அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் இரண்டாவது பாடலாகும்.
திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் எங்கும் நிறைந்த இறைவனான சிவபெருமான் மீது, திருவாதவூரராகிய மாணிக்க வாசகரால் பாடப்பட்டது.
மார்கழி இறைவழிபாட்டின் போது திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து மொத்தம் 30 பாடல்கள், மார்கழி 30 நாட்களுக்கு பாடப் பெறுகின்றன.
தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் திருப்பள்ளியெழுச்சியும் ஒன்று.
இறைவனும் உயிரினங்களைப் போன்று உறங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி துயில் எழுப்புவதாக இப்பாடல்கள் அமைந்திருக்கின்றன. இப்பாடல்களில் அதிகாலைப் பொழுதில் நிகழும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.
சிவபெருமானின் திருக்கண்களிலிருந்து வெளிப்படும் கருணைத் தேனைப் பருகிய அடியவர்கள், வண்டுகளைப் போல ரீங்காரம் பாடுவதாக இப்பாடல் கூறுகிறது.
காலையில் சூரியன் உதித்து புற இருளைப் போக்குவது போல, உன்னுடைய ஞானச்சுடரால் ஆன்மாக்களின் அறியாமை என்னும் இருள் மறைந்தது.
உன்னுடைய கருணைக் கண்களில் இருந்து வெளிப்படும் தேனை உறிஞ்சிய அடியவர்கள், வண்டினைப் போல ரீங்காரம் செய்து உன் புகழ் பாடி மகிழ்கின்றனர்
நிலைத்த இன்பமாகிய வீடுபேற்றினை வழங்குகின்ற கருணைக் கடலே, பள்ளியில் இருந்து எழுந்தருள்வாயாக என்று இறைவனிடம் மாணிக்கவாசகர் வேண்டுகோள் வைக்கின்றார்.
பிறவாமை என்னும் நிலைத்த இன்பம் பெற, மலர் போன்ற இறைவனின் திருப்பாதங்களை வண்டுகளைப் போல சரணடைய வேண்டும் என்பதை இப்பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இனி திருப்பள்ளியெழுச்சி இரண்டாவது பாடலைக் காண்போம்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 2
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறைஉறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே
விளக்கம்
திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே, சூரியனின் தேரோட்டியான அருணன் இந்திர தேவனின் திசையாகிய கிழக்குப் பகுதிக்குச் சென்று விட்டான். ஆதவன் உதயமானதால் புற உலகில் உள்ள இருளானது மெல்ல மெல்ல நீங்கி ஒளி வெள்ளம் எங்கும் பரவுகிறது.
அதுபோல இறைவனே, உயிர்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதற்காக ஞான ஒளியை வழங்கும் வண்ணம் உன்னுடைய மலர் போன்ற முகத்தில் உள்ள கருணைக் கண்கள் மெல்ல மெல்ல திறக்கின்றன.
சூர்யோதயத்தால் மலரும் தாமரை மலர்களில் உள்ள தேனை உண்டு ரீங்காரம் செய்யும் வண்டுகளைப் போல, உன்னுடைய கண்களிலிருந்து வழியும் கருணைத் தேனை உண்டு அடியவர்கள், உன்னுடைய புகழை இன்பத்தோடு பாடி ரீங்காரம் செய்கின்றனர்.
ஆனந்தமாகிய அருட்செல்வத்தை வாரி வழங்கும் மலையே, கடல் போன்ற நிலைத்த இன்பமாகிய வீடுபேற்றினை உடையவனே பள்ளியில் இருந்து எழுந்தருள்வாயாக.
இறைவனின் கண்களிலில் வடியும் கருணைத் தேனாகிய நிலைத்த இன்பமான வீடுபேறினைப் பெற, அவனுடைய திருவடிகளின் புகழினைப் பாடி சரணாகதி அடைய வேண்டும் என்று இப்பாடல் உணர்த்துகிறது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!