அழகான தீர்வு – சிறுகதை

அன்று தொலைக்காட்சியில் கண்ட செய்தி மாணிக்கத்திற்கு பேரதிர்ச்சியைத் தந்தது. பள்ளியில் படிக்கின்ற மாணவிக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை என்ற செய்திதான் அது.

அவரின் ஒரே மகள் மதியழகி பனிரெண்டாம் வகுப்பு படிக்கின்றாள். மனம் கலங்கியது மாணிக்கத்திற்கு.

“அப்பா நான் பள்ளிக்கூடம் போய்ட்டு வரேன்ப்பா” என்று துள்ளித் துள்ளி மகிழ்ச்சியாக சென்றாள் மதியழகி.

அன்றைய தினம் அம்மாவட்ட காவல்துறை பெண் அதிகாரி வருகை புரிந்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள் பற்றி விரிவாக விளக்கினார்.

மாணவிகள் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்வது எப்படி எனவும், பாதிக்கப்பட்டால் தற்கொலை முடிவை எடுக்காமல் பெற்றோரிடம் தயங்காமல் கூற வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.

அந்த பள்ளியில் பணியாற்றக்கூடிய உடற்கல்வி ஆசிரியர் கதிர்மணி ஜாலியான மனிதர்.

விளையாட்டு பீரிய‌டு என்றாலே மாணவ,மாணவிகளுக்கு மகிழ்ச்சிதான். விளையாட்டு மட்டுமல்லாமல் யோகா, கராத்தே, உடற்பயிற்சி என பலவிதமான கலைகளைக் கற்றுத்தருபவர் கதிர்மணி.

ஒருநாள் மாலை பள்ளியில் விளையாட்டு பீரியடின்போது மதியழகியை கதிர்மணி தனியாக அழைத்து பேச்சுக் கொடுத்தார்.

“என்ன மதியழகி, இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க! என்ன விஷயம்?” என ஜாலியாக பேசினார்.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல சார்” என மதியழகி கூறியதும் பள்ளி விடும் மணி அடித்தது.

“நாளைக்கு காலைல கொஞ்சம் சீக்கிரம் வரமுடியுமா மதியழகி? உனக்கு உடற்பயிற்சி பற்றி சொல்லித் தரேன்.” என ஆசிரியர் கூற, மதியழகி “முடிஞ்சா வரேன் சார்” என கூறி விட்டு புத்தகப்பையை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள்.

தினந்தோறும் பள்ளியில் நடந்த வகுப்புகள், நிகழ்வுகளை அவளின் தந்தை மாணிக்கம் மகளிடம் கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். அன்று மதியழகியிடம் இன்றைய தினத்தைப் பற்றி கேட்டார்.

அப்பொழுது ஆசிரியர் கதிர்மணி பேசிய நிகழ்வையும், காலையில் சீக்கிரம் வரசொன்னார் என்பதையும் கூறினாள்.

அதிர்ச்சியில் உறைந்துபோன மாணிக்கம் நிதானமாக தன் மகளிடம் ஒரு யோசனையைக் கூறினார். அடுத்த நாள் பள்ளிக்கு எப்போதும் போல சென்றாள் மதியழகி.

“மதியழகி, நான் சொன்னதை மறந்துவிடாதே” என மாணிக்கம் சொல்ல, “சரிப்பா” என மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றாள்.

வழிபாட்டுக் கூட்டம் முடிந்ததும் கதிர்மணி ஆசிரியர் மதியழகியைக் கூப்பிட்டு “என்ன இன்னைக்கு சீக்கிரம் வர சொன்னேன். வரவேயில்ல” என்றார்.

“இல்ல சார், சாப்பாடு செய்ய லேட்டாயிடுச்சு” என்றாள்.

“சார் நீங்க எங்க மேல எவ்வளவு அக்கறை எடுத்து எல்லாமே சொல்லித் தர்றீங்க, அதனால உங்கள நான் அப்பான்னு கூப்பிடவா சார்” என சொன்னாள்.

கதிர்மணி ஆசிரியருக்கு தீயில் விரல் விட்டதைப்போல் சுருக்கென்று உள்ளம் சுட்டது.

“சரிம்மா அப்படியே கூப்பிடு” என்றார்.

“சரிப்பா, நான் வகுப்புக்கு போறேன்.” என கூறி சென்றாள்.

ஆசிரியரின் மனதில் இருந்த கறை நீங்கியது.

மதியழகி அப்பா என அழைப்பதை அறிந்த அனைத்து மாணவர்களும், அப்பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் “அப்பா, அம்மா” என அழைத்தனர்.

ஒருநாள் பள்ளிக்கு ஆய்வு செய்ய கல்வி அதிகாரி வருகை புரிந்தார். அப்போது மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களை அப்பா, அம்மா என அழைப்பதைக் கண்ட அவர் அனைவரையும் பாராட்டினார். இந்நிகழ்வு செய்தித்தாளிலும் தொலைக்காட்சியிலும் செய்தியாக வெளிவந்தது.

இதனை அறிந்த அரசு அனைத்துப் பள்ளிகளிலும் இதனைப் பரப்பியது.

அன்று முதல், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்களை “அப்பா, அம்மா” என மாணவர்கள் அழைப்பது வழக்கமானது.

மாணவர்களை தன் மகளாக,மகனாக ஆசிரியர்கள் உணர்ந்தனர். தவறான பார்வை வெயில் பட்ட பனி போல விலகியது.

பள்ளியில் அன்பும் ஆதரவும் பெருகியது. பொறுப்பற்ற ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்தனர். ‘ஆசிரியர் பணி அறப்பணி மட்டுமல்ல; அன்பான பணி’ என்பதையும் உணர்ந்து பணியாற்றத் தொடங்கினர்.

அன்றிலிருந்து மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை என்ற வாக்கியமே மறைந்தது. இந்த அழகான தீர்வை அனைத்து ஆசிரியர்களும் மனதார ஏற்று சிறப்புடனும் மகிழ்வுடனும் பணியாற்றினர்.

பெற்றோருடன் இருப்பதைவிட அதிக நேரம் மாணவர்கள் ஆசிரியர்களுடனே இருக்கின்றனர். எனவே ஆசிரியர்களே பள்ளியில் பெற்றோராக திகழ்கின்றனர்.

அதனால் மாணவர்களை காக்க வேண்டிய நிலையில் வாழ்கின்றனர். வேலியே பயிரை மேய்வதாக இல்லாமல், பயிரைக் காப்பதற்கே பயன்பட வேண்டும். இந்த அழகான தீர்வு அனைத்துத் தவறினையும் சரி செய்வதாக அமையும்.

மாணிக்கம் என்ற அப்பா போல அனைத்துப் பெற்றோர்களும் பள்ளிவிட்டு மாணவர்கள் வீட்டிற்கு வந்ததும், கொஞ்சம் நேரம் ஒதுக்கி அன்றைய தினம் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டால், எந்த நிலையிலும் தங்கள் மகன் / மகளின் சிக்கல்களைத் தீர்க்க முடியும்.

ஆசிரியரும் பெற்றோரும் இணைந்தால் அழகான தீர்வுகளை அருமையாக எடுக்கலாம். கடமையை உணர்வோம்; சிக்கல்களைத் தீர்ப்போம்.

கி.அன்புமொழி

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்

One Reply to “அழகான தீர்வு – சிறுகதை”

  1. ஐயா! ஆசிரிய​ரை அப்பா என்று அ​ழைப்ப​தை விட, தந்​தை​ குழந்​தையிடம் நண்பனாக பழக ​வேண்டும்.
    அது​போல குழந்​தையும் தன் தந்​தையிடம் நண்பனாக பழக ​வேண்டும்.
    அப்​போது தான் விடிவு!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.