எதிர்வரும் கிருஷ்ண ஜெயந்திக்காக அவல் லட்டு செய்முறை பற்றி விளக்கியிருக்கிறேன்.
கிருஷ்ண ஜெயந்திக்கு எல்லோரும் பொதுவாக தட்டை, சீடை, முறுக்கு போன்ற பலகாரங்களைச் செய்கின்றோம். இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு புதிதாக அவலைக் கொண்டு லட்டு செய்யும் முறையை பற்றி இந்தப் பதிவில் கூறுகிறேன்.
இப்பலகாரத்தித்தினை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிதாகவும் அதே நேரம் சுவையாகவும் செய்ய முடியும்.
இனி அவல் லட்டு செய்யத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றிப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அவல் – 400 கிராம்
நெய் – 200 கிராம்
சீனி – 400 கிராம்
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
ஏலக்காய் – 5 எண்ணம்
செய்முறை
முதலில் சிறிதளவு நெய்யை கடாயில் விட்டு அவலைப் போட்டு வறுக்கவும். அவல் பொரிய ஆரம்பிக்கும் போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
பின் அவலை ஆற வைத்து பின் மிக்ஸியில் போட்டு கொர கொர என அடித்துக் கொள்ளவும்.
சீனியை மிக்ஸியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும்.
ஏலக்காயை மிக்ஸியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுக்கவும். மீதமுள்ள நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொர கொரவென அடித்து வைத்துள்ள அவல், பொடியாக்கி உள்ள சீனி பொரித்து வைத்துள்ள முந்திரி பருப்பு, பொடித்துள்ள ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டு ஒருசேர கலக்கவும்.
பின் அதனுடன் உருக்கிய நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து லட்டுகளாகப் பிடிக்கவும். சுவையான அவல் லட்டு தயார்.
இந்த லட்டை சிறுவர்கள் விரும்பி உண்பர். இதனை ஒரு வாரம் வரை வைத்து உண்ணலாம்.
குறிப்பு
அவல் லட்டு செய்ய சிவப்பு அவலைப் பயன்படுத்தினால் சுவை அதிகரிக்கும்.
விருப்பமுள்ளவர்கள் சீனிக்கு பதில் மண்டை வெல்லம் பயன்படுத்தலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்