும்பமும்
ஆடித்தான் போனது!
கண்ணீரை அம்மா
முந்தானைக்குள் முடக்க,
பாட்டியின் முகத்தில் வேதனை வழிய,
தாத்தா, அப்பாவிடம்
வினா எழுப்பினார்,
வேறு வழியில்லையா?
உதட்டை பிதுக்கி இல்லை என
இயலாமையை வெளிப்படுத்திய
அப்பா சொன்னது,
நிச்சயம் எல்லாம் ஒருநாள் மாறும்,
மாறிய நொடியே பள்ளியும் மாறும்!
உறுதிபடுத்திய அப்பாவின்
கைகளைப் பற்றிக் கொண்டேன்,
பின் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்,
கொஞ்ச நாளைக்குத் தானே
அரசுப்பள்ளி,
அப்பாவிற்காக பொறுத்துக் கொள்ளலாம்!
அடுத்த நாள்
அரசுப்பள்ளியில்
அடி எடுத்து வைத்தேன்
வகுப்பறையில் நுழைய
அனுமதி கோரும் போது,
எஸ் கமின் என்கிற அதட்டலான ஓசையின்றி,
வாம்மா மீனா, என்கிற
வாஞ்சை யான வகுப்பாசிரியையின்
குரலால் உள்ளம் நெகிழ்ந்தது!
இங்கு கற்பித்தல் என்பது
கடமைக்காக இல்லாமல்
ஒவ்வொரு மாணவனின்
கண்பார்த்தும், கருத்து புரிந்தும்,
முகபாவனை அறிந்தும்,
யதார்த்த நிலைப்பாடு களை
ஒட்டியே அமைந்ததால்
பாடமனைத்தும் எனது மனதிலும் ஒட்டியது!
இங்கு கட்டுப்பாடற்ற சுதந்திரமான
சூழல்தான்
என்றாலும், யாரையும்
தறிகெட்டு போகவிடாமல் குறிக்கோளை
எய்த இலகுவான உத்திகள்
அடையாளமிடப்படுகிறது.
பந்தா ஏதும் இல்லாத
பாந்தமாக பழகும் நண்பர்கள்
பயமுறுத்தாத
சாந்தமான தலைமை ஆசிரியர்,
மகிழ்வான பள்ளிச்சூழல்!
மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்
கொரானா எனக்கு
தந்த பரிசு
அரசுப்பள்ளி!
அப்பாவிடம் அழுத்தந் திருத்தமாக
சொன்னேன்,
இத்தனை நாள் அந்நிய தேசத்தில்
இருந்துவிட்டேன்!
இப்போதுதான் சொந்த மண்ணிற்கு
வந்திருக்கிறேன்!
நம்ம நிலைமை மாறினாலும்
நான் அரசுப்பள்ளியை விட்டு
மாறமாட்டேன்!
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!