அழகுசாதனப் பொருட்களின் கோரமுகம் பற்றி தெரியுமா?

அழகுசாதனப் பொருட்களின் கோரமுகம் பற்றி நாம் எல்லோரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களாகிய நாம் எல்லோரும் அழகாக இருக்கவே விரும்புகிறோம். அழகு தன்னம்பிக்கையை அளிக்க கூடியதும் கூட.

நம்முடைய அழகினைக் கூட்ட நம்முடைய அன்றாட வாழ்வில் பற்பசை முதல் வாசனைத் திரவியம் வரையிலான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறோம்.

பண்டைய நாட்களில் வேம்பு, ஆலக்குச்சிகளையே பல் துலக்க பயன்படுத்தினர்.

எள்ளுச் செடியின் இலைகளைப் பறித்து கசக்கி தலையில் தேய்த்து பின்னர் நண்டுக்குழி மண்ணினை தலைக்கு இயற்கை ஷாம்புவாகப் பயன்படுத்தினர்.

சீகைக்காயையும் தலைமுடியை அலசப் பயன்படுத்தினர்.

சவ்வாதுப் பொடியை வாசனைத் திரவியமாக உபயோகித்தனர்.

நகங்களுக்கு மருதாணி இட்டனர்.

இன்றைக்கோ நாம் பல்துலக்க, குளிக்க, வாசனை உண்டாக்க பற்பசை, சோப், ஷாம்பு, பாடி ஸ்பிரே ஆகியவற்றை உபயோகிக்கின்றோம்.

இந்த அழகுசாதனப் பொருட்கள் நமக்கு அழகினை மட்டும் தருவதில்லை. நம்முடைய உடல்நலத்திற்கும், சுற்றுசூழலுக்கும் பேராபத்தினை உண்டாக்குகின்றன என்பதே முற்றிலும் உண்மை.

அழகுசாதனப் பொருட்களின் கோரமுகம் பற்றி அறியாமல், அதனுடைய‌ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அழகுசாதனப் பொருட்களின் நிறுவனங்களும் தங்களின் பொருட்களைப் பற்றி அதிகப்படியாக விளம்பரப்படுத்தி மக்களை ஈர்த்து, அழகுசாதனப் பொருட்களை உபயோகப்படுத்த தூண்டிக் கொண்டே இருக்கின்றனர்.

அழகுசாதனப் பொருட்களில் உள்ள வேதியியல் பொருட்களையும், அவற்றால் உண்டாகும் தீமைகளையும் இப்பொருட்களுக்கு மாற்றாக எதனை உபயோகிக்கலாம் என்பதையும் இக்கட்டுரையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏனெனில் வாடிக்கையாளர்களிடம் ஏற்படும் மாற்றம் விற்பனையாளர்களையும், உற்பத்தியாளர்களையும் யோசிக்க வைக்கும் அல்லவா?

அழகுசாதனப் வேதிப்பொருட்களின் தன்மைகள்

அழகுசாதனப் பொருட்களில் உள்ள வேதிப் பொருட்கள் மக்கக் கூடியவை அல்ல. ஏனெனில் இவ்வேதிப் பொருட்களை நுண்ணுயிரிகளால் சிதைக்க இயலாது.

மேலும் இவற்றின் வாழ்நாட்கள் 500-1000 வருடங்கள் ஆகும். அவற்றின் பயன்பாட்டிற்குப் பிறகும் அவ்வேதிப்பொருட்கள் அப்படியே சுற்றுசூழலில் தங்கி விடுகின்றன.

அழகுசாதனப் பொருட்களை உபயோகப்படுத்தியப் பின்னர் தண்ணீர் மூலம் வேதிப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

அவ்வேதிப்பொருட்கள் நிலத்திலோ, நீர்நிலைகளிலோ சேகரமாகி அங்கு வசிக்கும் உயிரினங்களான மண்புழு, மீன்கள் ஆகியவற்றால் உட்கொள்ளப்பட்டு, உணவுச்சங்கிலியின் மூலம் மனிதன் போன்ற மேல்நிலை உயிரிகளை சென்றடைந்து பாதிப்பை உண்டாக்குகின்றன.

நிலத்திலும் நீர்நிலைகளிலும் தங்கும் சிதைப்படாத வேதிப்பொருட்கள், அங்கு மாசுபடுத்தலை உண்டாக்குவதோடு அங்கு வசிக்கும் உயிரினங்களின் வாழ்வியலையும் பாதிக்கின்றன.

மேலும் அழகுசாதனப் பொருட்களில் உள்ள நச்சு வேதிப் பொருட்கள், வாடிக்கையாளர்கள் எளிதில் புரிந்து கொள்ள இயலாத வகையில், வேதிக்குறியீட்டால் அழகுசாதனப் பொருட்களின் வெளிப்புற அட்டையில் குறிப்பிடப்பட்டிருப்பது மற்றொரு வேதனையான விசயம்.

அழகுசாதனப் பொருட்களில் உள்ள நச்சு வேதிப்பொருட்கள்

ஒவ்வொரு வகையான அழகு சாதனப் பொருட்களிலும் வெவ்வேறு வகையான நச்சு வேதிப்பொருட்கள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

சல்பேட்டுகள்

இது பொதுவாக நுரை உண்டாக்குவதற்காக சோப்பு, ஷாம்பு, பற்பசை உள்ளிட்டவைகளில் சேர்க்கப்படுகிறது. இது நீரில் கரையும் போது கந்தக அமிலத்தை உருவாக்குகிறது.

கந்தக அமிலமானது மற்ற பொருட்களுடன் வினைபுரிந்து தீமைதரும் பொருட்களை உண்டாக்குகிறது. சல்பேட்டுகள் பெட்ரோலியம் மற்றும் தாவர எண்ணெயையான பாமாயிலிலிருந்து உருவாக்கப்படுகிறது.

ட்ரைக்ளோசன்

டியோடரன்டுகள், ஆன்டி பாக்டீரியல் சோப்புகள், சலவை சோப்புகள் ஆகியவற்றில் இது பாக்டீரிய எதிர்ப்பு பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.

இது உயிரினங்களின் எதிர்ப்பாற்றலுக்கு எதிராகச் செயல்படுவதோடு நீரில் அதிக நாட்கள் நீடித்திருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

இது நீரில் கரைந்து நீரில் வசிக்கும் உயிரினங்களான மீன், நீர்வாழ் தாவரங்கள், இருவாழ்விகள் ஆகியவற்றின் உயிர்வேதித் தன்மையை மாற்றி விடுகிறது.

விரைவில் சிதைவடையாத இது, சுற்றுச்சூழலில் அதிகளவு சேகரமாகி மற்ற வேதிப்பொருட்களுடன் வினைபுரிந்து நச்சுத்தன்மை கொண்ட டையாக்ஸின்களை உருவாக்குகிறது.

டை-பியூடைல் பெத்தலேட்

நெயில் பாலிஷ்களில் நெகிழும் தன்மைக்காகவும், எளிதில் உடைந்து போகாமல் இருக்கவும் இது சேர்க்கப்படுகிறது.

இது நீர்வாழ் உயிரினங்களின் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு நச்சுப் பொருளாகவும் செயல்படுகிறது.

ப்யூடிலேட்டட் ஹைட்ராக்ஸி அனிசோல் & ப்யூடிலேட்டட் ஹைட்ராக்ஸி டொலுவீன்

இவை முகஅலங்காரப் பொருட்கள் மற்றும் சானிட்டைசர்களில் பாதுகாப்புப் பொருளாகப் பயன்படுத்தப் படுகின்றன.

இவை இருவாழ்விகளின் ஜீன்களில் பிறழ்வுகளை உண்டாக்குவதோடு நீர்நிலைகளை நச்சாக்குகின்றன.

பாலிதீன் கிளைக்கால்

குளியல் சோப், பற்பசை, ஃபேஸ் வாஷ் ஆகியவற்றில் காணப்படும் இது ஒருவகையான பிளாஸ்டிக்கைச் சார்ந்தது. விலங்குகள் இதனை உட்கொள்ள நேர்ந்தால் அது மரணத்தில் முடியும்.

ஆக்ஸிபென்சோன்

இது பொதுவாக சன் ஸ்கிரீன் லோஷன்களில் காணப்படுகிறது. இது கடல் சுற்றுசூழலை பெரிதும் பாதிக்கிறது. கடலில் உள்ள பவளப்பாறைகளையும், அதில் உள்ள நுண்ணுயிரிகளையும் அழிக்கிறது.

செயற்கை வாசனைத் திரவியங்கள்

செயற்கை வாசனைத் திரவியங்கள் ஷாம்பு, சோப், கிரீம்கள், மாஸ்டரைசர்கள், சன் ஸ்கிரீன் லோசன்கள் ஆகியவற்றில் வாசனைக்காக சேர்க்கப்படுகின்றன.

இவை நீர்வாழ் உயிரினங்களின் செல்களின் நோய் தடுப்பாற்றலைக் குறைத்து விடுகின்றன.

மைக்ரோ பிளாஸ்டிக் உருண்டைகள்

மைக்ரோ பிளாஸ்டிக் உருண்டைகள் சோப், ஃபேஸ் வாஷ், பற்பசை உள்ளிட்ட பல அழகுசாதனப் பொருட்களில் காணப்படுகின்றன. எளிதில் மக்காத இவை நச்சாகி நீர் மற்றும் நிலத்தினை மாசுபடுத்தி உணவுச்சங்கிலியில் புகுந்து உயிரினங்களுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன.

அழகுசாதனப் பொருட்களால் ஏற்படும் சுற்றுசூழல் சீர்கேடுகள்

பெரும்பாலான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அதனுடைய டப்பாக்கள் மறுஉபயோகமோ, மறுசுழற்சியோ செய்ய முடியாதவைகளாகவே உள்ளன.

எடுத்துக்காட்டாக வைப்ஸ், காட்டன் பேட், பாடி ஸ்பிரே டப்பாக்கள் ஆகியவற்றைக் கூறலாம்.

காடழிப்பு

ஷாம்பு, சோப், பற்பசை போன்ற அழகுசாதனப் பொருட்களில் நுரைத்தலுக்கு அதிகளவு பாமாயிலே உபயோகப்படுத்தப்படுகிறது.

ஏனெனில் பாமாயில் விலை குறைவாகவும், எளிதாகவும் கிடைக்கிறது. பாமாயில் அதிகளவு இந்தோனேசியா மற்றும் மலேசிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது.

இந்தோனேசியா மற்றும் மலேசிய நாடுகளில் பாமாயில் எண்ணெய் பெறுவதற்காக மழைக்காடுகளை அழித்து பாமாயில் பனையை பயிர் செய்கின்றனர்.

இதனால் காடழிப்பும், காட்டினை புகலிடமாகக் கொண்ட உராங்குட்டான்கள், யானைகள், காண்டாமிருகங்கள் உள்ளிட்ட விலங்குகளும் அருகி வருகின்றன.

டியோடரன்டு, ஆன்டிபெர்ஸ்பிரண்ட் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் மரக்கூழால் தயார் செய்யப்பட்ட அட்டைகளில் பேக்கேஷ் செய்யப்பட்டுள்ளன. மரக்கூழாலான அட்டைப்பெட்டிகள் தயார் செய்ய நிறைய மரங்கள் அழிக்கப்படுகின்றன.

மேலும் இயற்கைப் பொருட்களாலான அழகுசாதனப் பொருட்களின் தேவை அதிகமாக இருப்பதால் இயற்கை அழகுசாதனப் பொருட்களுக்காக தாவரங்கள் அழிக்கப்படுகின்றன.

ஆனால் ஒன்றிரண்டு இயற்கைப் பொருட்களோடு செயற்கைப் பொருட்கள் சேர்க்கப்பட்டே அழகுசாதனப் பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன என்பதே வேதனையான உண்மை.

நிலமாசுபாடு

பெரும்பாலும் அழகுசாதனப் பொருட்கள் பிளாஸ்டிக்கால் ஆன டப்பாக்களிலேயே அடைத்து விற்கப்படுகின்றன. காலியான டப்பாக்கள் நிலமாசுபாட்டினை உண்டாக்குகின்றன.

மேலும் உபயோகித்த வைப்ஸ், காட்டன் பேட் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களின் கழிவுகள் சிதைவுறாமல் நிலமாசுபாட்டினை உண்டாக்குகின்றன.

உயிரினங்களில் உண்டாகும் பாதிப்பு

எளிதில் மக்காத அழகுசாதனப் பொருட்களின் கழிவுகள் நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிர்களில் தொற்று நோய், ஜீன் பிறழ்வு, ஹார்மோன் மாற்றம், புற்றுநோய் மற்றும் மரணம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

பருவநிலை மாற்றம்

அழகுசாதனப் பொருட்களின் கழிவுகள் எளிதில் மக்காமல் தண்ணீருடன் கலந்து அசுத்தமாகி அமில மழை, ஓசோன் பாதிப்பு உள்ளிட்ட சுற்றுசூழல் பாதிப்புகளை உண்டாக்கி பருவநிலை மாற்றத்திற்கு காரணமாகிறது.

அழகுசாதனப் பொருட்களின் கோரமுகம் மிகவும் பயங்கரமானதோடு, ஆரோக்கியமான சுற்றுசூழல் எதிர்காலத்தை பற்றி யோசிக்கவும் வைத்துள்ளது.

வைப்ஸ் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிருங்கள்.

சன் ஸ்கிரீன் லோஷன் பயன்பாட்டினை தவிர்க்கவும். முடியவில்லை எனில் டைட்டானியம்-டை-ஆக்ஸைடு, துத்தநாக ஆக்ஸைடு உள்ள சன் ஸ்கிரீன் லோஷனை வாங்குங்கள். இது உடல்நலத்திற்கு சிறந்தது இல்லை என்றாலும், சுற்றுசூழலை அவ்வளவாக பாதிப்பதில்லை.

மறுசுழற்சி செய்யக் கூடியவைகளில் உள்ள அழகுசாதனப் பொருட்களை மட்டுமே வாங்குகள். மைக்ரோ பிளாஸ்டிக் உருண்டைகள் உள்ள பொருட்களைத் தவிருங்கள்.

முடிந்தளவு உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் செயற்கை அழகுசாதனப் பொருள்களைத் தவிருங்கள்.

தேங்காய் எண்ணெய், சீகைக்காய், மருதாணி, சோற்றுக் கற்றாழை உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி உடல்நலத்தையும், சுற்றுசூழலையும் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு மாசற்ற பூமியை பரிசாக்குவது நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.

வ.முனீஸ்வரன்

 

One Reply to “அழகுசாதனப் பொருட்களின் கோரமுகம் பற்றி தெரியுமா?”

  1. நகரத்தில் இருப்பவர்களுக்கு இயற்​கையான ​பொருட்கள் கி​டைப்பது இல்​லை ஆ​கையால் தான் அவர்கள் அழகு சாதன ​பொருட்க​ளை பயன்படுத்துகின்றனர்
    இதில் இருக்கும் கருத்து மிகவும் அரு​மை

Comments are closed.