அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்

அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் என்ற நூல், பெருமதிப்பிற்குரிய எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி, ராஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த, நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு சிறந்த‌ நூல் ஆகும்.

அந்த நூலின் அருமையான கட்டுரைகள், வரும் வாரங்களில் நமது இனிது இணைய இதழில் வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவிக்கின்றோம்.

ஆசிரியர்  அவர்கள் எழுதிய முன்னுரையை இந்த வாரம் படியுங்கள்.

முன்னுரை

அர்த்தம் உள்ளவைகள் தாம், ஆறறிவு படைத்த மனிதர்களிடையே ஆனந்தமான வரவேற்பைப் பெறுகிறது.

அர்த்தம் இல்லாத பொருள் எத்தனை தாம் விலை உயர்ந்தவைகளாக இருந்தாலும், வரவேற்கப்படுவதில்லை. மாறாக, விலக்கப்படுகிறது. வெறுத்து ஒதுக்கப்படுகிறது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதர்களின் மதிப்புக்கும், துதிப்புக்கும் மூலப்பொருளாக இருந்து வருபவை விளையாட்டுக்கள் தாம்.

அவைகள் எப்படி எப்படியெல்லாம் மனித இனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் சஞ்சீவிப் பொருளாக விளங்கி வருகின்றன என்கிற கருத்துக்களைத்தான் அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் என்னும் இப்புத்தகத்தில் விவரித்துள்ளேன்.

விளையாட்டுக்கள் ஒன்றும் புரியாத புதிருமல்ல; வேண்டப்படாத விவகாரமும் அல்ல.

விளையாட்டுக்கள் மக்களுக்கு எளிமையாக, இலவசமாகக் கிடைக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காகவே மக்களிடையே போதிய மதிப்பையும் மரியாதையும் பெற இயலாமற் போயிருக்கிறது.

 

கடும் வெயிலில் வரிசையில் நின்று, கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் துடித்து, பிறகு பெறுகிற சிறுபொருள்கள்கூட மனிதர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியை ஊட்டுகின்றன. ஏனென்றால், அவைகள் கஷ்டப்பட்ட பிறகே கிடைப்பதாகும்.

விளையாட்டுகள் கூட, பணம் கட்டி விளையாடும்போது பெருமைகள் பெறுகின்றன. அதற்கு கிரிக்கெட் ஆட்டம் ஒரு சான்றாகும்.

ஆனால், தினையளவு இருந்தாலும் பனையளவாகப் பயன் அறிவார் ஏற்று மகிழ்வார்கள்.  அது போலவே, விளையாட்டின் பயன் தெரிந்து, பொது மக்கள் உயர்வு பெற வேண்டும் என்று வழிகாட்டும் முயற்சியின் வடிவம்தான் இப்படி ஒரு எழில் நூலாக வெளிவந்திருக்கிறது.

குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டு தான் கிடப்பார்கள். அவர்கள் திருந்தவும் மாட்டார்கள். திருத்தவும் வாய்ப்பளிக்க மாட்டார்கள்.

என்றாலும் ஒருநாள் அவர்கள் ‘நம் பக்கம் வந்து தான் ஆகவேண்டும்’ என்ற நம்பிக்கையுடன் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 

வைத்தியர்கள் ‘உடற்பயிற்சி செய்! கொஞ்ச நேரமாவது விளையாடு’ என்று கடுமையாக அறிவுரை கூறுகிறபோதுதான், உடல் நலிந்து தேற வேண்டும் என்று முயற்சிக்கிற போதுதான் நாம் கூறுகிற உண்மைகளும் செய்கிற உதவிகளும் தெரியும், புரியும்.

அந்த நம்பிக்கையை செயல்படுத்த, இந்த அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் எனும் நூல் உதவும் என்ற மனதிருப்தியுடன் உங்களிடம் அளிக்கிறேன்.

சு.ஆதாம் சாக்ரட்டீஸ் அரிய உதவியுடன், அழகுற அச்சிட்டுத் தரும் ‘கிரேஸ் பிரிண்டர்ஸ்’ தங்கள் பணியை செவ்வனே முடித்துத் தந்திருக்கின்றனர். என் இனிய வாழ்த்துக்கள்.

எனது நூல்களை வாங்கி ஆதரிக்கும் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.

அன்புடன்

எஸ்.நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.