அலைபேசி அரக்கன் பிடியில், இன்றைய இளைய தலைமுறையினர் சிக்கி தவிப்பதைக் கண்டு என்னுடைய மனம் வருந்துகிறது.
தற்காலத்தில் அலைபேசியினால் நடக்கின்ற அல்லல்களைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாமல் இந்த கட்டுரையை உங்களுக்காகச் சமர்ப்பிக்கின்றேன்.
காலை வேளை நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்து நிலையம் வந்தேன்.
அங்கே நடந்த கூத்து.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் செல்போனை வைத்திருந்தனர்.
சிலரின் காதில், சிலரின் கையில் போன் இருந்தது.
சிலர் விரலை வைத்து பற்களைத் தேய்ப்பது போல் போனைத் தேய்த்தனர். சிலர் பாடல் கேட்டனர். யாருடைய தலையும் நிமிரவில்லை.
பாரதி சொன்ன நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை எங்கே?
என்ன கொடுமை?
பேருந்து வந்ததும் அவர்களுடன் நானும் ஏறி அமர்ந்தேன்.
யாரும் சட்டைப் பையில் செல்போனை வைக்கவில்லை. பேருந்து நிலைய நிகழ்வுகள் பேருந்தில் மீண்டும் தொடர்ந்தன. பேசுவதற்கு மட்டுமான செல்போன் இருந்தபோது இந்த அவலங்கள் இல்லை.
பேருந்தை விட்டு இறங்கி தெருவிற்குள் நடந்தேன். செல்போனில் பேசியபடியே ஒருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றார்.
ஒரு வீட்டின் வாயிலில் குழந்தைக்கு உணவு கொடுக்கும் தாய், போனில் வீடியோகால் பேசிக் கொண்டே ஊட்டினார். குழந்தை முகம் முழுவதும் சாதம்.
என்ன நடக்கிறது? எங்கு செல்கிறது உலகம்?
நண்பரின் வீட்டிற்கு வந்தேன். வரவேற்று, இருக்கையில் அமர செய்தார். சுடச்சுட காபி வந்தது மணமுடன். பக்கத்து இருக்கையில் நண்பருடைய குழந்தைகள் தீவிரமாக செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்த ‘அலைபேசி அரக்கன்’ குழந்தைகளையும் விடவில்லை.
பிஞ்சு கைகளில் அலைபேசி என்னும் நஞ்சைப் பார்க்கையில் என் நெஞ்சு குமுறியது.
இததெற்கெல்லாம் ‘யார் காரணம்?’ என்று சிந்தித்தேன்.
நேரத்தையும், உடல்நலத்தையும் கெடுக்கும் அலைபேசி அரக்கன் குழந்தைகள் கையிலும், மாணவர்கள் கையிலும் எப்படி வந்தது? பெற்றோர்களால் வந்தது.
வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், அந்த நஞ்சை வாங்கி கொடுப்பதில் மகிழ்ச்சி காண்கின்றனர்.
குழந்தைகளின் எதிர்கால மகிழ்ச்சி தொலைந்து போகும் என்பது தெரியவில்லை.
என்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான்.
தயவு செய்து படிக்கின்ற மாணவர்களிடமும், குழந்தைகளிடமும் அந்த அலைபேசி அரக்கனை கொடுத்து விடாதீர்கள்.
கொடுப்பீர்கள் என்றால், உங்களின் பிள்ளைகளுக்கு நீங்களே நஞ்சைக் கொடுப்பதற்கு சமம். செய்தித்தாளைப் படியுங்கள். செல்போனால் தினமும் ஒரு விபத்து.
மாணவர்களே
படிக்கும் வயதில் வேண்டாம் அலைபேசி
புத்தகத்தை மட்டும் வாசி
தானாக உயர்வாய் மெதுவாய்
ஆகிவிடாதே, அடிமை அலைபேசிக்கு
மூழ்கிவிடாதே நேரத்தை அழிப்பதற்கு
மாறிவிடுங்கள் மாணவர்களே
மாற்றிவிடுங்கள் பெற்றோர்களே
It is true.