ஒளிமயமான பட்டை தீட்டப்பட்ட வைரங்களை மட்டும் வைத்து ஒரு அற்புதமான மாளிகை கட்டினால் எவ்வாறு இருக்குமோ அது போன்ற தன்மையது “அழியாச் சுடர்கள்” (https://azhiyasudargal.blogspot.com) என்னும் இத்தளம்.
தமிழ் இலக்கிய உலகத்தில், தனது அயராத பணியினால், தன் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வந்தவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர்கள். அப்படைப்பாளர்களின் வரலாறு மிகப் பெரிதானதாகும்.
மாசற்ற இலக்கியங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் தந்து கொண்டிருந்த, மாபெரும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தவர்களை இனம் காட்டும் ஒரு அற்புதமான இணையதளமாக ”அழியாச் சுடர்கள்” என்னும் இத்தளம் விளங்குகிறது.
.
நவீன இலக்கியங்களின் வடிவம், கருத்தாக்கம், வெளிப்பாடு, உலக இலக்கியங்களுக்குத் தக மேன்மை அடைந்தும், மாறுபட்டும், புதுமையாக முயற்சி செய்தும் தமிழில் எழுதப்பட்டன.
அவ்வாறு எழுதப்பட்ட இலக்கியங்கள் அத்தனையையும் ஒருசேர காண வேண்டும்; கற்க வேண்டும் என்றால் அதற்குப் பயன்படும் மிகச்சரியான இணையதளமாக இத்தளம் விளங்குகிறது.
’நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்’ என்ற தாரக மந்திரத்துடன் இந்த இணையதளம் காணப்படுகிறது.
பெட்டகம் என்பதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு இந்த இணையதளம் ஆகும். காரணம், நவீன படைப்புகளினுடைய சிந்தனைகளையும் வெளிப்பாடுகளையும் இங்கு காணலாம்.
இருபதாம் நூற்றாண்டின் கடைசியில் உலகத் தரத்திற்கு இணையாகத் தமிழைக் கொண்டு சென்ற இலக்கியப் படைப்பாளிகளினுடைய மாபெரும் சங்கமம் இங்கு காணப்படுகிறது.
ஒரு தொகுப்புப் பணியாகக் காணப்பட்டாலும், இந்தப் பணி ஒரு அற்புதமான பணியாகும். காரணம், புதிதாக இலக்கியம் கற்க வருகின்ற வேற்றுமொழியாளர் ஒருவர், தமிழில் இன்று செய்து வைத்திருக்கிற இலக்கியங்களை ஆராய வேண்டும் அல்லது படிக்க வேண்டும் என்று தேடினால் இப்பெட்டகம் அதற்கு வழிவகுக்கும்.
தமிழனுடைய செம்மார்ந்த வீரம் மிகுந்த படைப்பாற்றல், படைப்புத்திறன் போன்ற நம் நவீன தமிழ் இலக்கியங்களை வெளிமொழியினர்களுக்கு இனம் காட்டிப் படிப்பித்து தெளிவடையச் செய்யும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
அ. மாதவையா, அ. முத்துலிங்கம், ராமசாமி, அசோகமித்திரன், கவிஞர் அபி, அம்பை, அழகிய பெரியவன் என்ற நூற்றுக்கணக்கானவர்களின் பட்டியலில், நவீன தமிழ்ப் படைப்பாளிகளின் ஒட்டுமொத்த படைப்பையும் அலசி ஆராய்கிற அல்லது அப்படைப்பையே வெளிக்கொண்டு வருகின்ற தன்மையைக் கொண்டு வந்திருக்கின்றது இத்தளம்.
தொகுப்புப் பணி என்றாலும், அது செம்மையான சிறப்பான பணியாக இருக்கின்றது.
உதாரணத்திற்கு, கவிஞர் அபி அவர்களின் நேர்காணல் ஒன்றும், கவிதைத் தொகுதியில் சிலவும் போடப்பட்டுள்ளன. கவிஞர் அபி அவர்களின் இலக்கிய நயங்களையும், நளினங்களையும் தெரிந்துகொள்ள இந்த இரண்டு பகுதிகள் போதுமானது.
கவிஞர் அபி அவர்களின் நேர்காணல், அவரைக் குறித்தும், அவரது சிந்தனைத்துவத்தை வெளிப்படுத்தியும், சமகால இலக்கியப் போக்கை நாம் அவதானிக்கவும் நமக்குப் பயன்படுகிறது.
ஆழமான நுட்பங்களை அந்த நேர்கானலில் உணர்ந்து கொள்ளலாம்.
கவிதைகள் குறித்த அவரின் வெளிப்பாடுகள் அலாதியானது.
அப்பேட்டியில் ஒரு கேள்வியும் பதிலும் இவ்வாறு அமைந்துள்ளது.
கேள்வி:
படிமம் விஷயத்தின் உள்ளுருவைக் காட்டும் என்கிறீர்கள், உங்கள் கவிதைகள் பேசாமலும், பேசும் விதம் இன்னதென்று அறியாமலும் பிறந்திருப்பதாகச் சொல்கிறீர்கள்.
தன்மைகளின் பிடிப்பிலிருந்து விலகும் போது அவை abstract ஆகின்றன என்கிறீர்கள். இவைகளை உங்கள் கவிதை ஒன்றின் பிறப்பைக்கொண்டு விளக்குங்கள்.
பதில்:
‘நான் இல்லாமல் என் வாழ்க்கை ‘ என்ற என் கவிதை,
நான் இல்லாமலே
என் வாழ்க்கை
எதேச்சையில்
அருத்திரண்டது
வடிவ விளிம்புகளைக்
கற்பிக்க
நான் இல்லாததால்
நீல வியாபகம் கொண்டது
எதை துறந்தோம் என்று
அறிய வேண்டாத
நிம்மதியில் திளைத்தது
உணர்வுகளின்
பொது ரீங்காரம் மட்டும்
தொடர
நிழல் வீழ்த்தாமல்
நடமாடியது
கூரைகளுக்கு மேலே
தன்மைகளின் எதிர்ப்பை
அலட்சியம் செய்து
அசைவு தெரியாமல்
பறந்து திரிந்தது
பூமியை துளைத்து
மறுபுறம் வெளிவந்தது
பிம்பங்களின் துரத்தலுக்கு
அகப்படாமல்
நுட்பம் எதுவுமற்ற
சூன்யத்தை அளைந்தது
மரணப் பாறையிலிருந்து
குதித்து விளையாடியது
காலத்தின் சர்வாதிகாரம்
புகைந்து அடங்குவதை
வேடிக்கை பார்த்தது
தத்துவச் சுமை கரைந்து
தொலைதூரத்து வாசனையாய்
மிஞ்சிற்று
எனது குறியீடுகளின்
குறுக்கீடு
இல்லாது போகவே
தன்னைத் தனக்குக்
காட்டிக் கொண்டிருப்பதையும்
கைவிட்டது
”எதையும் பிரித்துப் பார்த்தல், எதிலிருந்து விலகி தனித்தல், இருப்பதிலிருந்து விலகி இல்லாதிருத்தல் – இவை என் நிரந்தர உளச்சல்கள்.
எதிலிருந்து விலகி இல்லாதிருப்பது ? இருத்தலிருந்து. இருத்தல் எது ? இந்த வாழ்க்கை.
இந்த மாதிரியான நினைவுப் போக்கில் ஒருநாள், நான் விலகி நின்றால் என் வாழ்க்கை என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்தது.
எழுந்த கணத்தில் என் முன் என் வாழ்க்கை அனைத்துப் பரிமாணங்களிலிருந்தும் விடுபட்டு வரம்பற்ற சுதந்திரத்தோடு, பேரானந்தத்தோடு இயங்குவதைப் பார்த்தேன்.
அதற்கு வடிவம் இல்லை; தன்மை இல்லை; தன்னை உணரும் / தன் ஆனந்தம் இன்னதென உணரும் அவசியமும் இல்லை.
இந்த கவிதை உங்களிடம் எதையும் சொல்லவில்லை; நான் அதற்கு எந்தக் கருத்தையும் தயாரித்துக் கொடுக்கவில்லை; அது ஒரு உயிர் பொருளாக உங்கள் முன் நிற்கிறது.
இந்தக் கவிதையில் தனித்து விடப்பட்ட வாழ்க்கையின் இயக்கங்கள் காட்டப்படுகின்றன. அருத்திரளுதல், நீல வியாபகம் கொள்ளுதல், சூன்யத்தை அளைதல், நிழல் வீழ்த்தாமல் நடமாடுதல், தன்மைகளின் எதிர்ப்பை அலட்சியம் செய்து பறந்து திரிதல்-இந்த இயக்கங்கள் இன்னதென்று தெளிவுபடாத, நிழல்தனமான, ஒரு படிமத்தை மனத்திரையில் உருவாக்கிக் காட்டுகின்றன.
இந்த படிமம் விஷயத்திலிருந்து வேறுபட்டதன்று; விஷயமேதான் படிமம் உணர்த்துகிறது. இனிமேலும் சொல்வது கவிதை அனுபவத்தைப் பாதிக்கும்”..
எனும் பகுதி மிக அற்புதமான கேள்விப் பதிலாகும். இது சரியான புரிதலைக் குறித்ததாகும்.
கனவு அன்று கனவு எனும் கவிதைகள் அவரது மிகச்சிறந்த கவிதைத் தொகுதியாகக் கருதப்படுகிறது. அவரது காலம் எனும் தலைப்பில் அமைந்த பல்வேறு கவிதைகள் மற்றும் மாலை எனும் தலைப்பில் அமைந்த பல்வேறு கவிதைகள் இங்கு நவீன இலக்கியத்தின் சான்றாகப் பகிரப்பட்டுள்ளன.
இதேபோல், மௌனியின் சிறுகதைகள், மௌனி குறித்த கட்டுரைகள், அவரைக் குறித்த திறனாய்வுகள் இத்தளத்தில் காணப்படுகின்றன.
சி.சு.செல்லப்பாவின் சிறுகதைகள், அவரைக் குறித்த கட்டுரைகள், பெரிய அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
இவ்வாறு அளவிடமுடியாத கட்டுரைகளும், கவிதைத் தொகுப்புகளும், சிறுகதைகளும், நாவல் குறித்த திறனாய்வுகளும், படைப்புகளும் காணப்படுகின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளை ஒரே இடத்தில் அறிவதும், அவர்களின் படைப்பையும், அவர்களைக் குறித்த படைப்புகளையும் காண்பது, நவீன இலக்கியத்தைத் தேடுபவர்களுக்குச் சொர்க்கமாக கிடைத்திருப்பது இத்தளம் ஆகும்.
கவிஞர் ரவி சுப்பிரமணியனின் ஆளுமைகள் குறித்த ஆவணப் படங்கள் இத்தளத்தில் காணப்படுகின்றன. கவிஞர் ரவி சுப்பிரமணியன் அவர்கள் மிகச்சிறந்த தமிழிலக்கியப் படைப்பாளி மற்றும் ஆவணப்பட இயக்குனர் ஆவார்.
ஜெயகாந்தன் குறித்த ஆவணப்படம், மா. அரங்கநாதன் குறித்த ஆவணப் படம், இந்திரா பார்த்தசாரதி குறித்த ஆவணப்படம், சேக்கிழார் அடிப்பொடி குறித்த ஆவணப்படம், திரிலோகம் என்று ஒரு கவி ஆளுமை எனும் ஒரு ஆவணப்படம் போன்றவைகள் காணப்படுகின்றன.
.
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், இசை, இலக்கிய வரலாறு, திறனாய்வுகள், ஓவியம், கலைகள் என அனைத்துத்துறை சார்ந்த சாதனைச் செம்மல்கள் இங்கு அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர் அல்லது மேன்மைப்படுத்தப் பட்டுள்ளனர்.
.
தமிழில் நவீனஇலக்கியக் கர்த்தாக்களை அடையாளப் படுத்தியதைப் போல் ”உலக இலக்கியம்” என்னும் பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைச் சொடுக்கினால் வேறு ஒரு வலைப்பூப் பக்கத்திற்குச் செல்லுகிறது.
தமிழ் இலக்கிய ஜாம்பவான்கள் போல, உலக இலக்கிய ஜாம்பவான்களின் பட்டியல்லும் அங்கு வெளியிடப்பட்டுள்ளன.
”ஆண்டன் பாவ்லொவிச் செகாவ் , ஆல்பெர் காம்யு, இடாலோ கால்வினோ, எர்னஸ்ட்ஹெமிங்வே, ஃபிரான்ஸ்காஃப்கா, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், டொனால்டு பார்தெல்மே, தஸ்தயேவ்ஸ்கி” போன்ற 25 உலக இலக்கியவாதிகளை அடையாளப் படுத்தியுள்ளனர்.
அங்கு, தமிழ் இலக்கியவாதிகளும் கூறப்பட்டுள்ளனர். இது, உலக இலக்கியத்தில் தமிழ் இலக்கியவாதிகளும் அடக்கம் எனும் செய்தியைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம்.
இத்தளத்தை இதுவரை ஒரு லட்சம் பேர்களுக்கு மேல் பார்த்து இருக்கிறார்கள்.
அழியாச் சுடர்கள் எனும் தமிழ் நவீன இலக்கிய கர்த்தாக்கள் குறித்தான இணையதளத்தை 25 லட்சம் பேர்களுக்கு மேல் பார்த்து இருக்கிறார்கள். இது சிறப்பான ஒன்றாகும்.
இவ்விரண்டு தளங்கள் குறித்துத் தமிழ்ப் படைப்பாளர்களில் முக்கிய மானவர்களான திரு. ஜெயமோகன் .திரு. எஸ் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரின் கருத்தும் இத்தளத்தின் சிறப்பை எடுத்தோதும்..
”இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.
https://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும், பேட்டிகளையும், கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது.
ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும்” என்பார் ஜெயமோகன்.
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றி வருகிறது.
அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக் காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். என்பார் எஸ் ராமகிருஷ்ணன்.
அழியாச்சுடரை பார்வையிட https://azhiyasudargal.blogspot.com ஐ சொடுக்கவும்.
(இணையம் அறிவோமா? தொடரும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!