அழகு பேரழகு – கவிதை

எது அழகு என்று பட்டியல் கொடுக்கிறார் கி.அன்புமொழி. இந்தக் கவிதை படித்தபின் நாம் பார்க்கும் அனைத்துமே அழகாய்த் தெரிகிறது.

உன்னிலும் உண்டு அழகு
என்னிலும் உண்டு அழகு
மண்ணிலும் உண்டு அழகு
கண்ணிலும் உண்டு அழகு
உருவத்தின் அழகு அழகல்ல
உள்ளத்தின் அழகே அழகு!

பறக்கும் பறவை அழகு
பிறக்கும் குழவி அழகு
மறக்கும் தீமை அழகு
உறங்கும் இரவும் அழகு
திறக்கும் மனம் அழகு
கறக்கும் பாலும் அழகு
துறக்கும் ஆசை அழகு!

இரக்கம் இனிய அழகு
இன்பம் காண்பது அழகு
இன்றும் இத்தனை அழகு
அன்றும் அத்தனை அழகு
என்றும் உலகம் அழகோஅழகு!

தொல்காப்பியத்தின் தொன்மை அழகு
நன்னூலின் நடையும் அழகு
திருக்குறள் திகட்டா அழகு
நாலடியார் நாளும் அழகு
புறநானுற்றின் புகழ் அழகு
அகநானூற்றின் அன்பும் அழகு
நற்றிணையின் நயம் அழகு
குறுந்தொகையின் குணம் அழகு
பரிபாடலின் பரிவு அழகு
பதிற்றுப்பத்தின் பாய்ச்சலும் அழகு
கலித்தொகையின் களிப்பும் அழகு
தமிழ்தந்த யாவும் அழகு
தமிழருக்கது தனி அழகு
தாய்த்தமிழ் தரமான அழகு!

மரங்கள் நிறைந்தால் காடழகு
அறங்கள் நிறைந்தால் வீடழகு
கீற்றுப் பரந்த தென்னையழகு
காற்றுப் பரந்த திண்ணையழகு
நேற்றுப் பார்த்த உந்தனழகு
தோற்றுப் போகா கந்தனழகு
தமிழ்மொழி மொத்த அழகு!
தமிழ் எழுத்து என்றுமழகு!

வாழைபோல் வாழ்வதழகு
கோழை வீழ்வதே அழகு
இயற்கைதரும் எண்ணிலா அழகு
இயன்றதை தந்தால் நீயுமழகு
இல்லாமை தொலைவதே அழகு!
நினைக்கும் நன்றி அழகு
கனைக்கும் புரவி அழகு
அணைக்கும் தாய் அழகு
விரிக்கும் பாய் அழகு!

குரைக்கும் நாயும் அழகு
உரைக்கும் வாயும் அழகு
கரையும் காகமும் அழகு
அகவும் மயிலும் அழகு
உதவும் மனமும் அழகு
குறையும் சினமும் அழகு
நிறையும் வயிறும் அழகு
நரையின் மயிரும் அழகு
மயிலின் இறகும் அழகு!

விழிக்கும் விடியல் அழகு
உழைக்கும் கைகள் அழகு
தழைக்கும் தன்மானம் அழகு
மழையின் சாரல் அழகு
பிழையின் திருத்தம் அழகு!
வண்ணத்தில் இல்லை அழகு
எண்ணத்தில் விளைவதே அழகு!

ஓடுகின்ற ஆறும் அழகு
பாடுகின்ற குயிலும் அழகு
ஆடுகின்ற கதிரும் அழகு
வாடுகின்ற வாழ்வும் அழகு
தேடுகின்ற காலமும் அழகு
மூடுகின்ற மேகமும் அழகு!
காட்டுப் புலியும் அழகு
வீட்டு எலியும் அழகு

பாட்டுப் படிப்பதும் அழகு
கேட்டுப் படிப்பதும் அழகு
தட்டும் கைத்தட்டல் அழகு
மொட்டு விரிவதும் அழகு
விட்டுப் பிடிப்பதும் அழகு

கொட்டும் மழையும் அழகு
திட்டித் தீர்ப்பதும் அழகு
முட்டி மோதுவதும் அழகு!
பட்டம் விடுவதும் அழகு
விட்டம் தொடுவதும் அழகு
திட்டம் தீட்டுவதும் அழகு
நட்டம் இல்லாதது அழகு!

புல்லிற்கும் அழகு உண்டு
புள்ளிற்கும் அழகு உண்டு
கல்லிற்கும் அழகு உண்டு
முள்ளிற்கும் அழகு உண்டு
நெல்லிற்கும் அழகு உண்டு
சொல்லிற்கும் அழகு உண்டு
இளமைக்கும் அழகு உண்டு
முதுமைக்கும் அழகு உண்டு
எங்கும் உண்டு அழகு
எதிலும் உண்டு அழகு!

அழகில் அழகு பேரழகு
மண்ணில் வாழ்வது அழகு
மறைந்தும் வாழ்வதே பேரழகு!!

கி.அன்புமொழி

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்

One Reply to “அழகு பேரழகு – கவிதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.