அறிவு என்றைக்கும் நன்மையைத் தரும் என்பதை அறிவு தந்த வெகுமதி என்ற இந்தக் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
விதர்ப்ப நாட்டில் மாறன் என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அன்பு மற்றும் புத்திசாமர்த்தியம்; உடையவன்.
ஒருநாள் திடீரென அறிவிப்பு ஒன்று வந்தது. விதர்ப்பநாட்டின் இளவரசியை பூதம் ஒன்று தூக்கி காட்டுக்குள் சென்று விட்டது.
பூதத்திடமிருந்து இளவரசியை மீட்பவருக்கு இளவரசியை திருமணம் செய்து அந்நாட்டின் வருங்கால அரசனாக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பைக் கேட்டதும் பலரும் பூதத்திடமிருந்து இளவரசியை மீட்க எண்ணி காட்டிற்குள் சென்றனர். ஆனால் ஒருவரும் திரும்பி வரவில்லை. நாட்கள் நகர்ந்தன.
இளவரசியை மீட்க ஒருவரும் முன்வரவில்லை. இந்நிலையில் இளவரசியை மீட்கப் போவதாக மாறன் தன்னுடைய தாயிடம் தெரிவித்தான்.
“இளவரசியை மீட்கச் சென்றவர்கள் யாரும் இதுவரை உயிருடன் திரும்பவில்லை. நீ ஏன் வீணான முயற்சியில் ஈடுபடுகிறாய்?” என்று மாறனுடைய தயார் கேட்டார்.
அதற்கு அவன் “அறிவினால் பூதத்தினை வென்று விடலாம்” என்று கூறி கையில் சீசாவுடன் விடை பெற்றான். மாறன் காட்டின் வழியே பூதத்தைத் தேடிச் சென்றான்.
நண்பகலில் வெயிலால் களைப்படைந்து காட்டின் நடுவே பாழடைந்திருந்த மண்டபத்தின் அருகே தூங்கினான். அப்போது பெருத்த சத்தம் கேட்டு மாறன் கண் விழித்தான்.
பெரிய உடலுடன் ஒற்றைக் கண் பிதுங்கிய நிலையில் கையில் இளவரசியைப் பிடித்துக் கொண்டு பூதம் இருந்தது. பூதத்தைப் பார்த்ததும் பயப்படாமல் பூதத்திடம் பேசத் தொடங்கினான்.
“ஏய் முட்டாள் பூதமே, நீ என்ன பலசாலியா?. நான் உன்னிடம் இருக்கும் இளவரசியை மீட்டுக் கொண்டு போக வந்துள்ளேன்.” என்றான்.
அதற்கு பூதம் “அடேய், பொடிப் பயலே, என்னுடைய பலம் பற்றி உனக்குத் தெரியாது. நான் சுதந்திரமாக இருக்கும்போது என்னுடைய உருவுத்தை மிகவும் பெரிதாக்கவும் முடியும். அதே நேரத்தில் மிகவும் சிறிதாக்கவும் முடியும்” என்றது.
“இந்த வெட்டிப் பேச்சு எல்லாம் என்னிடம் வேண்டாம். நீ சொன்னது போல் என்னிடம் செய்து காட்டினால்தான் நான் நம்புவேன்.” என்றான்.
“இதோ, இப்போதே செய்து காட்டுகிறேன் பார்” என்றபடி தன்னுடைய உருவத்தை மலைபோல் பெரிதாக மாற்றியது.
“சரி உன்னுடைய உருவத்தை எறும்பின் அளவிற்கு மாற்று பார்க்கலாம்” என்றான் மாறன்.
“இதோ” என்றபடி எறும்பின் அளவிற்கு தன்னுடைய அளவினை பூதம் மாற்றியது.
இதுதான் சமயம் என்று மாறன் எறும்பின் அளவிற்கு இருந்த பூதத்தைப் பிடித்து சீசாவில் அடைத்து விட்டான்.
சுதந்திரம் இல்லாமல் அடைபட்ட பூதத்தால் தன்னுடை பழைய அளவிற்கு திரும்ப இயலவில்லை.
இளவரசியுடனும் பூத சீசாவுடனும் அரசனை கண்டான் மாறன். நடந்தவைகளைக் கூறினான். அரசன் அவனைப் பாராட்டி இளவரசியை திருமணம் முடித்து வருங்கால அரசனாக்கினான்.
புத்தி சாதுர்யத்துடன் கூடிய செயல்பாடு என்றைக்கும் வெற்றி அளிக்கும் என்பதை அறிவு தந்த வெகுமதி கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.