அவல் இடித்தது – மங்கம்மாள் பாட்டி

“சப்பாத்திக்கள்ளி முள்ள வச்சி காது குத்திக்கிட்டிக சரி. எப்ப கம்மல் போட்டீக?” என்று கேட்டாள் தனம்.

“அது தனிக்கதைம்மா. கம்மல் வாங்க நெதம் ஒரு ஓட்டத்துட்ட வீட்ல வாங்கி சேத்து வைச்சு கம்மல் வாங்கிக்க சொர்ணம் சொன்னாள்ல.

நானும் எங்க வீட்ல போயி கேட்டேன். எங்கம்மா தரமாட்டேன்னு சொல்லிட்டா.

எங்க பெரிய அண்ணன் நீ திருவிழாவுக்கு போற அன்னிக்கு உனக்கு பத்து பைசா தரேன். அத வச்சி உனக்கு வேணுங்கிறத வாங்கிக்கோ”ன்னு சொன்னாங்க.

நானும் ‘சரி’ன்னு சொல்லிட்டேன்.

மத்தவங்க எல்லாம் சொர்ணத்துகிட்ட காச சேத்து வச்சாங்க. வைகாசியில தேவதானத்ததுல நடக்கிற தேர்த்திருவிழாவிற்கு ஒருமாசம் பாக்கி இருந்தது. ரெண்டு வாரம் ரோடு வேலைக்குப் போனோம்.

இப்ப வளையல், குப்பி, கம்மல் அப்படினு எந்த பொருளை எப்ப வேணுனாலும் வாங்கிக்கலாம். இன்னைக்கு கடைகள் பெருத்துப் போச்சு.

அப்பயெல்லாம் வளையல், கம்மல், ரிப்பன்னு எல்லாத்தையும் திருவிழாக் கடையில மட்டும்தான் வாங்க முடியும். ஏன்னா, அன்னிக்கு இவ்வளவு கடைகள் கிடையாது. விவசாயம், ஆடு, மாடு மேய்க்கிறதுதான் முக்கியமான வேலையா அன்னிக்கு இருந்துச்சு.

இன்னிக்கு இருக்கிற மாதிரி பலகாரக் கடைகள் எல்லாம் அப்பக் கிடையாது. இன்னைக்கு உள்ள விதவித பலகாரகள் எல்லாம் அன்னைக்குக் கிடையாது.

அந்த காலத்துல பலகாரங்களை வீட்லதான் செய்வாங்க. பலகாரம் செய்யற வீட்டுக்கு எடுபிடி வேலைக்கு நான் போயிருக்கேன்.

அந்த சமயத்துல தேவதானத் தேர்திருவிழாங்கிறது சுத்துல இருந்த எல்லா ஊருக்கும் பெரிய விழா. புதுத்துணி திருவிழாவுக்குத்தான் எல்லாரும் எடுப்பாங்க. அரிசி முறுக்கு, அதிரசம், சீனி மிட்டாய், அவல் இதெல்லாம்தான் திருவிழாப் பலகாரங்கள்.

வைகாசியில கிடைக்கும் மாம்பழம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம், கொத்தமல்லி துவையல், கத்தரிக்காய் புளிக்குழம்பு இதெல்லாம் திருவிழாவிற்கான சாப்பாடுகள்.

தேர்திருவிழா நடக்கிற ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அவல் இடிக்கிற (தயாரிக்க) வேலைக்குப் போனேன். அவல் இடிக்கிறது எப்பவுமே ராத்திரியில இருந்து காலையில ஏழு மணிவரைக்கும் நடக்கும்.

அவலுக்கு நெல்ல முதல்நாளே ஊற வைச்சிருவாக. மறுநாள் காலையில குத்துக்கூடையில (வடிகட்டும் கூடை) நெல்ல அள்ளி வைச்சு தண்ணிய ஓட்ட வடிச்சிடுவாக.

அப்புறம் பக்கப்பகுதியில ஓட்டைப்போட மண்பானையை அடுப்புல வைச்சு அதுல வடிச்ச நெல்லச் சேப்பாங்க.

நெல்ல வறுக்க பெரிய தென்ன வரிச்சிய எடுத்து முனைப்பகுதியில வெள்ளைத் துணியை கட்டி வைச்ச கம்ப பயன்படுத்துவாங்க.

நெல்ல பானையில போட்டதும் அடுப்புல தீய மடமடன்னு போடுவாங்க. நெல்லு பொரிய ஆரம்பிச்சதும் தீயக் குறைச்சிருவாங்க. அவல் இடிக்கும்போது அடுப்பெரிக்க சோளத்தட்டையப் பயன்படுத்துவாங்க.

தையில அறுவடைக்கு அப்புறம் சோளத்த விதைச்சி சித்திரையில சோளத்த அறுத்து அந்த தட்டையத்தான் பத்திரப்படுத்தி அவல் இடிக்க பயன்படுத்துவாங்க. அதனால பெரும்பாலும் எல்லாரு வீட்லையும் சோளத் தட்டைய பத்திரமா வைச்சிருப்பாங்க.

பொரிஞ்ச நெல்லை குத்து உரல்ல போட்டு இரண்டு பேர் மாத்தி மாத்தி உலக்கையால ஒரு பத்து குத்து வேகமாக குத்துவாங்க. பிறகு ஒரு ஐஞ்சு குத்து மெதுவாக குத்துவாங்க.

உரலில் உலக்கையால் இடிப்பது

அப்பதான் நெல் உறை வேகமாப் பிரிஞ்சி அவலும் உமியுமா மாறும். குத்தின அவலையும் உமியையும் தோண்டிருவாங்க.

நெல்லை ஓட்டுல போடையில நெரம்பக் கொஞ்சமா அதாவது கால் டம்ளருக்கும் குறைவாகவே போட்டு வறுப்பாக. அதுதான் இதுல ரொம்ப முக்கியம்.

பொதுவா நாலுபேர் அவலு இடிக்க போவாங்க. அடுப்புல நெல்லப் போட்டு பக்குவமாக வறுக்க ஒருஆளு. உரல்ல வறுத்த நெல்ல குத்த ரெண்டு பேரு.

வடிச்ச நெல்ல வறுக்குறவகளுக்கு எடுத்துக் கொடுக்க, வறுத்த நெல்ல உரல்ல போட, உரல்ல சிதற நெல்லு, அவல் உமி இதெல்லாம் அள்ளன்னு எடுபிடிக்கு ஒரு ஆளு. அந்த வயசில நான் எடுபிடி வேலைக்குத்தான் போவேன்.

வறுக்க எப்பவுமே கொஞ்சம் வயசான ஆளுதான் சரியா இருக்கும். உரல்ல குத்த குமரிகதான் சரியா வரும். எடுபிடி வேலைக்கு பத்து வயசுக்குள்ள இருக்குற பிள்ளைகதான் கூப்பிட்டுக்குவாக.

ராத்திரி பத்து மணிக்கு ஆரம்பிச்சி ஒருசில சமயத்துல காலையில ஏழு மணி வரைக்கும் அவல் இடிக்கிற வேலைக்குப் போவோம். ரெண்டு, மூனு வீட்டுக்கு ஒரே நாள்ல அவல இடிச்சிருக்குறோம்.

அப்பயெல்லாம் அவல் இடிக்க கூலியே அவல்தான். பத்துப்படி நெல்லு இடிச்சா மொத்த கூலி கால்படி அவல். அத நாலாப் பிரிச்சுக்குவாக.

ஒருசிலர் இடிச்ச அவலையும் உமியையும் தனித்தனிப் பிரிக்கச் சொல்லுவாக. இன்னும் சிலர் ரெண்டையும் ஒன்னா வைச்சி தேவப்படும்போது அவலை எடுத்து சொலவுல போட்டு பெடைச்சி அவலையும் உமியையும் பிரிச்சிக்கிடுவாக.

அவல் பெடைக்க சொலவு அளவுல சிறிசா இருக்கும். வீட்ல சின்னப் பிள்ளைக அவுகளா அவலைப் பெடைச்சு சாப்பிடுவாங்க.

சின்ன வயசுலே அவல பெடைச்சு பழகினாதான் வளர்ந்ததுக்கு அப்புறம் நெல்லு, சோளத்த பெடைக்கிறது சுலபமாக இருக்கும்.

அதனாலேயே நிறைய வீட்ல அவலையும் உமியையும் ஒன்னா வச்சிருப்பாங்க. அதோட உமியோட அவல் சேர்ந்து இருக்கிறப்ப சீக்கிரம் சிக்கு வாடை வராம மணம்மா இருக்கும்.

இப்பயெல்லாம் அவல் கடையில ஈசியா காசு குடுத்து வாங்கிறாப்பில கிடைக்குது. அப்பயெல்லாம் திருவிழாவுக்கு இடிக்கிற அவல ஆறு மாசத்துக்கு வச்சி பயன்படுத்துவாக.

அந்த வருசம் நான் அவல் இடிக்க எடுபிடி வேலைக்குப் போயி நாலு படி அவல் சம்பாரிச்சேன்.

மாப்பிளைச் சம்பா நெல்லுல தயார் செய்த அவல் ரொம்ப சுவையாக இருக்கும். அதே மாதிரி மட்டை அரிசி நெல்லு அவலும் (சிவப்பு அவல்) நல்லா இருக்கும்.

அவல் இடிக்கிற மாதிரி சீனி மிட்டாய் தயாரிக்குற வேலைக்கும் நான் எடுபிபடியாப் போயிருக்கேன்.

சீனி மிட்டாய் தயார் செய்ய உளுந்த அரைச்சு எண்ணெயில பொரிச்சு, காய்ச்சின சீனிப்பாகுல ஊற வைச்சி எடுப்பாக.

உளுந்த ஆட்டிக் கொடுக்கிறது. எண்ணெயில பொரிச்ச உளுந்த மாவ சீனிப்பாகுல முக்கி எடுத்து அடுக்கிறது இதுதான் எடுபிடிகள் பார்க்குற வேல.

சீனி மிட்டாய் சுடற வேலைக்குப் போனா எடுபிடிக்கு ரெண்டு பைசாவும், பத்து சீனி மிட்டாயும் கொடுப்பாக.

அந்த வருசம் ரெண்டு இடத்துக்கு சீனி மிட்டாய் சுடற வேலைக்குப் போயி நாலு பைசாவும், இருபது சீனி மிட்டாயும் சம்பாரிச்சேன்.

நாலு பைசாவ எங்க பெரிய அண்ணன்கிட்ட கொடுத்து வைச்சேன். தேர்த்திருவிழாவுக்குப் போகையில கண்டிப்பா பத்து பைசா தர்றேன்னு எங்கண்ணன் எங்கிட்ட உறுதிமொழி கொடுத்தாக.

கனி, நான் மற்றும் சொர்ணம் உட்பட எங்க கூட்டத்தச் சேர்ந்த பத்துபேர் திருவிழாவை எதிர்நோக்கி இருந்தோம்.

( பாட்டி கதை தொடரும்)

வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.