அவரைக்காய் நம் நாட்டில் பெரும்பாலும் வீட்டுத்தோட்டத்தில் பயிரிடப்படுகிறது. இதன் வேர், தண்டு, இலை, விதை, காய் என எல்லா பாகங்களும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும் அவரையின் பிஞ்சு அதிகளவு உணவாக பயன்படுத்தப்படுகிறது. இக்காய் தனிப்பட்ட மணத்துடன் லேசான இனிப்பு சுவையினைக் கொண்டுள்ளது.
இக்காய் ஃபேபேஸி என்ற இருபுற வெடிகனி வகை குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூரியஸ் என்பதாகும்.
இது மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் லெகுமினி வகையைச் சேர்ந்தது. சில நாடுகளில் இக்காய் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அவரையின் அமைப்பு மற்றும் வளரியல்பு
அவரை வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலத்தில் நன்கு வளரும். இது ஓராண்டு தாவர வகையைச் சார்ந்தது. அவரை ஏறு கொடி வகைத் தாவரம் ஆகும்.இத்தாவரம் பந்தலிட்டோ, மரத்தின் மீது படரவிட்டோ வளர்க்கப்படுகிறது.
அவரைக் கொடி 10-15 அடி உயரம் வரை வளரும். இக்கொடி வெள்ளை அல்லது கருஊதா நிறத்தில் பூக்களைப் பூக்கிறது. அவரையின் பூக்கள் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், தேன்சிட்டுக்கள் ஆகியவற்றைக் கவர்ந்து இழுக்கின்றன. நல்ல வடிகால் அமைப்புடைய மண்ணில் செழித்து வளரும்.
அவரைக்காயானது கருஊதா நிறத்திலிருந்து பச்சை நிறம் வரை காணப்படுகிறது. இக்காய் கொடுவாள் அமைப்பில் வழுவழுப்பான மேற்புறத் தோலைக் கொண்டிருக்கிறது.
இக்காய் 4-5 செமீ நீளத்தில் இருக்கும். இக்காயின் உட்புறத்தில் 4-6 விதைகள் காணப்படும். விதைகள் வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் 1 செமீ நீளத்தில் இருக்கும். இக்காயின் விதைகள் வெள்ளை, கிரீம், இளம்பழுப்பு, கருஊதா வண்ணங்களில் இருக்கும்.
அவரையின் வரலாறு
அவரையின் தாயகம் இந்தியா என்று கருதப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில் இது இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
17-ம் நூற்றாண்டில் இக்காய் ஐரோப்பாவிலும், 18-ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இது அலங்காரப் பொருளாக அறிமுகமானது. தற்போது ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது உணவுக்காக அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
அவரையில் உள்ள சத்துக்கள்
அவரையில் விட்டமின் பி1(தயாமின்), பி5(பான்டோதெனிக் அமிலம்) ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. மேலும் இக்காயானது விட்டமின் சி, பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இக்காயில் தாதுஉப்புக்களான கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, துத்தநாகம், செலீனியம் ஆகியவை உள்ளன. இக்காயானது கார்போஹைட்ரேட், அதிக புரதம், நார்ச்சத்து முதலியவைகளையும் பெற்றுள்ளது.
அவரையின் மருத்துவப்பண்புகள்
மூளையின் நலத்திற்கு
மூளையின் செயல்திறன், கவனம் செலுத்துதல் போன்றவற்றிற்கு உதவுகின்ற மூளையின் பாதைகளான கலக்டோஸ் மற்றும் டோபமைன் ஆகியவற்றிற்கு செம்புச்சத்து அவசியமாகும்.
செம்புசத்து குறைபாடு ஏற்படும்போது சோர்வு, குழப்பமான மனநிலை, கவனச் சிதறல், குறைந்த வளர்சிதை மாற்றம் ஆகியவை ஏற்படும். டைரோஸினாஸ், அஸ்கார்பேட் ஆக்ஸிடேஸ், சூப்பர்ராக்ஸைட் டிக்டேடஸ் மற்றும் விட்டமின் சி ஆகியவற்றை பயன்படுத்துவதில் செம்புச்சத்து முக்கியமானது.
செம்புசத்தானது ஆன்டிஆக்ஸிஜென்டாகவும் செயல்படுகிறது. இது ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடுத்து மூப்பு ஏற்படுவதை தள்ளிப் போடுகிறது.
நரம்புச்சிதைவு, புற்றுநோய் ஆகியவற்றையும் தடை செய்கிறது. எனவே செம்பு சத்தினைக் கொண்டுள்ள அவரையை உணவில் சேர்த்து பயன்பெறலாம்.
இதய நலத்திற்கு
விட்டமின் பி1(தயாமின்) அசிடைல்கொலின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அசிடைல்கொலின் நரம்பிலிருந்து தசைகளுக்கு செய்திகளைக் கடத்துகிறது.
இதய தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு நரம்பியல் கடத்தி அவசியமான ஒன்றாகும். மேலும் தயாமின் இதயக்கோளாறுகளை சீர்செய்வதோடு மூளையின் செயல்பாட்டினையும் மேம்படுத்துகிறது.
புற்றுநோயைத் தடுக்க
துத்தநாகம் ஆன்டிஆக்ஸிஜென்டாகவும், நோய்எதிர்ப்பு அழற்சி பண்பினையும் கொண்டுள்ளது. துத்தநாகம் செல்பிரிதலை சீராக்கி, செல்கள் வேகமாக மூப்படைவதை தடைசெய்கிறது. இதனால் புற்றுநோய் வருவது தடை செய்யப்படுகிறது.
போதுமான அளவு துத்தநாகத்தை உணவில் எடுத்துக் கொள்ள பக்கவிளைவுகள், நோய் தாக்கம் ஏற்படுவது குறைக்கப்பட்டு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. எனவே துத்தநாகச்சத்து உள்ள அவரையை உணவில் உட்கொண்டு புற்றுநோயைத் தடுப்பதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் பெறலாம்.
சுவாசம் மேம்பட
செலீனியம், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாதுப்பொருட்கள் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை குணப்படுத்த உதவுகிறது.
ஆக்ஸிஜனேற்ற அழுத்தமே நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்படக் காரணமாகிறது. மாங்கனீசு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து நுரையீரல் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. எனவே சுவாசம் மேம்பட அவரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
நல்ல செரிமானத்திற்கு
நார்ச்சத்து செரிமானத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கரையாத நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை ஒன்று திரட்டி விரைவாக வெளியேற்றுகிறது. இதனால் அஜீரணம், மலச்சிக்கல் ஆகியவை தடைசெய்யப்படுகிறது.
கரைக்கூடிய நார்ச்சத்து நீரினை உறிஞ்சி பிசுபிசுப்பான பொருளாக மாறி உணவுப்பாதையில் உள்ள பாக்டீரியவை நன்கு செயல்பட தூண்டி உணவினைச் செரிக்கச் செய்கிறது. எனவே நார்சத்து மிக்க அவரையை உணவில் சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறலாம்.
தூக்கமின்மையைக் குணப்படுத்த
குறைத்த அளவு ஊட்டச்சத்தை உட்கொள்ளவது தூக்கமின்மைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. போதுமான அளவு மெக்னீசியத்தை உட்கொள்ளும்போது, அது மனஅழுத்தத்திற்கு காரணமான கார்டிசோலின் அளவினை குறைக்கிறது.
மேலும் மெக்னீசியம் தூக்கத்திற்கு காரணமான மெலாடனின் அளவினை அதிகரிக்கிறது. எனவே மெக்னீசியத்தைக் கொண்டுள்ள அவரையை உணவில் கொண்டு தூக்கமின்மையைக் குணப்படுத்தலாம்.
தேவையான ஆற்றலினைப் பெற
இரும்புச்சத்து செல்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்ல உதவுகிறது. மேலும் உணவின் ஊட்டச்சத்துக்களை குடல் உறிஞ்சவும், புரதம் செரிக்கவும் இச்சத்து உதவுகிறது.
இரும்புசத்து குறைவால் மந்தநிலை, சோர்வு ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைவதன் அறிகுறியாக தசைப்பிடிப்பு, மந்தமனநிலை, கவனச்சிதறல் ஆகியவை கருதப்படுகின்றன. எனவே இரும்புச்சத்து அதிகம் உள்ள அவரையை உணவில் சேர்த்து தேவையான ஆற்றலினைப் பெறலாம்.
ஆரோக்கியமான ஈறுகளுக்கு
விட்டமின் டி, பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியம், பற்களின் எனாமல், ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை ஆகும்.
குழந்தைகள் பாஸ்பரஸ், கால்சியம் அதிகம் உள்ள உணவினை உட்கொள்வதால் ஆரோக்கியமான பற்களைப் பெறலாம். பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் டி-யானது கால்சியத்தை உறிஞ்சி அதன் அளவினை உடலில் நிலைநிறுத்தி பல் உருவாக உதவுகிறது.
மேலும் விட்டமின் டி ஈறுகளின் வீக்கத்தைக் குறைத்து அதனை ஆரோக்கியமாக வைக்கிறது. எனவே அவரையை உண்டு ஆரோக்கியமான ஈறுகளைப் பெறலாம்.
மனஉற்சாகத்திற்கு
புரத உணவுகள் அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளன. இந்த அமினோ அமிலங்கள் ஹார்மோன்கள் கட்டுப்பாடு, மனநிலையை சமப்படுத்துதல், கவலையைப் போக்குதல் ஆகியவற்றிற்கு அவசியமானது.
மேலும் புரோடீன்கள் செரோடோனின், டோபமைன் போன்ற மனஅமைதிக்குக் காரணமான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
புரதமானது குளுக்கோஸை சமநிலைப்படுத்தி, எரிச்சலூட்டும் தன்மை, இரத்தத்தில் சர்க்கரை அளவின் ஏற்றஇறக்கத்தால் ஏற்படும் பசி ஆகியவற்றையும் சமநிலைப்படுத்துகிறது. எனவே அவரையை ஒட்கொண்டு மனஉற்சாகத்தினைப் பெறலாம்.
தசைப்பிடிப்புகளுக்கு நிவாரணம் பெற
அவரையில் உள்ள பொட்டாசியம் தசைப்பிடிப்பை சரிசெய்வதோடு தசைகளுக்கு வலிமையையும் கொடுக்கிறது. பொட்டாசியம் தசைகளில் திரவ அளவினை சரிசெய்து தசைப்பிடிப்பைக் குணமாக்குகிறது. எனவே அவரையை உண்டு தசைப்பிடிப்பிற்கு நிவாரணம் பெறலாம்.
அவரை பற்றிய எச்சரிக்கை
அவரை அதிகமாக உண்ணும்போது அது வாயுவை உண்டாக்கிவிடும். எனவே இதனை அளவோடு உண்பது நலம்.
அவரையினை வாங்கி உபயோகிக்கும் முறை
அவரையினை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் காயங்கள் இல்லாமல், இளமையானதாக இருக்குமாறு வாங்க வேண்டும்.
உடைந்த, வெட்டுக்காயங்கள் கொண்டவற்றைத் தவிர்த்து விடவும். இதனை அறையின் வெப்பநிலையில் ஓரிரு நாட்கள் வைத்திருந்து உபயோகிக்கலாம்.
அவரையினை பயன்படுத்தும்போது தண்ணீரில் கழுவி முனைகளை வெட்டி நாரினை நீக்கி உபயோகிக்கவும்.
அவரையானது சமையலில் பயன்படுகிறது. சூப்புகள், சாஸ்கள், சாலட்டுகள் தயார் செய்யவும் பயன்படுகிறது.
சத்துக்கள் நிறைந்த அவரையை அளவோடு உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.
– வ.முனீஸ்வரன்
மறுமொழி இடவும்