அறிவும் பண்பும்

அறிவும் பண்பும் இணைந்த வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாகும். அதையே திருவள்ளுவர் மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

வைய‌த்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டும் ஒளி விளக்காக மிளிர்வது திருக்குறள். அடக்கம், அருள், அறிவு, அன்பு, ஊழ்வினை, ஊக்கம், ஒழுக்கம், நாண், பண்பு, பொறை ஆகிய பத்துவகை உடைமைகளைக் குறித்து விரித்துரைக்கின்றார் தெய்வப் புலவர்.

அறிவுடையார் எல்லாம் உடையார் என்று எடுத்துரைக்கும் செந்நாப் போதார் “பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்” என்று வலியுறுத்துகிறார்.

அன்பும் ஆன்ற குடிப்பிறப்பும் கல்வியும் பண்பினைப் பெருக்கும் வாயில்கள் ஆகும்.

அறிவும் ஆற்றலும்

“அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள் அழிக்கலாகா அரண்” என்று வள்ளுவர் அறிவின் பெருமையை எடுத்துரைக்கிறார்.

பகைவராலும் உள்நுழைந்து தகர்க்க இயலாத செங்கோட்டையாகத் திகழ்வது அறிவாகும்.

அறிவுடையார் ஆற்றலும் ஏற்றமும் வாய்ந்தவராவார். பின் வருவதை முன்னே அறிந்து அதற்கேற்ப ஆவன செய்யாதவன் வாழ்வு எரிமுன்னர் வைத்தாறு போலக் கெடும் நெருப்பு ஆகும்.

நெருப்பு முன்னர் போடப்பட்ட காய்ந்த சருகாகிய வைக்கோல் எரிந்து போவது போல வாழ்வை இழப்பர் அறிவிலார். ஆக்கம் கருதி முதல் இழக்கும் செயலை அறிவுடையோர் ஒரு போதும் செய்யார்.

அஞ்சாமையும், ஈகையும், ஊக்கமும், அறிவைத் தொடர்ந்து வரும் பிற கூறுகளாகும். ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்பதால் அஞ்சாமைக்கும் அறிவு தேவைப்படுகிறது.

‘சிதைவிடத்து ஒல்கார் உரவோர்’ என்பதனால் அறிவாக்கமே ஊக்கத்திற்கும் அடிப்படையாகும்.

பண்பும் பயனும்

அரசியலில் அறிவுடைமையை வலியுறுத்திய வள்ளுவர் குடியியலில் பண்புடைமையைப் போற்றிப் புகழ்கின்றார்.

நயனொடு நன்றி புரிந்து பயனுடையார் பண்பு உலகோரால் பாராட்டப் பெறும் என்கின்றார் திருவள்ளுவர். எளிமைத் தன்மையாலேயே எல்லாரிடமும் பண்பாளர் என்ற பெயர் பெறுதல் எளிதாகும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கையில் அவையே பண்பும் பயனுமாக விளங்கும்.

எழுபிறப்பும் தீயவை தீண்டாது என்னும் நிலை உருவாக பழியில்லாத பண்புடைய மக்களை பெற வேண்டும்.

பகைவரையும் நண்பராகக் கொண்டு ஒழுகும் பெருந்தலைவரால் உலகம் நிலை பெறுகிறது என்பர்.

பிறருடன் கலந்து பழகி அளவாவும் பண்பு இல்லோதார்க்குப் பக‌ற்பொழுதும் இருள் சூழ்ந்த இரவாகவே தோன்றும்.

உறுப்பொத்தல் மக்கள் ஒப்பு ஆகாது. பொருந்தத் தக்க பண்பு ஒப்புமையே ஒப்புக் கொள்ளத் தக்க உயர்வாகும்.

அறிவும் பண்பும்

அறிவின் பெருமையை தீ நட்பு, பிரிவாற்றாமை வரைவின் மகளிர் தூது ஆகி பிற திறங்களில் வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பில் லாதவர்

என்று அறிவு இருந்தும் பண்பு இல்லாதவரை அஃறிணைப் பொருளாகிய மரத்தோடு ஒப்பிடுகிறார் திருவள்ளுவர்.

அறிவினால் ஆவதுண்டோ என்ற கடாவி, பிரிதின் நோய் தன் நோய் போல் போற்றும் பண்பினை வலியுறுத்துகிறார்.

பண்பிலான் பெற்ற செல்வம் பாண்டத்தின் குறைபாட்டால் திரிந்து போகும் பாலுக்கு நிகராகும்.

பல்வினைப் பயனால் வந்து சேர்ந்த பொருள், எல்லாப் பயனும் பெறுவதற்கு ஒப்புடையது என்றாலும் பண்பின்மை காரணமாகப் பயன்படாது போகும்.

அறிவிலும் மேலானது பண்பு

கல்வி வாயிலாகவும் கேள்வி வாயிலாகவும் ஈட்டப் பெறுவது அறிவாகும். அறிவைக் காட்டிலும் பண்பு பெருமை வாய்ந்ததாகும்.

நவில் தொறும் நூல் நயம் போலும் பயல்தொறும் பண்புடையார் தொடர்பு என்று சொல்கிறார் வள்ளுவர். அதாவது படித்தால் கிடைப்பது அறிவின் இன்பம்; ஆனால் நினைத்தாலே கிடைப்பது பண்பின் இன்பம்.

நண்பு ஆயிற்றாகி நயனில் செய்தாக்கும் பண்புடையராகத் திகழ வேண்டும். என்பது வள்ளுவர் காட்டும் குறிக்கோள் ஆகும்.

நுண்ணுனர் வின்மை வறுமை அஃதுடைமை
பண்ணப் பனைத்த‌ பெருந் செல்வம்

என்பது நாலடியார் நவிலும் அறிவு விளக்கமாகும். தீமையை ஒதுக்கி நன்மையைப் புகுத்தி வாழ வழி காட்டுவது அறிவாகும்.

கல்விக் கூடங்களின் வாயிலாக அறிவைப் பெருக்க முனைவோர் சமுதாயம் என்னும் வாழ்வியல் சட்டத்தின் வாயிலாகப் பண்பை உருவாக்க வேண்டும்.

அறிவைப் பெருக்கி, பண்பை உருவாக்கிவிட உழைப்பது ந‌ம்  பொறுப்பாகும். அனைத்து வகை உடைமைகளிலும் வீறுமிக்கதாக விளங்குவது பண்புடைமை என்னும் பெருமையாகும்.

அறிவும் பண்பும் இணைந்த இன்பமான வாழ்க்கை வாழ விழைவோம்.

S.ஆஷா

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.