அழகு தந்த ஆபத்து

குழந்தைகளே, நாம் அழகாக இருக்கிறோம் என்று ஒரு போதும் கர்வம் கொள்ளக் கூடாது. இதனை அழகு தந்த ஆபத்து என்ற இக்கதையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

அழகிய கொம்பு

அழகிய காடு ஒன்று இருந்தது. அக்காட்டில் பல விலங்குகள், பறவைகள் வசித்து வந்தன. அதில் மான் மாரிச்சாமியும் ஒன்று.

மான் மாரிச்சாமி பரந்து கிளைத்த கொம்புகளைக் கொண்டு அழகாக இருந்தது.

ஒரு நாள் அது மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தது. அப்போது மரத்திலிருந்த கிளி கீதா மான் மாரிச்சாமியிடம் “மான் மாரிச்சாமி அண்ணே உன்னுடைய கொம்பு உனக்கு அழகைத் தருகிறது. நீ அதனைக் கொண்டு கம்பீரமாகத் திகழ்கிறாய்.” என்றது.

இதனைக் கேட்டதும் மான் மாரிச்சாமி மகிழ்ச்சியால் துள்ளித் குதித்தது. தன் அழகினைக் காண்பதற்காக நதிக்கரையோரமாகச் சென்றது.

நதியில் உள்ள நீரில் தன் கொம்பினைப் பார்த்து ரசித்தது.

 

அழகில்லாத கால்கள்

நதியின் நீரில் மானின் நீண்ட ஒல்லியான கால்கள் தெரிந்தன.

அதனைக் கண்ட மான் மாரிச்சாமி ‘எனக்கு நீண்ட அழகான கொம்புகளைக் கொடுத்த இறைவன், இந்த குச்சியான அழகில்லாத கால்களைக் கொடுத்து விட்டாரே’ என்று மனதிற்குள் வருந்தியது.

 

அழகு தந்த ஆபத்து

மிகுந்த வருத்தத்துடன் அது நதிக்கரையை விட்டு வெளியேறி, புல்வெளியில் நடந்து கொண்டிருந்தது. அப்போது சிங்கம் சின்னராசு மானைப் பார்த்தது.

பசியால் வருந்திய சிங்கம் சின்னராசு மான் மாரிச்சாமியை துரத்தத் தொடங்கியது. மான் மாரிச்சாமியும் சிங்கம் சின்னராசுவிடம் தப்பிக்க எண்ணி புல்வெளியைத் தாண்டி மரங்கள் அடர்ந்த காட்டிற்குள் ஓடியது.

அப்போது எதிர்பாராத விதமாக மான் மாரிச்சாமியின் அழகிய கொம்புகள் மரத்தில் மாட்டிக் கொண்டது. ஆதலால் மான் மாரிச்சாமியால் தொடர்ந்து ஓட முடியவில்லை.துரத்திய சிங்கம் சின்னராசு மான் மாரிச்சாமியை நெருங்கியது.

மான் மாரிச்சாமி ‘குச்சியான அழகில்லாத கால்களே என்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றின. நீண்ட அழகிய கொம்புகள் மரத்தில் சிக்கி எனக்கு ஆபத்தை உண்டாக்கி விட்டன.

இறைவனின் படைப்பினைக் குறைத்து மதிப்பிட்டு விட்டேனே. இன்று எனக்கு அழகு ஆபத்தை உண்டாக்கி விட்டது.’ என்று மரணத் தருவாயில் மனதிற்குள் வருந்தியது.

இக்கதை உணர்த்தும் கருத்து

அழகு என்று நாம் கர்வம் கொள்ளும்போது அது ஆபத்தினைக் கொடுக்கும். அழகற்றவையும் நமக்கு நன்மை தருபவையாக இருக்கலாம்.

ஒரு பொருளை அதன் அழகை வைத்துப் போற்றுவதைவிட அதன் பயனை வைத்துப் போற்றுவதே சிறந்தது.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.