அறம் படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான் என்ற பழமொழியை குருவிக்குஞ்சு குருவம்மாள் கேட்டது.
ஆசிரியர் மாணவர்களுக்கு பழமொழியின் விளக்கத்தை பற்றிக் கூறுகிறாரா என்பதை ஆர்வத்துடன் தொடர்ந்து குருவிக்குஞ்சு குருவம்மாள் கவனித்தது.
மாணவர்களில் ஒருவன் “ஐயா அதிகம் படித்த அறிவாளிகளால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை விளக்குவது போல அல்லவா இந்தப் பழமொழி உள்ளது.” என்று கேட்டான்.
அதற்கு ஆசிரியர் “அப்படியல்ல இப்பழமொழியின் விளக்கம். நான் இப்பழமொழியை சற்று விளக்கிக் கூறுகிறேன்.
முன்னொரு காலத்தில் சாஸ்திரமும், மருத்துவமும் கற்றுதந்த ஒரு குருகுலத்தில் மாணவர்கள் நிறைய பேர் கற்றுவந்தனர்.
ஒரு நாள் மாணவர்களில் சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரையும், மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரையும் உணவுப் பொருட்களை வாங்க குரு அனுப்பினார்.
சாஸ்திரம் படித்தவனோ காய்கறி வாங்கச் சென்ற இடத்தில் சாஸ்திரப்படி இது சரியல்ல. இந்தக் கடையில் வாங்கக் கூடாது. இந்த விற்பனையாளரிடம் வாங்கக் கூடாது என்று அனைவரையும் கழித்தானாம்.
மருத்துவம் படித்தவனோ கத்தரிக்காய் ஆகாது. வாழைக்காய் வாயு, கிழங்குகளை உண்ணலாகாது, என ஒவ்வொரு காயையும் கழித்தானாம்.
இவ்விதமாக ஒருவர் கடைகளையும், கடைக்காரரையும் பழிக்க மற்றொருவர் காய்கறிகளை பழிக்க இருவரும் வெறும் கையுடன் குருகுலத்திற்குத் திரும்பி வந்தனராம்.
இப்பழமொழியை பற்றி மேலும் விளக்க இன்னொரு நிகழ்வினைக் கூறுகிறேன். ஒரு ஊரில் திருவிழா ஒன்று நடக்க இருந்தது.
அத்திருவிழாவிற்கு சங்கீத கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என ஊர்மக்கள் விரும்பினர். எனவே கச்சேரி ஏற்பாடு செய்ய நன்கு படித்த இருவரை ஊர் மக்கள் அணுகினர்.
“நீங்கள் சென்று சங்கீதக் கச்சேரிக்கு நல்ல வித்துவான்களை ஏற்பாடு செய்து வாருங்கள்” என்று கூறி அவ்விருவரையும் அனுப்பி வைத்தனர்.
முதலில் அவ்விருவரும் ஒரு வீணை வித்துவானை கச்சேரிக்கு ஒப்புதல் செய்யச் சென்றனர். அங்கு அவர் வீணையை படுக்க வைத்து ஒரு வெள்ளைத் துணியால் அதனை மூடிவைத்து இருந்தார்.
இதைக் கண்ட முதலாமவன் “இந்த வீணைக் கலைஞரைக் கச்சேரிக்கு ஒப்புதல் செய்ய வேண்டாம்” என்றான.
அதற்கு இரண்டாமவன் “ஏன்?” என்று கேட்டான்.
“நீயே பார். அவர் வீணையை மூடி வைத்துள்ளதைப் பார்க்கும் போது ஏதோ பிணத்தை மூடி வைத்துள்ளது போல் உள்ளது!. நாம் முதன் முதலாக கச்சேரி ஏற்பாடு செய்கிறோம். இவர் கச்சேரி மேடையில் இக்கருவியை இங்கு இருப்பது போல மூடி வைத்தாரானால் அதைக் கண்ட நம் ஊர்மக்கள் என்ன நினைப்பார்கள்!. ஊர் பெரிய மனிதர்கள் சகுனம் சரியாக இல்லை என்று கூற மாட்டார்களா?” என்றான்.
இதனைக் கேட்ட இரண்டாமவன் முதலாமவனின் பேச்சினை ஒப்புக் கொண்டான். பின் இருவரும் “இன்னொரு நாள் வந்து கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்து கொள்கிறோம்!” என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
அவ்வூரில் இன்னொரு தெருவில், கடம் வாசிக்கும் ஒருவர் இருந்தார். அவரை கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்ய இருவரும் நினைத்தனர்.
அப்போது இரண்டாமவன் “கடம் வாசிப்பவரை நாம் கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டாம்” என்று தடுத்தான்.
“ஏன் வேண்டாம் என்கிறாய்?” என முதலாமவன் கேட்டான். அதற்கு இரண்டாமானவன் “நண்பரே நாமோ முதன் முதலாக கச்சேரி ஏற்பாடு செய்ய வந்துள்ளோம். கடம் என்பது மண்ணால் செய்யப்பட்டது. நமது போதாத வேளை இவர் கச்சேரி செய்யும்போது கடம் உடைந்து போனால் ஊரார் அபசகுணம் என்று கூறுவதோடு இதை ஏற்பாடு செய்த நம்மைத் திட்டமாட்டார்களா?” என்றான்.
அடுத்தவனும் “ஆமாம்” என ஒப்புக் கொண்டான். இப்படியாக இருவரும் பல கலைஞர்களையும் பார்த்து சாக்குப் போக்கு சொல்லி வெறும் கையுடன் ஊர் திரும்பினராம்.
இதுபோலவே அதிகம் விபரம் தெரிந்த ஒருவர் கடைக்குச் சென்றால் அவரால் எந்த ஒரு பொருளையும் திருப்தியாக வாங்க இயாது.
ஏனென்றால் அவருடைய பார்வைக்கு எல்லாப் பொருளும் குற்றமுடையதாக தோன்றும் என்பதே இப்பழமொழியின் கருத்தாகும்.” என்று கூறினார்.
இதனைக் கேட்ட குருவிக்குஞ்சு குருவம்மாள் வட்டபாறையினை நோக்கிப் பறந்தது.
அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடம் காக்கைக் கருங்காலன் “இன்றைக்கு பழமொழி மற்றும் அதற்கான விளக்கத்தினை உங்களில் யார் கூறுப்போவது?” என்று கேட்டது.
அதற்கு குருவிக்குஞ்சு குருவம்மாள் “நான் இன்றைக்கு அறம் படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான் என்ற பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் கூறுகிறேன்” என்று தான்கேட்ட அனைத்தையும் கூறியது.
அதனைக் கேட்ட காக்கை “பழமொழியும் அதற்கான விளக்கமும் மிகவும் அருமை. நாளை வேறு யாரேனும் பழமொழி பற்றிக் கூறுங்கள்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.
– இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942