அழகு தரும் கழுதை பால்

கழுதை பால் அழகு தரும் என்று நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உலகின் பேரரழகி என்று வர்ணிக்கப்படும் கிளியோபட்ரோ தன் மேனியின் அழகினைப் பாதுகாக்க கழுதை பாலில் குளித்தாள் என்பது செவிவழிச் செய்தியாகும்.

கழுதை பாலின் மருத்துவ பயன்பாடு பற்றி மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போக்ரட்டீஸ் கூறியுள்ளார்.

பழங்காலத்தில் சிறுகுழந்தைகளின் உணவாகவும், சருமத்தினைப் பாதுகாக்கும் பொருளாகவும் கழுதை பாலானது பயன்படுத்தப்பட்டது.

தற்போது கழுதை பாலிலிருந்து தயார் செய்யப்பட்ட சாக்லேட் முதல் வெண்ணெய் வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

கழுதை பாலினை பற்றிய வரலாறு

பழங்கால எகிப்தில் உணவு மற்றும் அழகுக்காக கழுதை பாலானது பயன்படுத்தபட்டது. ரோமானிய சகாப்தத்தில் கழுதை பாலானது நோய்களைத் தீர்க்கும் பொதுவான மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டதாக பிளினி குறிப்பிட்டுள்ளார்.

பிரஞ்சு இயற்கையாளரான லூயிஸ் லெக்லர்க் கழுதை பாலின் நன்மைகள் குறித்து தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

நெப்போலியனின் சகோதரியான பவுலின் போனபர்டே தனது சருமத்தின் அழகினைப் பாதுகாக்க கழுதை பாலினை பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாயற்ற பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக கழுதை பாலானது கொடுக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டு வரை கழுதை பாலானது அனாதைக் குழந்தைகளுக்கான உணவாகவும், நோய்வாய்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும் உட்கொள்ளப்பட்டது.

ஆதலால் இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகளில் கழுதை வளர்ப்பு பண்ணை உருவானது.

 

கழுதை வளர்ப்பு பண்ணை
கழுதை வளர்ப்பு பண்ணை

 

எகிப்திய பேரரழகி கிளியோபட்ரோ தன்னுடைய சரும இளமை மற்றும் அழகிற்காக கழுதை பாலில் குளித்தாள். அவளின் தினசரி குளியலுக்கு சுமார் 700 கழுதைகளின் பால் தேவைப் பட்டதாகக் கூறப்படுகிறது.

ரோமானிய பேரரசர் நீரோவின் இரண்டாவது மனைவியான பாப்பையா சபீனா பிளினியின் குறிப்பினைப் பின்பற்றி கழுதை பாலை தன் மேனியின் அழகினைப் பாதுகாக்க பயன்படுத்தினாள்.

ரோமன் கவிஞர் ஓவித் கழுதை பாலினை முகத்தில் தடவ முகம் பிரகாசிக்கும் என தனது கவிதை வரிகளில் குறிப்பிடுகிறார்.

போரினால் உடல்நலம் குறைந்த பிரெஞ்சு மன்னான பிரான்கோஸ் கானஸ்டான்டிநோபிளைச் சார்ந்த மருத்துவரின் அறிவுரையின்படி கழுதை பாலை உட்கொண்டு உடல்நலம் பெற்றான்.

கழுதை பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கழுதை பாலில் விட்டமின் ஏ, பி1(தயாமின்), பி2 (ரிபோஃப்ளோவின்), பி6(பைரிடாக்ஸின்), டி, இ, சி ஆகியவை உள்ளன.

மேலும் இதில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற தாதுஉப்புகள் காணப்படுகின்றன.

இதில் இம்யுனோக்ளோபுலின்ஸ்களான லோக்டோஃபெரின், லோக்டோபெர்ராக்சிடேஸ், லைசோசைம் போன்றவைகளும் உள்ளன. இது புரதச்சத்து மற்றும் குறைந்த கொழுப்புச் சத்தையும், கொண்டுள்ளது.

கழுதை பால் மருத்துவ பண்புகள்

குழந்தைகளுக்கு ஏற்றது

கழுதை பாலானது தாய்ப்பாலினைப் போன்ற பிஎச் மதிப்பினைக் கொண்டுள்ளது. ஆதலால் இது குழந்தைகளுக்கு ஏற்றது. தாய்பாலின் பிஎச் மதிப்பு 7-7.5. கழுதைபாலின் பிஎச் மதிப்பு 7-7.2 ஆகும்.

ஆகவே பசும்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு கழுதை பால் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

ஆரோக்கிய உணவு

கழுதை பாலானது குறைந்த கொழுப்பையும், கேசினையும் கொண்டுள்ளதால் இது நன்கு செரிமானமாகிறது.

இது தாதுஉப்புக்கள், விட்டமின்கள், புரதங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு குடலின் மீளுருவாக்கத்திற்கும் உதவுகிறது.

ஆகவே கழுதை பாலுக்கு ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் இடம் உண்டு.

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க

கழுதைபாலில் காணப்படும் நுண்ஊட்டச்சத்துக்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. எனவே சீரான உடல்வளர்ச்சிதை மாற்றம் ஏற்பட கழுதை பாலினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சருமக்கோளாறுகளை சரிசெய்ய

சருமநோய்கள், சருமஅழற்சி, சோரியாஸிஸ், பருக்கள் ஆகியவற்றால் அவதியுறுபவர்கள் கழுதை பாலினை உபயோகிக்க அதில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பண்பினால் சரும நோய்கள் சரிசெய்யப்படுகின்றன.

மேலும் இதில் உள்ள மாய்ஸசரைசர் பொருட்கள் சருமத்தினை புதுமையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகின்றன.

மலச்சிக்கலைப் போக்க

கழுதை பாலானது நன்கு செரிமானம் ஆவதுடன் மலச்சிக்கலையும் போக்கக் கூடியது. எந்த வயதினரும் இப்பாலினை உண்டு மலச்சிக்கலுக்கு தீர்வினைப் பெறலாம்.

கல்லீரல் நச்சுஅழற்சியினைப் போக்க

கழுதை பாலானது கல்லீரலில் உண்டாகும் நச்சுஅழற்சியினைப் போக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்லீரல் பாதிப்புடையவர்கள் இப்பாலினை உண்டு நிவாரணம் பெறலாம்.

சுவாச கோளாறுகள் நீங்க

கழுதை பாலானது இருமல் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களைப் போக்க உதவுகிறது.

வெதுவெதுப்பான கழுதை பாலினை அருந்தும் போது தொண்டடைக் கட்டு முதலில் சரியாகி பின் படிப்படியாக இருமல் குறைகிறது.

தொடர்ந்து ஒரு மாதம் இதனை அருந்தும்போது சுவாச கோளாறுகள் சரியாகின்றன.

நோய்எதிர்ப்பு பண்பினை அதிகரிக்க

கழுதை பாலில் உள்ள இம்யுனோக்ளோபுலின்ஸ்கள் பாக்டீhயா, வைரஸ், பூஞ்சை ஆகியவற்றை தடுக்கும் நோய்எதிர்க்கும் பண்பினைக் கொண்டுள்ளன.

மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய்எதிர்ப்பு ஆற்றலை வழங்குகின்றன. எனவே கழுதை பாலினை உண்டு நோய்எதிர்ப்பாற்றலை அதிகரிக்கலாம்.

ஒமேகா-3-ன் மூலம்

கழுதை பாலில் ஒமேகா-3 அதிகம் உள்ளது. இது எதிர்ப்பு அழற்சி பண்பினை அதிகப்படுத்துவதோடு இதய நோயிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.

ஒமேகா-3 மூளையின் செயல்பாட்டினை அதிகரிப்பதோடு ஞாபகத்திறனையும் மேம்படுத்துகிறது.

கழுதையானது ஒருநாளைக்கு சராசரியாக ஒரு லிட்டர் பால் கொடுக்கிறது. எனவே இதன் விலை அதிகமாக உள்ளது.

தற்போது கழுதை பாலில் தயார் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

நலம் மற்றும் அழகு தரும் கழுதை பால் உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.