மரக்கூந்தலிடையில்
விரல் நுழைத்து
தலைகோதும்
சூரியக் கதிர்கள்…
சிரித்தோடும் நதிகளிலும்
சிறு புன்னகை பூக்கும்
குளங்களிலும் முகம்
பார்க்கும் நிலவின்
பிரதிபிம்பங்கள்…
காற்றுடன் கரம்கோர்த்து
காதலியைத் தேடும்
கண்கவர் பட்டாம்பூச்சிகள்…
சிரித்து மலரும்
சிறுபூக்களின் மேல்
சில் வண்டுகளின்
முத்தத்தின் சத்தங்கள்…
வெள்ளிமணி நீர்த்துளிகள்
துள்ளி துள்ளி விளையாடும்
மலையருவிகள்…
மந்திகளுக்குத்
தாவி விளையாட
மைதானங்களாகும்
மரக் கூட்டங்கள்…
நிலவுக்கும் வானுக்கும்
நித்தியபூஜை நடத்தும்
விண்மீன் கூட்டங்கள்…
கடலென நினைத்துக்
கால் நனைக்கும் நதிக்
கரையோர மூங்கில்
கூட்டங்கள்…
இயற்கை ரசிக்க ரசிக்க
இன்பத்தின் ஊற்றுகள்!
இயற்கையில் எல்லாமே
அன்பின் பரிமாற்றங்கள்!
இயற்கை
மனிதன் அழிக்கக் கூடாத
மனிதனால் அழிக்க முடியாத
அமரத்துவங்கள்!