வேள்விகளில் தொக்கியிருந்த
பெருங்கேள்விகளை
எங்கோ தொலைத்தது
யாரென்று தெரியவில்லை!
சொற்றொடர்களை விழுங்கிய
பெரும் மௌனமொன்று
அஞ்சலி செலுத்தியவாறே
நின்று கொண்டிருக்கிறது!
விழலுக்கு இறைத்து விட்ட
நீரின் விழுக்காடு
எவ்வளவென்று நினைவில்லை!
பாலையைப் போர்த்திக் கொண்ட
அனலின் அடியில்
குளிரெடுத்ததாய் ஞாபகம்!
விழுந்து புரண்ட விபரீதங்களில்
நதியின் மடிதவழ்ந்த
நாட்களை நனைத்தது
ஈரம்!
அரூபங்களை ஆட்சிசெய்த
மனங்களின்
பின்னணி இருளை
விலக்காமல்
பூக்கிறது அமாவாசை!
நிலையில்லாமைகள்
நிலை கொண்ட போது
தவறவிட்ட தவிப்புகள்
தவழ்ந்து கொண்டிருந்தன!
பெரும்பொறுப்பில் பிழியப்படுகிறது
நெருங்கிய
உண்மையின் துயரம்!
பிரதானப் பொய்களில்
பொதிந்திருந்தன
வீழ்தலின்
விழ வைத்தலின் சரித்திரம்!
எஸ்.மகேஸ்
சென்னை
கைபேசி: 9841708284
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!