அறிவியல் உண்மை எப்போதும் காலம் காலமாக நம்பப்பட்ட மதவாதக் கோட்பாடுகளுக்கும், மூடப்பழக்கங்களுக்கும், ஆளுவோர் கொள்கைகளுக்கும் எதிரிகளாக இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக பல கண்டுபிடிப்புகளுக்குரிய உரிமங்கள் ஒப்புதல் கிடைக்காமலேயே இருந்திருக்கின்றன.
கண்டுபிடிப்பாளர்களுக்குரிய மரியாதையும் மறுக்கப்பட்டு வந்துள்ளதாக வரலாறு காட்டுகிறது. அப்படிப்பட்ட கண்டுபிடிப்புக்களும் அவற்றைக் கண்டறிந்த அறிவியல் வல்லுநர்களும் பட்ட அல்லல்களை நினைத்து பார்க்க நெஞ்சம் கனக்கிறது.
ஆனால் உண்மை மிக வலியது, உண்மைக்கு என்றும் இறப்பு இல்லை, இறுதியில் அறிவியல் உண்மை வெற்றி பெறும், வாழ்வு பெறும் என்பதே சரித்திர உண்மை.
லவாய்சியர் 18 ஆம் நூற்றாண்டில் வேதியியல் புரட்சியை ஏற்படுத்தியவர்; நவீன வேதியியலின் தந்தை என அறியப்படும் பிரெஞ்ச் அறிஞர். ஜோசப் ப்ரீஸ்ட்லி என்பவர் ஆக்ஸிஜன் இருப்பதைக் கண்டறிந்தவர். எரியத்துணை புரியும் அவ்வாயுவுக்கு ஆக்ஸிஜன் எனப் பெயரிட்டவர் லவாய்சியர்.
சிலிக்கான் தனிமத்தையும், எரிதல் விதி, நிறை அழிவின்மை விதி ஆகியவற்றையும் கண்டறிந்தார். ஆனால் பிரெஞ்ச் அரசு ‘ஒரு குடியரசு நாட்டுக்கு அறிவியல் அறிஞனோ, வேதியியல் வல்லுனனோ தேவையில்லை’ எனக் கூறி புகையிலை கடத்தியதாகக் குற்றஞ்சாட்டி லவாய்சியரைத் தூக்கிலிட்டுக் கொன்றது.
‘வானவியலின் தந்தை’ என்று இன்று அழைக்கப்படும் இத்தாலி நாட்டு விஞ்ஞானி கலிலியோவை அந்நாட்டின் நீதிமன்றம் புரட்சிவாதி எனக்கூறியது. கலிலியோவின் சூரியமையக் கொள்கை மூன்றாம் போப்பின் மதவாதக் கொள்கைக்கு மாறானது எனக் கூறி ஆயுள் தண்டனை விதித்தது. அப்பீலின் பேரில் அவரை வீட்டுச் சிறை வைத்தது. கலிலியோ தனது ஆயுளின் கடைசி 8 ஆண்டுகள் வீட்டுச் சிறைக்குள் அடைபட்டு இறந்தார்.
தொலைநோக்கியை கண்டுபிடித்தவருக்கு, நிலவில் உள்ள மலைகள், பள்ளங்கள், சூரியப் புள்ளிகள், சனிக்கோளின் நான்கு நிலாக்கள் பற்றியும் 16ஆம் நூற்றாண்டிலேயே கூறிய அந்த விண்வெளி அறிஞருக்கு, ஊசல் குண்டின் தத்துவங்களை கூறிய விஞ்ஞானிக்கு, கனமான பொருளும் லேசான பொருளும் ஓர் உயரத்திலிருந்து ஒரே நேரத்தில் போடப்பட்டால் ஒரே நேரத்தில் தரையை அடையும் என விந்தைமிகு கருத்தைக் கூறிய அறிஞருக்கு அந்நாடு கொடுத்த பரிசு வீட்டுச்சிறை.
ஐன்ஸ்டீன் ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி; நவீன இயற்பியலின் தூணாகக் கருதுப்படுபவர். பொருளின் ஆற்றல் பற்றிய ஐன்ஸ்டீனின் சமன்பாடு, குவாண்டம் விதி, சார்பியல் பற்றிய கோட்பாடு ஆகியவை ஐன்ஸ்டீனின் சாதனைகளில் சிறந்தவை. 1921ல் நோபல் பரிசு பெற்ற 20ஆம் நூற்றாண்டு விஞ்ஞானி.
ஆனால் ஐன்ஸ்டீன் யூதர் எதிர்ப்பு மனப்பான்மை தீவிரத்தால் தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார் என்பதே வரலாற்று உண்மை.
நிக்கோலஸ் லெப்லான்ஸ் ஒரு பிரெஞ்ச் வேதியியல் அறிஞர். சோடா சாம்பல் எனும் சோடியம் கார்பனேட்டைச் சாதாரண உப்பிலிருந்து விலை மலிவாக தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தார். பல இடங்களில் நிக்கோலஸ் லெப்லான்ஸ் ஏற்படுத்திய சோடா சாம்பல் தயாரிப்பு ஆலைகள் அனைத்தையும் பிரெஞ்சுப்புரட்சியின் போது பிரெஞ்சு அரசு தரைமட்டமாக்கியது.
ஆல்ஃபிரட் வெகன்னர் ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி. கண்டங்கள் மெதுவாக இடம் நகருகின்றன என்ற ஆல்ஃபிரட் வெகன்னரின் மாபெரும் கண்டுபிடிப்பை அவர் இறக்கும்வரை அந்த நாட்டு விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1950-ல் தான் ஆல்ஃபிரட் வெகன்னரின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஜியாடார்னோ புருனோ ‘நட்சத்திரங்கள் அனைத்தும் வெகுதூரத்தில் காணப்படும் சூரியன்களே. அவற்றிற்கென தனிக் கோள்கள் உள்ளன. அவை அந்த நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்றன” எனக் கூறினார். ஜியாடார்னோ புருனோவை ரோமன் கத்தோலிக் நீதிமன்றம் கட்டி வைத்து எரித்துக் கொன்றது. ஆனால் அவர் சொன்னதுதான் அறிவியல் உண்மை.
அறிவியல் அறிஞர்கள் சாகலாம். சாக வைக்கப்படலாம் ஆனால் அவர்கள் கண்டுபிடித்து உறுதி செய்யப்படுத்தப்பட்ட அறிவியல் உண்மை என்றும் சாகாது. சாகவைக்கவும் முடியாது.
– எம்.காமராஜ்