அவலோகிதம்

அவலோகிதம் – யாப்பு மென்பொருள்

அவலோகிதம் – தமிழின் அசாத்தியமான, அதோடு மிகச் சிறப்பான யாப்பு மென்பொருள் ஆகும்.

உள்ளிடப்பட்ட உரையினைத் தமிழ் யாப்பு விதிகளின் படி ஆராய்ந்து – எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புக்களை கணக்கிட்டு, இவற்றைக்கொண்டு உள்ளீட்டின் பாவகையினைக் கண்டறிந்து, மேற்கூறிய யாப்புறுப்புகளையும் பாவிதிகளின் பொருத்தத்தையும் வெளியிடும்.

இதில் யாப்பிலக்கணம் கற்கவும் வழி உள்ளது. கீழ்க்கண்ட பாவகைகளை அவலோகிதம் கண்டுகொள்ளும் திறனையும் கொண்டது ஆகும்.

வெண்பா, ஆசிரியப்பா, தரவு கொச்சகக் கலிப்பா, வெண்கலிப்பா, வஞ்சிப்பா, குறட்டாழிசை, குறள்வெண் செந்துறை, வெண்டாழிசை, வெள்ளொத்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம், ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம், கலித்தாழிசை, கலித்துறை, கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், வஞ்சித் தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம் ஆகிய இலக்கணங்களை இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தமிழில் சிறப்புப் பொருந்திய இலக்கணத்தை அறிந்து கொள்வது தமிழின் மேன்மையை அறிந்து கொள்வதாகும். இலக்கணப் புலமை இலக்கியப் புலமையை மிகுக்கும் தன்மையுடையது.

இன்றைய நவீன இலக்கியம் இலக்கணத்தைச் சற்று ஒதுக்கி வைத்தாலும், ஆழமான, சிறப்பான, தமிழின் கவிதைகள் இலக்கணத்தின் மூலம் செம்மைப் படுத்தப்பட்டு வருகின்றன. அவை உலகளாவிய பெருமையினையும் அந்த இலக்கணத்தினாலே பெற்றிருக்கின்றன.

உலக ஞானத்தை வழங்கக் கூடிய சிறப்பு வாய்ந்தது நமது இலக்கியங்கள் ஆகும். அவ்வகையில் இன்றைய காலகட்டத்திலும் இலக்கணத்தோடு எழுதுகிற இலக்கியங்கள் கற்றோரால் விரும்பப்படுகின்றன. காலத்தால் மதிக்கப்படுகின்றன. வேற்று மொழியிலும் அவைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு சிறப்பைப் பெறுகின்றன எனலாம்.

இலக்கணத்தை அறிந்து ஆய்ந்து ஆய்ந்து அதில் எழுதுவது என்பது மிகப் பெரும் பாண்டித்தியம் பெறுவதாகும்.

இன்று, இலக்கணத்தை அறிந்து கொள்வதற்கு, உலகளாவிய தமிழ் மக்கள் ஏங்கித் தவிக்கிற நிலை காணப்படுகிறது. இந்த நிலையை நீக்குவதற்கு தமிழின் ஆழமான அடிப்படை இலக்கணத்தை அறிந்து கொள்வதற்கு இந்த அவலோகிதம் எனும் இணையதளம் பயன்படுகிறது.

எழுத்து, அசை, சீர், தளை, அடி என எல்லா இலக்கணங்களையும் குறிப்பாய் யாப்பு இலக்கணத்தை மிக மிகச் சரியாகவும், அழகாகவும், விரிவாகவும் கூறு கூறாக விவரித்து விளக்குவதாக இந்தத் தளம் அமைந்திருக்கிறது.

முதலில், ஆராய்க எனும் பகுதி காணப்படுகிறது. இதில் பா உள்ளிடும் வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் தாங்கள் யாப்பைத் தெரிந்து கொள்ள வேண்டிய இலக்கியத்தை நகல் செய்து இங்கு பதிவேற்றவும்.

அப்படிச் செய்கிற பொழுது, உடனடியாகப் பக்க அமைப்பின் மறுபக்கத்தில், இந்த உள்ளீடு செய்யப்பட்ட சொல்லிலிருந்து

மிகச்சரியாக எழுத்துக்கள் எத்தனை? அசைகள் எத்தனை? ஒவ்வொரு வார்த்தைகளிலும் எவ்வாறு பயன்படுத்தப் பட்டிருக்கிறது?

தளை எவ்வாறு சொற்களுக்கு இடையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது?

ஒரு அடிக்கும் அடுத்த அடிக்கும் இடையில் அது என்ன இணைப்பில் இருக்கிறது?

அதனுடைய தொடை இலக்கணங்கள் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன?

என்ற அனைத்து தகவல்களும் ஒரு குறுகிய நேரத்திற்குள் உங்களுக்கு அளவிடப்பட்டு, இலக்கணத்தோடு அது என்ன யாப்பு என்ற முறையிலும், அதற்கான இலக்கணத்தை ஒப்பீடு செய்து இங்கு அளிக்கப்படுகிறது. இது அவலோகிதம் ஓர் அசாத்தியமான மென்பொருள் என்பதை மெய்ப்பிக்கின்றது.

இலக்கியத்தை வகைப்பாடு செய்கிற இலக்கணங்கள் அத்தனையும் இந்த மென்பொருள் கையாளுகிறது. அதோடு, அந்த இலக்கியத்தில் அமைந்திருக்கும் இலக்கணங்கள் யாவற்றையும் மிகச்சரியாக விளக்குகிறது.

அடுத்ததாகச் சொல் தேடல் எனும் பகுதி காணப்படுகிறது. அங்கு ஒரு தேவையான சொல்லைப் பதிவிட்டால், அதனுடன் சிறந்த ஓசை நயத்துடன் பொருந்தக்கூடிய பல்வேறு சொற்கள் அனைத்தும் ஒன்று சேர தொகுத்து அளிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு பற என்ற சொல்லைப் பதிவிட்டால், அதனுடன் சிறந்த ஓசை நயத்துடன் பொருந்தக்கூடிய 661 சொற்கள் இங்கு வெளிக் காட்டப்படுகின்றன.

அவற்றில், எதுகை சொற்களைத் தனியாகப் பார்க்கலாம்;

சம அளவு எழுத்து எண்ணிக்கை உடைய சொற்களைப் பார்க்கலாம்;

மாத்திரை எண்ணிக்கையிலேயே தொடர்புடைய சொற்களைக் காணலாம்;

வாய்ப்பாட்டில் அதேபோன்ற வாய்ப்பாடுகளை உடைய சொற்களைக் காணலாம்.

இவ்வாறு ஒரு சொல்லுக்கு, அதனுடன் சிறந்த ஓசை நயத்துடன் பொருந்தக்கூடிய சொற்களைத் தேடுகிற மிகச் சரியான ஒரு மென்பொருளாக இந்த மென்பொருள் காணப்படுகிறது. இதன் மூலம் ஒரு சொல்லுக்கான இணையான பல சொற்களை எடுப்பதற்கு இது பயன்படும்.

அடுத்ததாகப் பாவகை எனும் பகுதி காணப்படுகிறது. இதில் வெண்பா என்ற தலைப்பின் கீழ் ஒரு வெண்பாவில் அமைக்கப்பட்டு இருக்கிற இலக்கியத்தைப் பதிவிட்டோமானால், அதனுடைய முழு இலக்கணத்தையும் ஒப்பீடு செய்து வழங்குகிறது அல்லது அதற்குரிய அடிப்படை இலக்கணத்தை மிக விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கின்றது.

இதேபோல, ஆசிரியப்பா, ஆசிரியப்பாவின் இனங்கள், கலிப்பா, வஞ்சிப்பா, வஞ்சிப்பாவின் பாவினங்கள் என எல்லா இலக்கணங்களும் அதற்கான உதாரணங்களும் மிக விளக்கமாக எடுத்துக்காட்டுகளுடன் இப்பகுதியில் தரப்பட்டிருக்கின்றன.

அடுத்ததாகக் கற்க எனும் பகுதி. இங்கு, பேச்சுத் தமிழில் எழுத்து இலக்கணங்கள் மிக விரிந்த நிலையில் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. இதேபோல் அசை, சீர், அடி, தளை, தொடை, வெண்பா, பாவினம் என்பவையும் மிகச்சரியாக அதனுடைய இலக்கண விரிவாக்கங்களுடன் மற்றும் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

அடிப்படையாக ஒருவர் மொழியில் தெரிந்துகொள்ள வேண்டிய அத்தனை இலக்கணங்களும் இங்கு மிகச் சரியான அளவில் விளக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாகக் குறிப்புகள் எனும் பகுதி அமைந்திருக்கிறது. இதில் யாப்பு அடிப்படையில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை பாவிதிகள் என்பன மிகச் சரியான அளவில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

இந்தத் தளத்தில் பிற கருவிகள் எனும் பகுதியில், அக்ஷரமுகம், ஜினவாணி, அனுநாதம் என மூன்று விரிவான இணையதளங்களினுடைய தொடர்புக்கு இணைப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

அக்ஷரமுகம் ‍ தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்க உதவுகிறது.

ஜினவாணி செயலியானது நவீனகாலத்து தமிழ் எழுத்துக்களை தமிழ்-பிராமியிலும் வட்டெழுத்திலும் மாற்றும் திறன் கொண்டது.

அனுநாதம் தமிழ் எழுத்துக்களை சர்வதேச ஒலிப்பு எழுத்துகளாக மாற்றும் கருவி ஆகும்.

தமிழின் முன்னேற்றத்திற்கு இந்த மென்பொருள்கள் அசாத்தியமான விளைவைத் தருவனவாகும்.

தமிழினுடைய இலக்கணங்களைத் தெரிந்துகொண்டு, சரியான இலக்கணத்தோடு இலக்கியங்களை எழுதுவதற்கு உதவியாக‌, புதிய‌ மென்பொருளைக் கண்டுபிடித்து இருக்கிற இத்தள ஆராய்ச்சியாளர்களுக்குத் தமிழுலகம் என்றும் கடமைப்பட்டிருக்கும்.

பண்டைய தமிழ் மஹாயான பௌத்தர்களால், தமிழ் மொழியை அகத்தியருக்கு உபதேசித்தவராகக் கருதப்பட்ட, சகலபுத்தர்களின் மஹாகருணையின் உருவகமாக விளங்கும் பகவான் போதிசத்துவர் அவலோகிதேஸ்வரரின் பெயர் இம்மென்பொருளுக்கு இடப்பட்டது சிறப்பாகும்.

யாப்பிலக்கணத்தை அறிந்து கொள்ள www.avalokitam.com எனும் சொடுக்கியைச் சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com