அரிசி சிப்ஸ் அருமையான டீ டைம் நொறுக்குத் தீனி. இதனை செய்து வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே செய்யப்படுவதால் இதனைத் தயார் செய்யப் பொருட்களுக்குக்கென்று மெனக்கிடத் தேவையில்லை.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இதனைத் தயார் செய்து இடைவேளை உணவாகக் கொடுத்தனுப்பலாம்.
இதனைத் தயார் செய்வதற்குக் குறைவான நேரமே செலவாகும். எனவே இதனை விருந்தினர் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.
இனி சுவையான அரிசி சிப்ஸ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப் (தோராயமாக 150 கிராம்)
தண்ணீர் – 1 கப்
பெருங்காயம் – 2 சிட்டிகை
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
எள் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
அரிசி சிப்ஸ் செய்முறை
வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி, எள், சீரகம், மிளகாய் வற்றல் பொடி, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, நல்லெண்ணெய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து அரிசி மாவினைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும்.
மாவு கெட்டிப்பட்டதும் அடுப்பினை அணைத்து விடவும்.
தற்போது வரமாவு இருப்பது போன்று இருக்கும். எக்காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
மாவு லேசாக ஆறியதும் (கை பொறுக்கும் சூட்டில்) நன்கு அழுத்திப் பிசையவும்.
சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டவும்.
அதனை இரண்டு அல்லது மூன்று சிறிய உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
சப்பாத்திக் கல்லில் அரிசி மாவினைத் தூவி அவ்வுருண்டையிலிருந்து ஒன்றை எடுத்து சப்பாத்தியாக விரிக்கவும்.
இது அரிசி மாவு ஆதலால் கோதுமை மாவினைப் போன்று ஒரே சீரான தடிமனில் விரிக்க இயலாது.
எனவே முடிந்தவரை ஒரே சீராக 1/2 இன்ச் தடிமனுக்கு விரித்துக் கொள்ளவும்.
பின்னர் அதனை கத்தியைக் கொண்டு விருப்பமான வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் வெட்டியத் துண்டுகளைச் சேர்க்கவும். துண்டுகள் வெந்து எண்ணெய் குமிழி அடங்கியதும் வெளியே எடுக்கவும்.
சுவையான அரிசி சிப்ஸ் தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பொரித்த சிப்ஸ்களின் மீது மிளகாய்ப் பொடி, சாட் மசாலா சேர்த்துச் சுவைக்கலாம்.