அவல் கேசரி என்பது அவலைக் கொண்டு செய்யப்படும் சிற்றுண்டி வகையாகும்.
முன்பு நெல்லைப் பக்குவமாக வறுத்து பின் சூட்டுடன் உரலில் இட்டு முதலில் வேகமாகவும் பின் மெதுவாகவும் இடிப்பர். மேலே உள்ள உமி மட்டும் தனியே வரும். உமியைத் தனியே பிரித்தெடுத்து விட்டால் அவல் கிடைக்கும்.
நெல்லின் ரகம், வறுக்கும் தன்மை, இடிக்கும் தன்மையைப் பொறுத்து அவலின் ருசி இருக்கும் என்று எங்கள் ஊரில் உள்ள பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
எல்லோரும் எளிதில் அதே நேரத்தில் சுவையாகவும் அவல் கேசரி செய்ய விளக்கம் கொடுத்துள்ளேன். எல்லோரும் இதனை செய்து உண்டு மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் – 200 கிராம் (½ கப்)
தண்ணீர் – 400 கிராம் (1 கப்)
சீனி – 100 கிராம்
ஏலக்காய் – 3 எண்ணம்
முந்திரிப் பருப்பு – 6 எண்ணம்
கிஸ்மிஸ் பழம் – 10 எண்ணம்
நெய் – 6 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் வாணலியில் 2 ஸ்பூன் நெய் விடவும். நெய் உருகியதும் அதனுடன் அவலைச் சேர்த்து வறுக்கவும். அவல் பொறுபொறுவென்று வந்ததும் தனியே எடுத்து வைத்து விடவும்.
பின்பு 2 ஸ்பூன் நெய்யை விட்டு முந்திரியையும் கிஸ்மிஸையும் வறுத்து எடுக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதனுடன் வறுத்து வைத்துள்ள அவலை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அவல் வெந்து தண்ணீர் வற்றும் சமயத்தில் சீனியை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும்.
பின் கெட்டியாகும் சமயத்தில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் மற்றும் ஏலக்காயை ஒன்றிரண்டாக உடைத்து சேர்க்கவும். பின் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும். சுவையான அவல் கேசரி தயார்.
மிதமான சூட்டில் எல்லோருக்கும் பறிமாறவும். விருந்தினர் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம். எல்லோரும் இதனை விரும்பி உண்பர்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் வெள்ளை அவலைக் கொண்டும் கேசரியை தயார் செய்யலாம்.
விரும்பமுள்ளவர்கள் சீனிக்குப் பதில் மண்டை வெல்லம் சேர்த்தும் இதனை தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் கேசரிப் பொடியை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அவல் கேசரியைத் தயார் செய்யலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்