அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்

இந்தியாவின் அனைத்து பாகங்களிலும், குறிப்பாக சூரிய வெளிச்சமும், ஈரப்பசையுடன் கூடிய தட்ப வெப்ப நிலைப் பகுதிகளில் அருகம்புல் வளர்கிறது.

‘சைனோடோன்’ (Cynodon), ‘டேக்டைலோன் பெர்ஸ்’ (dactylon pers) என்பது அருகம்புல்லின் தாவரவியல் பெயர்.

வ‌டமொழியில் ‘தூர்வா'(Dhoorva) என்றும், இந்தியில் ‘தூப்’ (Dhoob) எனவும் அழைக்கப்படுகிறது.

அருகம்புல்லின் மருத்துவக் குணங்கள் ஏராளம். உடல் வெப்பத்தை தணிக்கும் வல்லமை, உடலுக்கு நிறத்தைக் கொடுக்கும் தன்மை, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், காயங்களைக் குணப்படுத்தும் சக்தி மற்றும் உடலில் சேரும் நச்சுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றும் திறன் ஆகியவைகளைக் கொண்டுள்ளது.

முக்கியமாக சிறுநீரகம் சம்மந்தப்பட்ட கோளாறுகளுக்கு அருகம்புல் சாறு அருமருந்து. சிறுநீர் நன்கு பிரியவும் உதவுகிறது. அது மட்டுமின்றி உடல் உள்ளும், வெளியேயும் ஏற்படும் ரத்தக்கசிவு நிற்பதற்கும் அருகம்புல் சாறு பெரிதும் துணைபுரிகிறது.

காக்காய் வலிப்பு, வாந்தி உணர்வு, மாதவிடாய் சமயம் அதிக ரத்தப் போக்கு மற்றும் கருச்சிதைவு போன்றவைகளுக்கும் அருகம்புல் மிகச்சிறந்த மருத்துவ நிவாரணி.

தோல் நோய்கள், (எக்ஸிமா, படை, சொறி சிரங்கு) வயிற்றுப்புண் மற்றும் குடற்புண் போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவம் ‘அருகம்புல் தைலம்‘ அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த அருகம்புல் தைலமானது, அருகம்புல் சாறு-3200 கிராம், தேங்காயெண்ணெய்-800 கிராம், அதிமதுரப்பொடி-50கிராம் ஆகியவைகளைக் கொண்டு நீரில் நன்றாகக் கொதிக்க வைத்து சுண்டிய பிறகு பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது.

கண்களில் ஏற்படும் வீக்கம் மேல் ஒரு சில அருகம்புல் சாற்றுத் துளிகள் விடுவதின் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மூக்கிலிருந்து வடியும் ரத்தம் உடனடியாக நிற்க அருகம்புல் சாறு நல்லதோர் மருந்து.

நவீன மருத்துவ உலக ஆராய்ச்சியில் அருகம்புல்லில் புரதம் (Protein), மாவுச்சத்து (கார்போஹைடிரேட்), கரோடீன் (Carotene) போன்ற சத்துக்கள் அடங்கியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: