மாட்டுத் தொழுத்தில் கட்டியிருந்த பசுமாடு நிமிடத்திற்கு ஒருமுறை அடித்தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தது. ஈன்று ஓரிரு மாதங்களே ஆகியிருந்தது.
கன்றுக் குட்டியை அதன் அருகிலேயே சற்றுத் தள்ளிக் கட்டியிருந்தார்கள். இருந்த இடத்திலிருந்து நகர முடியாமல் கன்றுக் குட்டியும் பசுவின் குரலுக்கு எதிர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.
புழக்கடை பக்க கதவைத் திறந்து கொண்டு தொழுவத்திற்குள் வந்தார் பார்த்தசாரதி – மோகனின் தந்தை. அதிகாலை நேரம், பசுமாட்டின் அருகில் வந்தவர் அதைத் தட்டிக் கொடுத்து முதுகைத் தடவினார்.
கொஞ்ச நேரம் தாஜா செய்தால்தான் ஒழுங்காகப் பால் கறக்க முடியும். பாலைக் கறந்தவுடன்தான் கன்று குட்டியை அவிழ்த்துவிட முடியும்.
பார்த்தசாரதி பால் கறந்ததும் கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட, அது துள்ளிக்குதித்துக் கொண்டு பசுவின் அருகில் ஆசையுடன் சென்று மடியில் புதைந்து கொண்டது. முட்டி, முட்டி எஞ்சியிருந்த பாலை அது உறிஞ்ச, பசு வாஞ்சையுடன் தன் நாவால் அதைத் தடவிக் கொண்டிருந்தது.
டூத் பேஸ்ட், பிரஷ் சகிதம் பின்புறம் பல் துலக்க வந்த மோகன் இக்காட்சியில் லயித்துப் போனான். பல் துலக்கியவாறே சிந்தனையில் ஆழ்ந்தான். பப்லு மனதில் தோன்றி இம்சைபடுத்தினான்.
உள்ளம் கனக்க வீட்டிற்குள் திரும்பியவன் பெட்ரூமில் ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருந்த சியாமளாவை ஒருவித வெறுப்புடன் நோக்கினான்.
இந்த பசுவுக்கும், இவளுக்கும் எவ்வளவு வித்தியாசம்?
ஐந்தறிவு தான் அதற்கு. ஆறறிவு படைத்த மனிதர்களிடம் இல்லாத அன்பும் நட்பும் பாசமும் வாஞ்சையும் அதனிடம் இருக்கிறது.
எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் பப்லுவை தன் தாய் வீட்டில கொண்டு போய் விட்டு வந்திருக்கிறாள்.
நான்கு வயது வரை அங்குதான் அவன் வளர வேண்டுமாம். அவன் இங்கு வர முழுசாக இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன.
பப்லு பிறந்த ஆறு, ஏழு மாதங்களிலே புட்டிப்பால் கொடுக்கத் துவங்கி விட்டாள். அதே ஊரில் அரைமணி நேரப் பயணத் தொலைவிலேயே இருக்கும் அவளது தாய் வீட்டில் பப்லு வளர்ந்து வருகிறான்.
வேலைக்குச் சென்றால் என்ன? குழந்தையை தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாதா என்ன? என்ன வசதிக் குறைச்சல் இங்கே?
‘நாகரீகம்’ என்ற பெயரில் பாசம், பந்தம், அன்பு போன்றவைகளை எல்லாம் வலுக்கட்டாயமாக சியாமளா போன்றவர்கள் குழிதோண்டிப் புதைப்பதாகவே பட்டது மோகனுக்கு.
குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரியாதவர்கள் எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
இவள் எல்லாம் ஒருதாய் என சொல்லிக் கொள்ளவே யோக்கியதை இல்லை. நினைக்க, நினைக்க மனம் பாறாங்கல்லாய் கனத்தது மோகனுக்கு.
மாலை வேளைகளில் வாக்கிங் செல்லும் சமயங்களில் வேண்டுமென்றே குடிசைப்பகுதிகள் வழியாக சியாமளாவை அழைத்துச் செல்வான் மோகன்.
குடிசைவாசிப் பெண்கள் எவரைப் பற்றியும் லட்சியம் செய்யாமல், குடிசை வாசலிலேயே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து, தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டும் காட்சியைப் பார்க்கட்டும் என்றுதான்.
தெருவில் சுற்றித் திரியும் நாய்கூட, ஒரே சமயத்தில் தனது நான்கு அல்லது ஐந்து குட்டிகளுக்குப் பால் புகட்டிக் கொண்டிருக்கும். துள்ளலுடன் தன் தாய் மீது புரண்டு விளையாடி பால் அருந்தும் கொழு, கொழு நாய்க்குட்டிகள் அவர்கள் பார்வையிலிருந்து தப்பாது.
இவ்வளவு ஏன்? வீட்டிலேயே வெகுநாட்களாக வளர்ந்து வரும் பூனை தனது குட்டிகளுடன் ஆனந்தமாக வலம் வரும். அனைத்தையும் அன்றாடம் பார்த்தும், சியாமளாவுக்கு பப்லு ஞாபகம் வந்ததாகத் தெரியவில்லை.
கட்டுக்குலையாத அழகுடன் வாழ்நாள் முழுக்க திகழ முடியுமா என்ன? பெண்கள் சமுதாயம் நாளுக்கு நாள் சீரடைந்து வருகிறதென்று யார் சொன்னது?
மாதர் சங்கம் வளர்த்து, அனைவரும் ஒன்றுகூடி ஊர்க்கதைகளுடனும், வறட்டு கௌரவத்துட னும் நடந்து கொள்கிறார்கள். வியாக்கியானங்கள் பேசி, ‘அறியாமை’யைத்தான் மேலும், மேலும் வளர்த்துக் கொள்கிறார்களே தவிர, நடைமுறை வாழ்க்கையின் உன்னதம் பற்றி எங்கே தெரிந்து கொள்கிறார்கள்?
தாய்ப்பால் கொடுத்துக் குழந்தைகளை வளர்ப்பதால் வாழ்வில் கிடைக்கும் பலன்களை, தாயின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பயன்களை, குழந்தைகளின் வளர்ச்சியில் தோன்றும் நன்மைகளை பல்லாயிரம் முறை மோகன் சியாமளாவுக்கு எடுத்துரைத்தும் பயன் இல்லை.
அழகு நிலா போல திகழ ஆசை. அதற்குப் பிள்ளை ஒரு தடை என்ற எண்ணம்.
ஒருநாள் வழக்கம்போல் அலுவலகத்திலிருந்து மாலை வீடு திரும்பியதும் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக காணப்பட்டாள் சியாமளா. வந்ததும் வராததுமாகப் படுக்கையில் போய் விழுந்தாள். உடம்பெல்லாம் வெட்டி முறிக்கும் வலி.
புரண்டு, புரண்டு படுத்தாள். ஜூரம் அனலாய்க் கொதித்தது. மோகன் வந்ததும் அவள் நிலையைக் கண்டு பதறிப் போய் டாக்டரிம் அழைத்துப்போய் காண்பித்தான். அன்று இரவு முழுக்க அவளால் உறங்க முடியவில்லை.
மறுநாள் காலை எழுந்தவுடன் எதேச்சையாகத் தன்னைக் கண்ணாடியில் பார்த்தவள் திடுக்கிட்டாள். முகம் முழுக்கப் பொரி பொரியாய் வாரி இறைத்திருந்தது சின்ன அம்மை.
ஒருசில வாரங்களுக்குப் பின் குணமடைந்த சியாமளா, மீண்டும் கண்ணாடியைப் பார்த்தபோது முகம் முழுக்க சின்ன அம்மை கண்ட தழும்புகள். பார்க்கவே என்னவோ போல் இருந்தது.
நிலவு தேய்ந்து பிறையாகி, பின் அமாவாசையான நிலை. இனி எந்த ஒரு அழகு சாதனம் கொண்டும் முகத்தைப் பொலிவாக்க முடியாது. அழகு நிலவு போன்ற அவளது முகம் இப்போது விகாரமாகக் காட்சியளித்தது.
மனதில் இருந்த விகாரம் முகத்துக்கு வந்துவிட்டதை எண்ணி குமுறிக் குமுறி அழுதாள். விகார எண்ணம் மறைந்ததும் அவள் மனதில் உதயமானது ஓர் அழகு நிலா. பப்லுவை முதன் முதலாய் ஆசையாய் நினைத்துப் பார்த்தாள்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!