சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டு வராண்டாவில் உள்ள ‘டியூப் லைட்’டில் இருந்த இடைவெளியில் இரண்டு குருவிகள் கூடு கட்டிக் குடியிருந்தன.
சில நாட்களில் மூன்று முட்டைகள் கூட்டில் இருந்தன. குருவிகள் அவற்றைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தன.
ஒரு சில தினங்களில் முட்டை பொரித்து, மூன்று குஞ்சுகள் கூட்டிற்குள் இருந்தன. குருவிகளின் நடவடிக்கையைப் பார்த்து ஒன்று தாய்க் குருவி, மற்றொன்று தந்தைக் குருவி என்று அறிந்தோம்.
நாங்கள் குடும்பத்துடன் வராண்டாவில் இருந்த நாள்களில்கூடக் குருவிகள் சிறிதும் அச்சம் அடையவில்லை; பாதுகாப்பு உணர்வோடு மகிழ்ச்சியாக இருந்தன.
ஐந்து குருவிகளும் உட்காருவதற்குப் போதுமான அளவில் இடம் கூட்டில் இல்லாததால், தாய்க் குருவி மட்டும் இரவில் குஞ்சுகளுடன் தூங்கும். தந்தைக் குருவி, அவற்றைப் பார்த்துக் கொண்டே, எதிரில் உள்ள ‘கிரிலில்’ இருந்து தூங்கும். சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தின் ‘டிக்டிக்’ என்ற தாலாட்டு இசையைக் கேட்டு மகிழும்.
பகலில் தந்தையும் தாயும் உணவு தேடிக் கொண்டு வருவார்கள்; வாய்பிளக்கும் குஞ்சுகளுக்குத் தாய் இரை ஊட்டுவது தனி அழகு; குஞ்சுகள் நான் முந்தி நீ முந்தி என்று வாய் பிளந்து சண்டையிடும்.
நாள்கள் நகர்ந்தன; சிறகுகள் சற்று முளைத்தன. ஒருநாள் நண்பகல் உணவிற்கு வீட்டிற்குச் சென்ற பொழுதுதான் தெரிந்தது, குஞ்சுகளும் குருவிகளும் இல்லாதது. அவை எங்கோ பறந்து போய் விட்டன.
எங்கள் மனதில் இனம் தெரியாத ஒரு கவலை பற்றிக் கொண்டது. அதைத் தொடர்ந்து, பறவைகள் பற்றிய எண்ணம் விரிந்தது.
காணவில்லை
கூட்டம் கூட்டமாகப் பறக்கும் காகங்களை இப்போது காணவில்லை.
அணிஅணியாக அலைந்து திரியும் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை.
இனங்களுடன் சேர்ந்தே வாழும் மைனாக்களைக் காணவில்லை.
வண்ண வண்ண நிறங்களில் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைக் காணவில்லை.
கடவுளாகக் கருதிக் கன்னத்தில் போட்டு வழிபடும் கிருஷ்ணமூர்த்திக் கருடனைக் காணவில்லை.
மலர்கள்தோறும் தேனெடுக்கும் தேனீக்களைக் காணவில்லை.
மழை கண்ட மகிழ்ச்சியில் ஆடும் அழகிய மயிலும் காணவில்லை.
இனிய இசைக்குப் பெயர் பெற்ற குயிலையும் காணோம்.
பறவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு மனிதனின் நாகரிக வளர்ச்சியும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் முதன்மைக் காரணங்கள் என்று கூறுகிறார்கள்.
நாம் பயன்படுத்தும் ‘செல்போனும்’, நகரங்களில் உள்ள செல்போன் கோபுரங்களும்தாம் சிட்டுக்குருவியின் மறைவிற்கும், காக்கைக் கூட்டங்களின் மறைவிற்கும், மைனாக் கூட்டங்களைப் பார்க்க முடியாத நிலைக்கும் காரணம் என்கின்றனர்.
மேலும் மரம், செடிகள் அழிக்கப்பட்டு இன்று ‘கான்க்ரீட்’ கட்டிடங்கள் உருவாகியுள்ளதால், பறவைகள் தங்குமிடம் இல்லாமல் தவிக்கின்றன.
சுதந்திரமாகக் காற்று மண்டலத்தில் பறக்க முடியாமல் செல்போன் கோபுரக் கதிரியக்க அலைகள் ஏற்படுத்தும் பாதிப்பும் அவற்றுக்கு உள்ளது.
பாவம் பறவைகள்!
சமீபத்தில் கேரளாவில் தேனீக்கள் வளர்த்து வந்தவர்கள் அதிர்ச்சியடையும் வகையில், தேனீக்கள் அனைத்தும் பறந்து போய் விட்டன. காரணம் புரியாது தவித்து, பின்னர் ஒரு வழியாக, அவர்கள் பயன்படுத்திய செல்போன்களின் கதிர் வீச்சுதான் காரணம் எனக் கண்டறிந்தனர்.
செல்போனிலிருந்து வெளிவரும் மின்காந்தக் கதிரியக்க அலைகளின் தாக்கத்தால் தேனீக்கள் அக்கம் பக்கமுள்ள காட்டுப்பகுதிகளில் கூட, இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
தேன் என்கிற இயற்கையின் அரிய கொடை, அடுத்த தலைமுறைக்குக் கிடைக்காமலே போய்விடும் வாய்ப்பு ஏற்பட்டு விடுமோ! என்று பயமாக இருக்கிறது.
நவீன அறிவியல் வழி, செய்யும் விவசாயமும் ஒரு காரணம் என்று கூறுகின்றனர்.
விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சி மருந்துகளால் பாதுகாக்கப்படும் காய், கனிகளை உண்டு வளரும் பறவைகள் இடும் முட்டைகள் பொரிக்கும் திறனை இழந்து விடுகிறதாம்.
அவ்வளவு சக்தியும் வீரியமும் உடைய இரசாயன உரங்கள் பறவைகளின் இனப்பெருக்கத்திற்குத் தடையாக இருக்கின்றன. அமெரிக்காவில் இரசாயன உரத்தால் பல பறவைகள் மடிந்தன.
நம்முடைய முன்னோர்கள் பறவைகள், விலங்குகள் பற்றிய நுணுக்கமான செயல்களைக் கூடக் கூர்ந்து கவனித்திருக்கிறார்கள். அவற்றை இலக்கியங்களில் பதிவு செய்தும் வைத்துள்ளனர்.
நமது கட்டிட அமைப்புகளின் மாறுதலால், நம்மைச் சார்ந்து வாழ்ந்த புறா, சிட்டுக் குருவி இனங்கள் காணாமல் போய் விட்டன.
அவை தானியங்ககளைப் புடைக்கும் பொழுது விழும் குறுநொய், கம்பு, கேழ்வரகு மற்றும் வீட்டில் பாத்திரம் கழுவும் பொழுது அவற்றில் எஞ்சியிருக்கும சோற்றுப் பருக்கைகளைச் சாப்பிட்டு வாழ்ந்தன.
உடலுக்கு வலிமை தரும் தானியங்களைச் சாப்பிடுவதைக் குறைத்து நாம் பீசா, புரோட்டாவிற்கு மாறி விட்டோம். குறுநொய் நீக்கப்பட்ட கம்ப்யூட்டர் அரிசி நமக்குப் பழக்கமாகி விட்டது. அதன் சோற்றுப் பருக்கைகள் ‘சிங்க்’ மூலம் நேராகப் பாதாள சாக்கடைக்குப் போய் விட்டது.
சிட்டுக் குருவிகளுக்கும் புறாக்களுக்கும் நகரப் பகுதிகளில் தங்க இடமும் இல்லை; உண்ண உணவும் இல்லை; அவை கிராமப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டன. கிராமங்களும் சிமெண்ட் வீடுகளாக மாறி நகர நாகரிகத்திற்கு வரும் பொழுது, அவை எங்கே போகும்?
நம்முடைய தேசியப் பறவையான மயில் நீல நிறம் என்பது குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். ஆனால், திருவண்ணா மலையிலுள்ள ரமண ஆசிரமத்தில் அபூர்வ வகையான வெள்ளை மயில்கள் நான்கு இருக்கின்றன. விலங்கியல் ஆர்வலர்கள் இதனை இனப்பெருக்கம் செய்யச் செய்து அழிந்து விடாமல் காப்பாற்ற வேண்டும்.
வருங்காலக் குழந்தைகள்
எதிர்காலத்தில் காகங்களைக் காட்டிக் குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்ட முடியுமா? காகங்களுக்குப் படைத்த பின்னர் சாப்பிடும் விரத நாள்களை நினைத்துப் பார்க்க முடியுமா?
காகம் கரவாது கரைந்துண்ணும் என்றால், வருங்காலச் சிறுவர்கள் ஆச்சரியப்பட மாட்டார்களா?
காகம் கூடி, நமது வீட்டைச் சுற்றிக் கரைந்தால், ‘விருந்தினர்கள் வருவார்கள்’ என்ற நம்பிக்கை எதிர் காலத்தில் இருக்குமா?
கருடனைக் கண்டால் கடவுளாகக் கும்பிட்டார்கள் என்றால் ஒத்துக் கொள்வார்களா?
சிட்டுக்குருவியின் சேதி எதிர் காலத்தாருக்குத் தெரியுமா? மற்ற எல்லா உயிரினங்களும், இயற்கை வளங்களும் அழிந்து, மனிதன் மட்டும் உலகில் வாழ்ந்து விட முடியுமா?
நாளைய தலை முறைக்கு நாம் துரோகம் இழைக்கப் போகிறோமோ? ஆபத்து நம்மை எதிர் நோக்குகிறதே! நாம் என்ன செய்யப் போகிறோம்?
குயில் குடும்பத்தில் 127 வகைகள் இருக்கின்றனவாம். ஆண் குயிலுக்குத்தான் இனிமையான குரல் உண்டு.
அன்னப் பறவை இந்தியாவிலேயே இல்லை. வானம் பாடி என்னும் ஒரு பறவை கிடையாது. இயற்கையோடு ஒவ்வொன்றும் பிணைந்துதான் இருக்கிறது.
சான்றாக, நீலகிரியில் வசிக்கின்ற இருவாசிப் பறவை அழிந்து போனால், அதோடு சம்மந்தப்பட்ட பத்து வகையான மரங்களும் அழிந்து போகும்.
காரணம், இருவாசிப்பறவைகள் சாப்பிட்டு வெளியேற்றுகின்ற விதைகளுக்குத்தான் முளைக்கும் திறன் இருக்கிறது. அதனால் தான், மரங்கள் செழித்து வளர்ந்திருக்கு.
இப்படி நம்மைச் சுற்றியுள்ள பல்லுயிர்களும் செழிப்போடு இருந்தால்தான், நாமும் செழிப்பாக இருக்க முடியும் என்கிறார் பொள்ளாச்சியில் இயற்கை வரலாறு அறக்கட்டளை ஒன்றை நிறுவி, சூழியல் காப்பதன் தேவையைச் சொல்லி வருகின்ற இயற்கையியலாளர் ச. அகமது அலி.
அழியும் பறவைகள்
மனித இனத்தால் பாதிக்கப்பட்டிருப்பது வன விலங்குகளும், கடல் வாழ் பிராணிகளும் மட்டுமல்ல பறவையினங்களும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாயிருப்பதை உலக அளவில் பல அமைப்புகளும் அதிர்ச்சியுடன் அறிக்கைகள் மூலம் அறிவித்துள்ளன.
பல்வேறு பறவைகள் அழிந்துவிடும் ஆபத்தும், தங்கும் இடமின்றித் தவிக்கும் சூழ்நிலையும் மற்றும் இனப்பெருக்கம் செய்ய இடமில்லாமலும் அலைகின்ற நிலையும் அந்த அறிக்கையின் மூலம் தெளிவாகின்றன.
பறவைகளின் இயல்பு பற்றி இன்னும் தெளிவான, முழுமையான ஆராய்ச்சிகள் செய்து முடிக்கப்படவில்லை.
மிகவும் வியக்கத்தக்க இயல்புகளை உடைய பறவையினங்கள்தாம் இயற்கையின் விசித்திரமான பரிமாணங்களின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
பல்வேறு கண்டங்களைக் கடந்து சென்று இனப்பெருக்கம் செய்யும் இயல்புடைய சில பறவைகளின் இடமாற்ற இயல்பு பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் முயற்சி இன்னும் முடிந்த பாடில்லை.
நினைக்கவே விந்தையாக இருக்கும் செய்தி, அப்பறவைகள் கால மற்றும் தட்ப, வெப்ப மாற்றங்களுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் பல்லாயிரம் கல்தொலைவு பறந்து செல்வதும், திரும்புவதும் எப்படி? என்பது தான்.
ஓரு பெண் கடற்பறவை சமீபத்தில் தொடர்ச்சியாக விடாமல் 11,500 கி.மீ. அலஸ்காவில் இருந்து நியூசிலாந்து வரை ஓய்வு எடுக்காமல், ஒன்பது நாள் உணவை உட்கொள்ளாமல், தண்ணீர் அருந்தாமல் பறந்திருக்கிறது. அதுவே இதுவரை கண்டறியப்பட்ட பறவைகளில் நெடுந்தூரம் பயணித்தது.
அப்பறவை பறப்பது என்பது மனிதன் மணிக்கு 70 கி.மீ. வீதம், 7 நாள்கள் தொடர்ந்து ஓடுவதற்குச் சமம்.
அப்பறவை கடந்து வரும் வேளையில் தனது ஒருபக்க மூளையின் செயல்பாட்டை நிறுத்தி, ஓய்வு எடுத்துக் கொள்கிறது.
மேலும், அலாஸ்காவில் தனது உடம்பில் சேகரித்து வைக்கப்பட்ட பெருமளவிலான கொழுப்புப் பொருட்களை அதாவது தன்னுடைய மொத்த உடல் எடையில் ஐம்பது சதவீதத்திற்கும் மேலாக அப்பறவை எரித்துள்ளது.
அப்பறவை தன்னுடைய வழியைக் கண்டறிய போலரைஸ்டு ஒளியை ஆய்வு செய்து, அடர்ந்த மேகங்கள் சூழ்ந்த நிலையிலும் சூரியனின் இருப்பிடத்தைக் கண்டு பகலிலும், நட்சத்திரங்களைப் பின்பற்றி, இரவிலும் பறப்பதாக நியூசிலாந்து பறவையியல் கழகத்தின் தலைவர் ‘பேட்லி’ கூறுகிறார். அஃது இளங்குஞ்சாக உள்ள போதே வான்வெளியின் சுழற்சியைக் கற்றுக் கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.
பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் பல்லாயிரம் கல்தொலைவு பறந்து, இனப்பெருக்கத்திற்காக வந்து சேரும். பறவைகளின் சரணாலயத்திற்குக் கடந்த சில ஆண்டுகளாக விரல்விட்டு எண்ணக் கூடிய பறவை இனங்கள்தாம் வருகின்றன.
இதற்குக் காரணம். சரணாலயத்திற்கு வரவேண்டிய தண்ணீரை வழியிலேயே மறித்து, மனிதன் தனதாக்கிக் கொள்வதும், தட்பவெப்பநிலை மாற்றங்களும், குளங்கள், ஏரிகள் ஆற்றுப் படுகைகளில் காணப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனக் கழிவுகள், பூச்சி மருந்து கலந்த தண்ணீர் ஆகியவைதாம்.
இந்தியாவிலுள்ள பறவைகளில் 88 வகையான பறவைகள் அழிவை எதிர்கொண்டுள்ளனவாம். மனிதனின் நாகரிக வளர்ச்சியும், அறிவியல் முன்னேற்றமும் அறிவும் ஏனைய உயிரினங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கத்தான் உதவியிருக்கின்றன.
– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்