சமரச மார்க்கம் தழைத்திட வந்து
சமயங்கள் பிணக்கற இணைத்தார்!
தமக்கென வாழா அன்பினில் ஓங்கும்
தருமத்தால் பசிப்பிணி தடுத்தார்!
அமைதியின் உருவாம் அசைந்திடா ஜோதி
அருள்வடி வாகும்நம் அடிகள்
கமலபா தங்கள் நடந்திட்ட வழியைக்
கருதியே கடைப்பிடித் திடுவோம்!
நெஞ்சினை உருக்கி நெகிழ்த்திடும் சொற்கள்
நித்தியக் களிப்பினை அளிக்கும்!
பஞ்சினை எரிக்கும் பொங்கழல் அதுபோல்
பழமையில் மடமையை அழிக்கும்!
நஞ்சென மாய்க்கும் நாம்படும் துயரை
நலமுறத் தெள்ளறி வருளும்!
செஞ்சொலால் அமைந்த தெய்வநல் அருட்பா
திரண்டிடும் தேன்சுவை அமுதே!
இமயவரம்பன்