தார் வெட்டப்பட்ட வாழை மரத்தில் இருந்து நீர் சொட்டு சொட்டாக வழிந்து கொண்டிருந்தது.
பழனிவேலு வாழை பயிரிடப்பட்டிருந்த வயலின் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தான்.
இரண்டாயிரத்து சொச்ச வாழைகள் பயிரிடப்பட்டிருந்ததில், கால்பகுதி வாழைகள் குலை தள்ளும் பருவத்தில் இருந்தன.
பாதிக்கும் மேற்பட்ட வாழைகள் குலை தள்ளியும் இருந்தன. சில வாழைக் குலைகள் அரைகுறை விளைச்சலிலும், இன்னும் சில வாழைக் குலைகள் நல்ல விளைச்சல் பருவத்திலும் இருந்தன.
ஒரு தார்கூட வெட்டப்படாத நிலையில் மொத்தமாக வியாபாரியிடம் ஒரு விலையை பேசி கொடுத்துவிடலாம் என்று நினைத்து பழனிவேலுவின் முதலாளி ராமச்சந்திரன் வியாபாரிகளை சந்தித்து பேசி இருந்தார்.
வியாபாரிகள் கேட்ட விலைக்கு கட்டுப்படி ஆகாததால் நல்ல விளைச்சல் பருவத்தில் இருந்த தார்களைக் கூட வெட்டாமலே இருந்தனர்.
பழனிவேலு வாழைதோப்புக்கு தண்ணீர் பாய்ச்சுவதோடு காவல் காக்கும் பொறுப்பையும் சேர்த்து மாத சம்பளத்திற்கு வேலை செய்து வந்தான்.
பழனிவேலு வாழைகளுக்கு தண்ணீரைப் பாய்ச்சிவிட்டு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னர்தான் அங்கிருந்து சென்றிருந்தான். பீடி புகைத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியிருந்தது.
வாய் புளிப்பு எடுத்து பீடி தகிப்பு எடுத்து மடியில் தேடிப் பார்க்கும் போது தான் நினைவுக்கு வந்தது; தண்ணீர் பாய்ச்சும் போது மடியில் இருந்து தவறி விழுந்த நெருப்பு பெட்டியையும் பீடிக்கட்டையும் எடுத்து வாழைமரத்தின் மட்டையில் சொருகி வைத்தது.
நெருப்பு பெட்டியையும் பீடிக்கட்டையும் எடுப்பதற்காக பழனிவேல் மறுபடியும் வாழைத் தோப்புக்கு திரும்பி வந்து பார்த்த போது ஈரமாக இருந்த வாழை வயலுக்குள் சற்று முன் யாரோ நடந்து சென்ற காலடி தடம் இருந்தது.
தடத்தைப் பார்த்ததும் ‘தண்ணீர் பாய்ச்சிட்டு போய் முழுசா அரை மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள, யாரு ஈர வயலுக்குள்ள இறங்கினது.’ என்று யோசித்துவிட்டு வாழை வயலுக்குள் இறங்கி அந்த கால் தடத்தை பின்தொடந்து நடந்தான்.
அது ஒரு பெண்ணின் கால் தடத்தைப் போல இருந்தது.
பழனிவேலு வயலுக்குள் இருபது அடி தூரத்தை கடந்து சென்றபோது உச்சந்தலையில் குளிர்ந்த நீர் இறங்கியதை போன்ற ஒரு உணர்வு ஏற்பட, நின்று தலையை தடவி பார்த்தான்.
உள்ளங்கையில் ஒட்டி இருந்த நீர் பசை போன்று விரல்களில் ஒட்டியது. ‘வாழை மரத்தின் மேலே இருந்து காக்கை குருவி எதாவது எச்சம் போட்டுவிட்டதா?’ மேல் நோக்கி பார்த்த பழனிவேலு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.
வாழையில் தார் வெட்டப்பட்டு இருந்தது. வெட்டப்பட்ட காம்பில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.
அதிர்ச்சியில் செய்வதறியாது நின்றவனின் முகத்தில் மற்றொரு துளி நீர்ப்பட்டதும் உணர்வுக்கு திரும்பி பதறியடித்துக்கொண்டு ‘மற்ற வாழை மரங்களில் ஏதும் தார் வெட்டப்பட்டு இருக்கிறதா?’ என்று சுற்றும் முற்றும் ஓடி திரிந்துப் பார்த்தான். அதை தவிர வேறு எந்த வாழையிலும் தார் வெட்டப்படவில்லை.
கால் தடத்தின் படி பார்த்தால் வாழைத்தார் நின்று நிதானித்து வெட்டியதை போல் இல்லை.
முயலை துரத்தி செல்லும் வேட்டை நாய் போகிற வேகத்திலே அது தன் நீண்ட முக வாயால் தட்டிவிட்டு பின்னர் முயலை கவ்வி பிடிப்பதை போல, போகிற போக்கிலயே வெட்டி எடுத்து சென்றதைப் போல இருந்தது.
அதன்படி பார்த்தால் ‘இதை ஒரு பெண் செய்திருக்க வாய்ப்பில்லை. இரண்டு முரட்டு ஆண்கள் சேர்ந்து அதுவும் வாழைத் தார் வெட்டுவதற்கு என்று பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட அரிவாளால் கொண்டு மட்டுமே வெட்டக் கூடிய அளவில் 9 அடி உயர வாழை மரத்தில் 15 சீப்புகள் வரை இருந்த ஒரு நாட்டு வாழைத்தாரை தன்னந்தனி ஆளாக ஒரு பெண் எப்படி வெட்டி எடுத்து சென்றிருக்க முடியும்’ என்று யோசித்த பழனிவேலு அந்த தடத்தின் போக்கிலே நடந்தான்.
வாழை வயலில் இருந்து சில அடி தூரம் மட்டுமே கால் தடம் இருந்தது.
சிறிதும் தாமதிக்காமல் நடந்த விபரத்தை தனது முதலாளி ராமச்சந்திரனிடம் சென்று சொன்னான் பழனிவேலு.
அவர் பழனிவேலுவோடு சேர்ந்து மேலும் இருவரை பக்கத்து ஊர் கடைகளுக்கு சென்று விசாரிக்கும் படி அனுப்பி வைத்தார்.
கால்தடம் தெற்கு முகமாக சென்றதனால் வடக்கு நோக்கி தேடிச்செல்லலாம் என முடிவு செய்து தேடிச் சென்றனர்.
அவர்கள் கணிப்பின்படி இராமச்சந்திரனின் ஊரான இராசாபுரத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த ‘ஊத்தங்கரை’ என்ற ஊரில் ஒரு மளிகைக்கடையில் தொங்கி கொண்டிருந்தது வாழைத்தார். வாழைத்தாரின் காம்பில் இருந்த நீர் இன்னும் காயாமலேயே இருந்தது.
தாரை பிடித்துக்கொண்டு மளிகைக்கடைக்காரரிடம் “கடைக்காரரே இந்த தார் எங்கே வாங்குனது?” என்றார் பழனிவேலு.
“வீட்டுல வளர்த்த வாழை. ரொம்ப கஷ்டம் அதனாலதான் விற்கறோம்ன்னு சொல்லிட்டு ஒரு பொம்பள கொண்டு வந்து கொடுத்தது. அது கஷ்டத்தோட பலன் பணத்த வாங்காம அந்த விலைக்கு அரிசியும் கொஞ்ச மளிகை சாமானும் வாங்கிட்டு போவுது.”
“எந்த ஊரு பொம்பள?”
“விசாரிக்கற தோரணையில, ஏதாவது விவகாரம் இருக்கறது போல தெரியுது?”
“ஆமா, திருட்டு நாய் இராசாபுரம், ராமசந்திரன் பண்ணையோட வாழைத் தோப்புல இருந்து திருடிட்டு வந்திருக்கறா.”
“அட, திருட்டு கழுதையா அவ. அறுத்துட்டு நிற்கறவளாச்சேன்னு இரக்கப்பட்டதுக்கு என் பேர கெடுத்துப் புட்டாள” என்ற கடைக்காரர் தொடர்ந்து “அவ, காலாங்கரையில செத்துப் போனானே வண்டிக்கார கணேசன் அவனோட பொண்டாட்டி தான்”
அவள் வாங்கி வந்த அரிசி, மளிகை சாமாங்களை வைத்து மளமளவென சமையலை ஆரம்பித்தாள். சமையல் பண்ண பாத்திரங்களை கழுவ வேண்டியதில்லை. அது இரண்டு நாட்களுக்கு முன்னரே கழுவியிருந்தது.
அடுப்பில் படுத்திருந்த பூனையை விரட்டி விட்டுட்டு விறகை அடுக்கி, அடுப்பை மூட்டி, பானையை ஏற்றி வைத்து, அரிசியை கழுவி உலையில் போட்டுவிட்டு, காய்கறிகளை நறுக்கி போட்டு குழம்பு வைத்து இறக்கினாள்.
அவள் மளிகை சாமான்களை வாங்கி வந்தது தெரிந்ததுமே, குழந்தைகள் மூவரும் மூன்று தட்டுகளை தூக்கி வைத்து கொண்டு அமைதியாக அடுப்பில் இருக்கும் பானையவே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சமையலை ஆக்கி இறக்கி வைத்துவிட்டு மூன்று தட்டிலும் சாதத்தை போட்டு குழம்பை ஊற்றியதுமே, ஒரு பெருமூச்சோடு குழந்தைகள் சாப்பிட துவங்கினர்.
முந்தின நாள் இரவு சாப்பிடாமல் குழந்தைகள் மூவரும் பசியில் “அம்மா பசிக்குது. அம்மா பசிக்குது” என்று அனத்திக் கொண்டு கிடந்த காட்சி அவள் கண் முன்னே வந்து நின்றது.
“கட்டுனவன் பாதியில விட்டுட்டு போயிட்டான். ஒத்த உசுரா இருந்திருந்தா அவனோடவே சேர்ந்து போயிருக்கலாம். ஆனா, என்னை நம்பி மூனு உசுருல்ல இருக்கு. இதுங்கள ஒரு கரை சேர்க்கறதுக்காவது, நான் உசிரு வாழ்ந்து தானே ஆக வேண்டியதிருக்கு.” நினைத்தவள் சாப்பிடலாம் என தட்டை எடுத்து சாதத்தை போட சென்றாள்.
அப்போது “பகவதி” என்று வாசலில் இருந்து கேட்ட குரலை யாரென்று பார்க்க திரும்பியவளின் கண்முன்னே, யாரோ முகம் தெரியாத ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
அவனை “யாரு?”
“காலாங்கரை பண்ணையாரு உன்ன ஒரு வேலை விசயமா அவசரமா கூட்டிட்டு வர சொன்னாரு” என்றதும்.
அவள் எல்லாம் புரிந்தவளை போல திருப்பி அவனை நோக்கி எந்த கேள்வியும் கேட்காமல் தனது மூன்று குழந்தைகளை பார்த்து “கண்ணுங்களா, நல்லா வயித்துக்கு போட்டு சாப்பிடுங்க அம்மா வந்திருதேன்.” சொல்லிவிட்டு அவனோடு நடந்தாள்.
காலாங்கரை ஊருக்குள் இருந்தது. தந்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டாள். ஊருக்கு வெளியிலே வந்ததும் பெண் என்று பாராமல் உதைத்து கீழே தள்ளி அடித்து உதைத்தபடி ஊத்தங்கரை நோக்கி இழுத்து சென்றனர்.
கடையில் இருந்து வாழைத்தாரை வாங்கி அவளின் தலையில் ஏற்றி வைத்து மறுபடியும் இராசாபுரம் நோக்கி அடித்தே கூட்டி வந்தனர்.
அவள் எல்லோருக்கும் முன்னதாக வேகமாக நடக்க வேண்டும். நடையில் இலேசான தொய்வு ஏற்பட்டால் ஏறு மாட்டை ஓட்டும் சாட்டை குச்சியாலே அடி விழுந்தது.
சிலுவையை சுமக்க சொல்லி இயேசு நாதரை அடித்து இழுத்து சென்றதை போல பகவதியை அழைத்து சென்றனர். ஒரு வழியாக இராசாபுரம் வந்து சேர்ந்தார்கள்.
சுற்று வட்டாரத்தில் காலாங்கரை பண்ணையாரை மீறி எதுவும் நடந்து விடாது. அதனால் ராமச்சந்திரன் முதலாளி உத்தரவின் பேரில் அங்கிருந்து காலாங்கரை பண்ணையாரின் வீட்டுக்கு அடித்து இழுத்து வந்தனர்.
பண்ணையாரிடம் நடந்த விவரத்தை சொல்லிவிட்டு, பண்ணையாரின் துணையோடு அவரின் பண்ணை வீட்டில் வைத்து, அவளை வருவோர் போவோர் எல்லாம் அடித்து உதைத்தனர்.
ஒரு வகையில் காலாங்கரை பண்ணையார், வேண்டி கேட்டுக் கொண்டிருந்தால் பகவதியை இராசாபுரத்து இராமச்சந்திரன் மன்னித்திருப்பார். ஆனால் பண்ணையாருக்கு ஒரு விதத்தில் ஆசை நிறைவேறியது.
பகவதியும் சதாரணப்பட்டவள் இல்ல. வாட்ட சாட்டமாக நல்ல அரேபியன் குதிரையை போலதான் இருப்பாள். பார்ப்பவர்கள் அவளை அடக்க நினைத்தது உண்டு. ஆனால் அவள் யாருக்கும் அடங்கியதில்லை.
பண்ணையாருக்கு அவள் மேல் ஆசை இருந்தது. பலமுறை தனது பண்ணைக்கு வேலைக்கு அழைத்து தனது ஆசையை சொல்லிப் பார்த்தார். அதற்கு பகவதி ஒப்புக்கொள்ளவில்லை.
ஊரே பண்ணையாரின் நிலத்தில் வேலை செய்து பசியாறியது. பகவதி திருட்டு பட்டம் சுமந்தாலும் சுமப்பேன்; ஆனா, தேவடியாள் பட்டம் சுமக்க தயாராக இல்லை என்று உறுதியாய் இருந்தாள்.
இதற்கு மேல் ஒரு அடி கொடுத்தாலும் செத்து போயிடுவாள் என்கிற நிலையில் சாப்பிட சொல்லி சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்தனர்.
அவள் தெருவிற்குள் வரும்போது ஊரே தூங்கிக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் வரும்போது முந்தைய நாள் பசியில் தூங்காத குழந்தைகள் இன்று நன்றாக தூங்கிக் கொண்டிருந்தன.
வந்தவள் அவளை அறியாமலே படுக்கையில் விழுந்தாள். படுத்திருந்த நிலையில் தனது குழந்தைகளை பார்க்கிறாள். குழந்தைகள் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தன.
அவர்களின் தூக்கத்தை அவளது கண்கள் ரசித்தன. மனம் நிம்மதியில் பொங்கியது. அதே நிம்மதியில் கண்கள் சொருகியது. உடல் மட்டும் வலியில் துடித்தது. தூக்கத்தில் ஒரு குழந்தையை போல் “அம்மா… அம்மா” என அனத்திக் கொண்டு கிடந்தாள்.
காலாங்கரை பண்ணையாருக்கு அன்று இரவு முழுவதும் பகவதி நினைப்புதான். அவள் சம்மதித்திருந்தால், தான் அவளிடம் நிச்சயம் அவமானப் பட்டிருப்போம் என்பதும், அவளைத் தன்னால் அடக்கியிருக்க முடியாது என்பதும் பண்ணையாருக்குத் தெரியும்.
ரக்சன் கிருத்திக்
8122404791
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!