அழைப்பிதழ் – சிறுகதை

ராமநாதபுரத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது அரசுப் பேருந்து.

அப்போது 24 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் ஓடிவந்து பஸ்ஸில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர, பேருந்து புறப்பட்டது.

புறப்பட்டு சிறிது தூரம் சென்று இருக்கும் அது வரையில் பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வாலிபன் தன் கையில் வைத்திருந்த பையில் ஏதோ தேடினான்.

யோசித்தபடி கையில் பட்ட நோட்டையும் பேனாவையும் எடுத்து ஏதோ எழுத எழுத ஆரம்பித்தான்.

பேருந்து சில மணி நேர பயணத்திற்கு பிறகு ஒரு இடத்தில் நின்றது.

கண்டக்டர் கூறினார், “வண்டி இருபது நிமிஷம் நிற்கும் டீ காப்பி குடிக்கிறவங்க சாப்பிட்டு வரலாம்” என்றதும் மாறனும் கீழே இறங்கி சென்றுவிட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்து எழுத தொடங்கினான்; பேருந்து புறப்பட்டது.

சில மணி நேரத்திற்கு பிறகு நாகை மாவட்டத்தை நெருங்க போவதை உணர்ந்த மாறன் அதுவரையில் எழுதிக் கொண்டிருந்த காகிதத்தை சட்டென்று கிழித்து கசக்கி ஜன்னலுக்கு வெளியே எறிந்து விட்டு கையில் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

பேருந்து நிலையத்தில் நின்றவுடன் இறங்கி நடந்தான்.

சாயந்திரம் நாலு மணி ஸ்கூல் பெல் அடித்தவுடன் குழந்தைகள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு முந்தி வெளியில் சென்றனர்.

யாழினி, மாலதி, ஆயிஷா என்ற மூவரும் 8வகுப்பில் பயிலும் மாணவிகள்; இணைபிரியா தோழிகள்.

மூவரும் ஏதோ பேசியபடி சிரித்துக் கொண்டே வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

தன் எதிரே ஏதோ காகிதம் கொத்தாக கிடப்பதை யாழினி ஓடிச்சென்று கையில் எடுத்தாள்.

அதில் முத்து முத்தாக அவ்வளவு அழகான எழுத்துக்கள். பார்த்துக் கொண்டே நின்றாள் யாழினி.

ஆயிஷா ஓடிவந்து “என்னடி அது?” என்று கேட்டாள்.

“தெரியலடி. ஆனால் எழுத்துக்கள் குண்டு குண்டாக சூப்பரா இருக்குடி. யாரோ என்னமோ எழுதி இருக்காங்க. சரி இருக்கட்டும்” என்று அதை பையில் வைத்து கொண்டால் யாழினி.

வீட்டை அடைந்ததும் பையை டேபிள் மீது வைத்துவிட்டு குளிக்க சென்றுவிட்டாள்.

யாழினியின் அம்மா “யாழினி குளிச்சிட்டு வந்து சாப்பிடு. வீட்டை பத்திரமா பாத்துக்கோ. நான் கடைக்கு போயிட்டு வரேன்.” என்றதற்கு

யாழினி “சரிமா” என்றாள்.

அம்மா யாழினியின் பையில் கையை விட்டு காகிதக் கொத்தை எடுத்தாள்.

“கடைக்கு போறதுக்குள்ள நினைச்ச சாமான் எல்லாம் மறந்து போய்விடும்; எழுதி வைத்துக் கொள்வோம்” என்று முணுமுணுத்தவாறு காகிதத்தின் பின்புறத்தில் ஏதோ எழுதி எடுத்துக் கொண்டு நடந்தாள்.

மளிகைக்கடையில் “நமச்சிவாய அண்ணா, இதுல எழுதி இருக்கிற சாமான கொடுங்க” என்று நீட்ட,

நமச்சிவாயம் பொருளை கொடுத்து விட்டு காகிதத்தை மடித்து பாட்டிலின் மேல் வைத்தார். பொருள்களை எடுத்துக் கொண்டு காசை கொடுத்துவிட்டு சென்றாள்.

நமச்சிவாயம் அடுத்தபடியாக கடைக்கு வந்தவரை பார்த்து “என்ன நிருபர் தம்பி! எப்படி போயிட்டு இருக்கு? ஆளையே காணோம்.”

“நல்லாத்தான் போயிட்டு இருக்கு. வீட்டுக்காரம்மா காய்கறி வாங்க போயிருக்காங்க. எனக்கு ரெண்டு கடலை மிட்டாய் கொடுப்பா” என்று சொல்லிவிட்டு “ஆமா இது என்னப்பா?” என்றார்.

கடைக்காரர் “அது ஒண்ணும் இல்ல. ஒரு அம்மா சாமான் வாங்கிட்டு எழுதியதை வச்சிட்டு போயிட்டாங்க.”

கையில் எடுத்துக் கொண்ட நிருபர் மிட்டாயை வாயில் போட்டுக்கொண்டு பேப்பரை பிரிக்க, அச்சில் இட்டது போல் எழுத்துக்கள் கண்ணில் பட்டன.

மடித்து பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றவர் ஆபிசுக்கு புறப்பட்டார்.

ஆபீசுக்குள் சென்ற ராஜலிங்கம் தான் வழக்கமாக செய்யும் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு போய் தன் இருக்கையில் அமர்ந்தார்.

பேண்ட் பாக்கெட்டை தடவி பாக்கெட்டில் இருந்த கடலை மிட்டாய் ஒன்றை வாயில் எடுத்துப் போட அப்போது பாக்கெட்டில் உள்ள காகிதம் கண்ணில் பட்டது.

அதை பிரித்து சில வரிகளை படித்து விட்டு டேபிளின் மேல் வைத்தார். அன்றைய நாளிதழ் ஒன்றை கையில் எடுத்து புரட்டினார்.

சிறிது நேரம் கழித்து வரும் வார பத்திரிகைக்கு கதைகள் கட்டுரைகள் கவிதைகள் என அனைத்து தொகுப்புகளையும் சரிபார்த்து அடிக்கி வைத்துவிட்டு அழைப்பு மணியை அழுத்த, உதவியாளர் வந்து நின்றார்.

“இதோ பார். இந்த வாரம் பத்திரிக்கையில் வெளிய வர வேண்டியவை அனைத்தையும் சரிபார்த்து வைத்துள்ளேன். இவற்றை எல்லாத்தையும் பத்திரமாக எடுத்துக் கொண்டு போய் அச்சகர்களிடம் ஒப்படைத்து விடு” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

கடலை மிட்டாயைச் சுற்றி வந்த காகிதமும் அமைதியாக உடன் சென்றது.

சில நாட்கள் சென்றன. ராஜலிங்கம் தன் இருக்கையில் அமர்ந்து நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தார். டேபிளின் மேல் தொலைபேசி சிணுங்கியது.

கையில் எடுத்து காதருகே கொண்டு செல்ல, “ஹலோ சார் நான் வாசகர் பேசுகிறேன். இந்த வார இறுதியில் வெளிவந்த செய்திகளும் கவிதைகளும் கட்டுரைகளும் அருமையாக இருந்தன. அதுல பாருங்க சார் அழைப்பிதழ் என்ற சிறுகதை மிகவும் அருமையாக இருந்தது.”

ராஜலிங்கம் “அப்படியா! மிக்க மகிழ்ச்சி.”

மறுமுனையில் வாசகர் “அப்புறம் பாருங்க சார், இப்போ 2.4.2022.நடந்துட்டு இருக்கு. அழைப்பிதழ் சிறுகதையில 23.6.2022.மணநாள் என்று அச்சிட்டு இருக்கு. யார் சார் அந்த முத்துமாறன்; புதுசா இருக்கு?”

ராஜலிங்கம் “அப்படியா! நான் கவனிக்கலையே கவனிச்சிட்டு சொல்றேன்” என்று தொலைபேசியை வைத்துவிட்டு, அழைப்பு மணியை அழுத்தியதும் உதவியாளர் வந்து நின்றார்.

“என்னையா பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும்?” என்று கத்தியவாறு இந்த வார இதழை கொண்டு வா என்று சொல்ல,

உதவியாளர் “ஐயா இந்த வார இதழ்கள் அனைத்தும் விற்று விட்டன. நம்மிடம் ஒரு இதழ் கூட இல்லை” என்று பணிவுடன் சொல்ல

“அதெல்லாம் எனக்கு தெரியாது. இப்போ ஒரு இதழ் வந்தாகணும்” என்றார் ராஜலிங்கம்.

உதவியாளர் உடனே உள்ளே சென்று அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு டேமேஜ் பீசை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க.

அதை கையில் வாங்கி புரட்டி புரட்டி படித்து பார்த்து விட்டு எதுவும் புரியாதவராய் தன் இருக்கையில் அமர்ந்தார்.

தன் மூக்கு கண்ணாடியை மேஜையின் மேல் கழட்டி வைத்துவிட்டு, பேண்ட் பாக்கெட்டை தடவி ஒரு கடலைமிட்டாய் எடுத்து வாயில் போட சுரீர் என்று அப்போதுதான் மளிகை கடையில் நடந்தது நினைவு வந்தது.

திரும்பவும் அந்த இதழை படிக்கலானார்.

நடந்தது இதுதான். பேருந்தில் கசக்கி எறிந்த காகிதத்தில் இருந்து அழைப்பிதழ் என்ற கதையாய் ராஜலிங்கம் அவர்களின் இதழில் வெளிவந்தது இதுதான்.

முத்து மாறனுக்கு சொந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி என்ற சிற்றூர். அந்த ஊரின் இருபுறமும் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்.

அவ்வூரை ஒட்டியவாறு எங்கு பார்த்தாலும் வயல்வெளிகள் பச்சைப்பசேல் என்று இயற்கை சூழல் நிறைந்திருக்கும். வயல் வெளியை ஒட்டியவாறு இருந்த சிறுகுடிசையில் வசித்து வரும் ஏழை விவசாயியின் மகன் தான் முத்துமாறன்.

விவசாயி தன் வசதிக்கு மீறி படிக்க வைத்திருந்தார். அவன் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தான்.

ஒருநாள் கிளாஸ் ரூமில் ஆசிரியர் ரமேஷ் கண்ணன், “என்ன ஸ்டுடென்ட்ஸ் இறுதி தேர்வு நெருங்கி விட்டது. நீங்க எல்லாம் என்ன செய்ய போறீங்க? எல்லாரும் படிச்சு பாஸ் ஆயிடுவீங்கல்ல? உங்களுக்கு நான் ஒன்னு சொல்றேன்.

நீங்கள் அனைவரும் ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்புகளையும் போய் பார்த்து கட்டுரையாக எழுதணும். அது உங்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஒரு வாய்ப்பாக அமையும். தேவைப்படுபவர்கள் நாலு நாள் லீவு போட்டுக்கலாம்” என்றார்.

மாறன் மனதில் சட்டென்று நினைவுக்கு வந்தது ராமநாதபுரம் மாவட்டம் மட்டும் தான். அப்துல் கலாம் ஐயா பிறந்த ஊர் என்பதால் மாறன் இராமநாதபுரத்தை நோக்கி.

அவன் ஏழை என்பதால் அவனிடம் பணம் வசதி கிடையாது. அவன் தந்தை பஸ் செலவுக்கு கொடுக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வைத்ததை எடுத்துக்கொண்டு சென்றான்.

பகலெல்லாம் ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், அப்துல்கலாம் அடக்கஸ்தலம், வரலாறு புகழ்மிக்க கோயில்கள் என்று சுற்றிப் பார்ப்பான். இரவு நேரங்களில் ஏர்வாடி தர்காவில் வந்து தங்கி கொள்வான்.

பகல் நேரங்களில் தான் சுற்றி பார்த்ததை நினைவுகூர்ந்து இரவு நேரங்களில் உட்கார்ந்து கட்டுரையாக எழுதுவான்.

அவனருகே அங்கும் இங்குமாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பலரும் தங்கியிருப்பார்கள்.

அப்படி அவன் எழுதிக் கொண்டிருக்கையில், அவனருகில் ஒரு வயதான தம்பதியினரும் ஒரு பர்தா அணிந்த பெண்ணும் தங்கியிருந்தார்கள்.

அவன் தான் கண்டதை எல்லாம் நினைவுகூர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். மேற்கொண்டு அவனால் எழுத முடியவில்லை. காரணம் பர்தா அணிந்த பெண் அவ்வளவு அழகு.

முழுநிலவை துணியால் போர்த்தியது போல் அழகிய முகம். வில்லைப் போல் கூட்டுபுருவத்துடன் கூடிய கருவிழிகள் அங்கும் மிங்குமாய் நடனமாடின. அவள் பார்வையில் மின்னல் ஒளி போல் பிரகாசம்.

சட்டென்று மின்சாரம் பாய்வது போல் உணர்ந்த அவனின் முகம் தானாய் திரும்ப, ஓர் இனம் புரியாத உணர்வு உண்டாக எழுதியதை மூடி பத்திரப்படுத்தி வைத்து விட்டு உறங்க ஆரம்பித்தான்.

அதிகாலை பொழுது விடிந்தது. கண்களை கசக்கியவாறு எழுந்து உட்கார்ந்தான் மாறன். பெரியவர் எழுந்து அருகில் வந்து “என்ன தம்பி இரவெல்லாம் நல்ல தூக்கமா?” என்றார்.

“ஆமாங்கய்யா எழுதிட்டு இருந்தேன். எப்போது தூங்கிப் போனேன் என்று எனக்கே தெரியவில்லை. எங்க யாரையும் காணோம்?” என்றான்.

“அவங்க வீட்டுக்கு போனாங்க. இன்னும் வரல தம்பி. நீங்க கடைக்கு போனீங்கன்னா காபி சாப்பிட்டு எனக்கும் ஒரு பார்சல் வாங்கிட்டு வரீங்களா?”

“அதனாலென்ன கொடுங்க. நான் வாங்கிட்டு வரேன்.” கையில் பணத்தை வாங்கிச் சென்றவன் காபியுடன் வர, இரண்டு டம்ளரில் ஊற்றி ஆளுக்கொன்றாக கையில் எடுத்துக் கொண்டார்கள்.

“ஆமாம் தம்பி நமக்கு எந்த ஊர்?” என்று ஆரம்பித்தார்.

“எனக்கு நாகூருக்கு பக்கத்துல திட்டச்சேரிங்க. நாகப்பட்டினத்தில படிச்சுட்டு இருக்கேன். இப்போ படிப்பு விஷயமாதான் வந்து இருக்கேன்.”

“ஆமாம் நீங்க …”

“நான் இந்த ஊர் தான்பா. எனக்கும் என் மனைவிக்கும் இந்த ஊர்தான் சொந்த ஊர். ஆனால் எங்களுக்குத்தான் யாருமே சொந்தம் இல்லை. எனக்கு என் மனைவி சொந்தம். என் மனைவிக்கு நான் சொந்தம்” என்று சொல்ல.

அதிர்ச்சியில் மாறன், “அப்படின்னா அந்த பர்தா அணிந்த பெண்?” என்று கேட்டான்.

பெரியவர் “அதுவா அது ஒரு பெரிய கதை தம்பி இப்படி வந்து உட்காரு” கதையை சொல்லத் தொடங்கினார்.

“ரெண்டு வருஷத்துக்கு முன்னால என் மனைவிக்கு உடம்பு சரி இல்லாம போச்சு. இங்கே அழைத்து வந்தேன் அப்போ இந்த புள்ள அழுக்கு துணியை போட்டுட்டு வாயில வந்ததை எல்லாம் பேசிக்கிட்டு அங்கும் மிங்கும் ஓடிட்டு இருந்தது.

யார் என்னன்னு தெரியல. ஒரு வருஷம் என் மனைவியை இங்கே வைத்து இருந்தேன். என் மனைவி சாப்பிட்ட மிச்சம் மீதியை இந்த பிள்ளைக்கும் சாப்பிட கொடுப்போம்.

இப்படி இருக்கும் போது ஒரு நாள் அந்த புள்ளைக்கு சுய நினைவு வந்துடுச்சு.

எழுந்ததிலிருந்து ஒரே அழுகை. ‘நான் எப்படி இங்கே வந்தேன்? இது எந்த ஊரு?’ என்றெல்லாம் கேட்டு அழுதது. அருகில் இருந்த நாங்கள் எல்லாம் ஆறுதல் கூறினோம்.

சிறிது நேரம் சென்றது என் மனைவி மெல்ல ஆரம்பித்தாள்.

‘ஆமாம் நீ யாரம்மா உனக்கு எந்த ஊரு?’

‘எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லங்க. என் பெரியப்பா வீட்டில் வளர்ந்து வந்தேன். என் பேரு பிரியதர்ஷினி ஆறாம் வகுப்பு வரை படித்து இருக்கிறேன். ஒருநாள் பள்ளிக்கூடம் போய்விட்டு திரும்பி வந்துட்டு இருந்தப்போ சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டது தான் தெரியும்’
என்று திரும்பவும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

அங்கு அருகில் பல வருடங்களாக இருப்பவர்களிடம் நான் விசாரித்தேன்.

அப்போது ‘இந்தப் பிள்ளையை மனநிலை சரியில்லாமல் யாரோ ஒரு பெரியவர் இங்கு கொண்டு வந்து விட்டுச் சென்றார். பல வருடங்கள் ஆகின்றது. யார் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது’ என்றார்கள்.

‘சரி சரி அழுவாதமா’ என்று சொல்லிவிட்டு கடை தெருவுக்கு சென்று இந்த பிள்ளைக்கு சாப்பிடவும் இரண்டு செட் மாற்றிக்கொள்ள துணிமணிகளும் வாங்கி வந்து என் மனைவியிடம் கொடுத்தேன்.

‘அந்தப் பிள்ளையை நல்லா குளிக்க வைத்து டிரஸ்சை மாற்றிக் கூட்டிட்டு வா’ என்றேன் என் மனைவியிடம்.

சிறிது நேரத்தில் வந்தார்கள். என் கண்ணை என்னாலேயே நம்ப முடியவில்லை அப்படியே செக்கச் செவேலென்று அய்யர் வீட்டுப் பிள்ளை மாதிரி அவ்வளவு அழகாயிருந்தாள்.

‘வாம்மா இங்கே உக்காரு உங்க ஊரு எங்க இருக்கு ஊருக்கு போலாமா?’ என்றேன்.

அதுக்கு அந்தப் புள்ள ‘ஐயா, எனக்கு பத்து வயதாக இருக்கும்போது அடிபட்டது. என் பெரியப்பா இங்கே கொண்டு வந்து விட்டுச் சென்றதாக சொல்றாங்க. இப்போ நான் ஊருக்கு போய் எங்க பெரியப்பாவுக்கு பாரமா இருக்க விரும்பல. நான் இங்கேயே உங்க கூட இருந்துகிறேன்’ என்று சொல்லுச்சு.

அப்போது இருந்து இந்த புள்ளைய நான்தான் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்.

தான் யார் என்பதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பவில்லை அவள் அதனால் தான் பர்தா அணிந்து கொண்டிருக்கிறாள்.

பிரியதர்ஷினி எந்த ஜாதி, எந்த மதம் என்று எனக்கு தெரியாது. இப்போது எங்களுக்கும் வயதாகிவிட்டது. இந்த பிள்ளையை எப்படி கரையேற்ற போகிறேன்? யார் இந்த பிள்ளையை காப்பாற்ற போகிறார்கள்? என்றும் புரியவில்லை” என்று சொல்லி முடிப்பதற்கு முன்

“ஐயா, நான் இருக்கிறேன். அந்த பிள்ளையை நல்லவிதமாக கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வேன். எனக்கு அந்த பிள்ளையை முதல் நாள் பார்த்த போதே பிடித்துவிட்டது.

உங்கள் சுமையை நான் சுமக்க ஆசைப்படுகிறேன். உங்களுக்கு சம்மதமா?” என்று கேட்ட மாறனை பார்த்து அவரால் ஏதும் சொல்ல முடியவில்லை. கண் கலங்கியவாறு நின்றார் பெரியவர்.

மாறனே தொடர்ந்தான் “என் குடும்பம் ஒரு ஏழை விவசாயி குடும்பம், என்றாலும் என் தாய் தந்தை இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கும் தெரியும். அதனால் நான் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்கிறேன்.

என்னை நம்புங்கள். நான் ஊருக்கு சென்று என் நண்பர்களுடன் வருகிறேன்.” என்று பெரியவரிடம் அட்ரஸ் செல்நம்பர் இரண்டையும் கொடுத்துவிட்டு புறப்பட்டான் மாறன்.

நண்பர்கள் உதவி கிடைத்தால் 23.6.2022 அன்று மணநாள்.

நண்பர்கள் உதவி கிடைக்குமா?

காலம்தான் இனி பதில் சொல்லும் …

இப்படிக்கு முத்துமாறன் என்று இருந்தது.

அழைப்பிதழை முழுமையாக படித்து முடித்துவிட்டு மூடியவருக்கு இப்போது எல்லாம் புரிந்தது .

அழைப்பு மணியை அழுத்தினார் ராஜலிங்கம். உள்ளே வந்தார் உதவியாளர்.

“இதோ பார். வாசகர்கள் போன் செய்தால் சொல்லிவிடு இது ஒரு உண்மை கதை. இந்த கதையை எழுதியவர் நாகப்பட்டினத்தில் உள்ள திட்டச்சேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முத்து மாறன்” என்று சொல்லி விட்டு புறப்பட்டார் ராஜலிங்கம்.

23.6.2022 வியாழன் காலை நேரம்.

பெரியவருக்கு போன் செய்து ரெஜிஸ்டர் ஆபீசுக்கு மூவரையும் வர சொல்லி விட்டு, இரண்டு நண்பர்களுடன் முத்துமாறன் அங்கு செல்ல, ரெஜிஸ்டர் ஆபீஸ் இருந்த சாலையில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்றவர்களை பார்த்துவிட்டு மாறன், நண்பர்களிடம் “யாரோ பெரிய மனிதர் வருகிறார் போலும்” என்று பேசிக்கொண்டே உள்ளே செல்ல அங்கு வாசகர்களுடன் தாய் தந்தையரும் பெரியவரும் மணப்பெண் என்று அனைவரும் நிற்க அதிர்ச்சியில் உறைந்தான் மாறன்.

மாறனின் தந்தை பேசினார் “ஏம்பா மாறா, நாங்க உன் ஆசைக்கு என்னைக்காச்சும் மறுத்து பேசி இருக்கோமா? உன் ஆசையே எங்கள் ஆசை. உன் கனவே எங்கள் வாழ்க்கை. என்று தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எங்க கிட்ட சொல்லாம இப்படி செஞ்சுடியே. நல்லவேளையா இந்த புள்ளைங்க எல்லாம் வந்து சொல்லி எங்கள அழைச்சுட்டு வந்துச்சு. அதனாலதான் நாங்க உங்க கல்யாணத்த பார்க்க முடிஞ்சுச்சு.

எங்களுக்கு பொண்ணு ரொம்பவும் புடிச்சிருக்கு. நல்ல மனசு இருந்தா போதும் பா. மனசு இருந்தா மார்க்கம் உண்டு. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்” என்று வாழ்த்த,

இருவரும் தாய் தந்தையர் காலில் விழுந்தார்கள்.

வாசகர்களின் கைகள் அட்சதை மழை பொழிந்தன.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.