அவள், அவன் ஒரு தொடர்கதை…

அவள், அவன் ஒரு தொடர்கதை

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும். ஆனால் காலம் காலமாக கணவன்மார்கள் தினசரி செய்யும் சில பூசைகளும் மனைவிமார்கள் அன்றாடம் செய்யும் சில அர்ச்சனைகளும் என்றும் மாறுவதில்லை.

1960களில்

“இந்தக் கண்ணறாவி சினிமான்னு ஒன்னு வந்தாலும் வந்தது இந்த மனுஷன் காடு கரைக்கு போலாம் ஒரு வேலை வெட்டி பாக்கலாம்னு இல்லாம எப்பப் பாரு சினிமா சினிமான்னு பைத்தியமா அலையறாரு

போன வருஷம் நம்ப மருமவன் வயல் வரப்புக்கு போக சௌரியமா இருக்குமுன்னு எங்கப்பா பொங்கல் சீருக்கு சைக்கிள் ஒன்னு வாங்கிக் குடுத்தாரு.

நான் அப்பவே சொன்னேன். சைக்கிள் எதுக்குப்பா? பசுமாடு வாங்கிக் குடுத்தா பாலுக்கு பாலும் ஆச்சி; காசுக்கு காசும் ஆச்சி; வீட்டு செலவுக்கு உபயோகமா இருக்குமேன்னு.

ஆனா எங்க அப்பாதான் கேக்கல.

இப்ப இந்த மனுஷன் என்னாடான்னா சைக்கிளை எடுத்துகிட்டு வேட்டைக்காரன் சினிமாவுக்கு போறேன் காவல்காரன் சினிமாவுக்கு போறேன்னு இப்படி பொறுப்பில்லாம சுத்திக்கிட்டு திரியிறார்.

எதுத்த வீட்டு ஏகாம்பரம், பக்கத்து வீட்டு பரமசிவம் எல்லாம் காடு, கண்ணி, தோட்டம், தொரவுன்னு காலங்காத்தால எந்திரிச்சி ஓடுறாங்க. இவுரு மாதிரியா ஒரு சினிமா பாக்கி உடாம பாக்குறாங்க?

வீட்டுல வெறகு தீரப் போவுது, தோட்டத்துக்கு போய் ரெண்டு கட்டைய வெட்டிகிட்டு வந்து போடுன்னு ரெண்டு நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்.

வெறகையும் காணாம் ஆளையும் காணாம். அப்பா எங்கடான்னு பயலக் கேட்டா அவரு சைக்கிள் எடுத்தக்கிட்டு போய்ட்டாரும்மா.

அம்மா கேட்டா பணத்தோட்டம் சினிமாவுக்கு போயிருக்கேன்னு சொல்ல சொன்னாருங்கறான்.

தோட்டத்துக்கு போய் பணம் சம்பாரிக்கிறத்துக்கு வழியக் காணாம், பணத்தோட்டம் சினிமா கேட்குதா?

வரட்டும் இன்னக்கி பேசிக்கிறேன். ஒரு நேரம் பட்டினி போட்டாத்தான் வீட்டோட அருமை தெரியும். காசு என்ன மரத்துலயா காய்க்குது!

1970களில்

அப்பப்பா, இந்த இழவெடுத்த ரேடியோவோட பெரிய ரோதனையா போச்சு. இந்த மனுஷன் எப்பப் பார்த்தாலும் ரேடியோவை கட்டிகிட்டு அழுவுறார்.

வீட்டுல ரேடியோ இருக்குன்னு தான் பேரு, என்னால நிம்மதியா ஒக்காந்து ஒரு புரோகிராம் கேக்க முடியிதா? காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்சா ராத்திரி ஒம்பது மணி வரை ஓய்வு ஒழிவில்லை.

ஆம்பளைங்க பாடு பரவாயில்லை. காலைல ஆறுக்கோ ஏழுக்கோ எழுந்திரிக்க வேண்டியது, ரேடியோவை கேட்டுகிட்டே காபி குடிச்சிகிட்டு பேப்பர் படிக்கவேண்டியது.

டிஃபன் சாப்பிட்டுட்டு ஒம்பது மணிக்கி ஆபீஸ் போயிட்டு சாயங்காலம் அஞ்சு மணிக்கு திரும்பி வந்தா, மறுபடியும் ரேடியோவை ஆன் பண்ணிகிட்டு ஒக்காந்திக்க வேண்டியது.

எனக்கு அப்படியா, மத்தியானம் சமையல் முடிச்சிட்டு அப்பாடான்னு கொஞ்ச நேரம் நிம்மதியா உக்காந்து ரேடியோ கேக்கலான்னா அப்பதான் அரியக்குடி கீர்த்தனை, லால்குடி வயலின், குன்னக்குடி மிருதங்கம், காரைக்குடி தவிலுன்னு சங்கீதக் கச்சேரியெல்லாம் வருசையா வரும்.

சரி, சிலோன் ரேடியோவில ஏதாவது சினிமா பாட்டு வருமான்னு திருவுனா, நம்ம அதிஷ்டம் ‘கர்ரு புர்ரு’ன்னு சத்தம்தான் வருது.

ஆனா என்னோட சந்தோஷம் அஞ்சு நிமிஷம் கூட நீடிக்கல. பழைய குருடி கதவ தொறடின்ன மாதிரி திரும்பவும் மக்கர் பண்ண ஆரம்பிச்சிடுச்சு.

அப்பவே என் தம்பி சொன்னான், அக்கா பிலிப்ஸ், மர்பி மாதிரி நல்ல பிராண்டா பாத்து வாங்குக்கான்னான். ஆனா இவருதான் நான் சொன்னதக் கேக்காம வெலை மலிவா இருக்குன்னு ஏதோ ஒரு லோக்கல் பிராண்ட் ரேடியோவை வாங்கிட்டு வரார்.

என்ன இருந்தாலும் வெளிநாட்டுல செஞ்ச ஐட்டம்னா அதுக்கு மவுசே வேற. இப்ப இந்த பாடாத ரேடியோவை கட்டிகிட்டு அழுவ வேண்டியிருக்கு.

அதுக்கு மாசா மாசம் ரிப்பேர் செலவு வேற. ஒரு நாள் இந்த ரேடியோ பெட்டிய தூக்கிப் போட்டு ஒடைக்கதான் போறேன்.

1980களில்

அந்த ஹிந்து பேப்பர்ல அப்படி என்னதான் எழுதியிருக்கோ, மனுஷன் விடிஞ்சி எழுந்திரிச்சா பல்லு கூட வெளக்காம ஒரு வரி உடாம படிக்கிறார்.

ரெண்டு மணி நேரம் இடியே விழுந்தாலும் மனுஷன் பேப்பர கீழ வெக்கமாட்டார். இந்த லட்சணத்தில அரை மணி நேரத்துக்கு ஒரு தடவ காப்பி வேற. இவர் பேப்பர் முடிச்சி அப்பதான் கீழ வப்பார்.

அதுக்குள்ள எடுத்த வீட்டுப் பையன் ஓடி வந்துடுவான், டேய் மாமா கிட்ட போய் எங்கப்பா பேப்பர் வாங்கியாரச் சொன்னாருன்னு.

ஏன் அவருந்தானே சம்பாரிக்கிறார், ஒரு பேப்பர் வாங்கினா என்னவாம்? எப்பவும் ஓசி தானா? இவரும் ஒன்னும் சொல்றதில்லை.

இவர் ஏமாளின்னு தெரிஞ்சி போச்சி, எல்லாம் நன்னா இவர் தலைல மொளகா அரைக்கறா.

மத்தவாளை எதுக்கு குத்தம் சொல்லணும்?

நம்ம ஆத்துக்காரர் சரியா இருந்தாதானே?

1990களில்

இந்த டீவீன்னு ஒன்னு வந்தாலும் வந்தது வீட்டுல நிம்மதியே போச்சு. இந்த மனுஷன் ஆபீஸ்ல இருந்து வந்ததும் வராததுமா டீவீ முன்னாடி ஒக்காந்திகிறார்.

என்னடா நம்ம பொண்டாட்டி காலைல இருந்து சாயந்தரம் வரை ஊட்டுக்குள்ள அடஞ்சி கெடக்குறாளே, எங்கயாவது கூட்டிகிட்டு போலாம்னு ஒரு நாளாவது சொல்றாரா?

அதான் இந்த டீவீ சனியன் வந்து தொலஞ்சதே. அது வேற அப்பப்ப கோவிச்சிக்கும். நாம எதாச்சும் ட்ராமாவுல சுவாரசியமா பாத்துக்கிட்டிருக்கப்ப தான் கரண்ட் கட் பண்ணுவான், இல்லேன்னா திடீர்னு ஸ்கிரீன்ல கோணல் மாணலா கோடு கோடா வரும்.

அதுவும் கிரிக்கெட் மேட்ச் நடக்குறப்போ இப்படி எதாச்சும் ஆச்சுன்னா இவர் வேற ரொம்ப டென்ஷன் ஆயிடுவார்.

சின்ன வயசுல இவருக்கு கிரிக்கெட்டுன்னா என்னன்னே தெரியாதாம், கிட்டி புள்ளுதான் ஊர்ல வெளையாடிகிட்டு இருந்தாராம்.

ஆனா இந்த டீவீ வந்ததுக்கப்புறம் என்னமோ கிரிக்கெட்டோடயே பொறந்து வளந்த மாதிரி நாள் முழுக்க ஒரு வேலையும் செய்யாம டீவீ முன்னாடியே உக்காந்துக்குவார்.

கிரிக்கெட்காரன் வாய் ஓயாம கமெண்ட்ரி சொல்லுறது போதாதுன்னு இவரு வேற ‘தொண தொண’ன்னு ஏதாவது கமென்ட் அடிச்சிகிட்டே இருப்பார். சும்மா உக்காந்தியும் பாக்க மாட்டார்.

ஒருநாள் அப்படித்தான், யாரோ கடைசி பந்துல சிக்சர் அடிச்சான்னு சேர்ல இருந்து எம்பிக் குதிச்சார், அப்பறம் கால் சுளுக்கிடுச்சின்னு நாலு நாள் நடக்க முடியல.

எவனோ மட்டையால பந்த ரெண்டு தட்டு தட்டி காசு சம்பாரிக்கிறான். அதனால இவருக்கு என்ன வந்துது.

யாரோ கவாஸ்கராம், ‘சட்டுபுட்டு’ன்னு ரன் எடுக்காம மன்னார் சாமியாட்டம் ‘மசமச’ன்னு வெளையாடுறாருன்னு பொலம்புவார்.

பந்து போடுறவன் பேரு ஏதோ கபில்தேவாம், இம்ரான் கானுக்கு ஃபுல் டாஸ் போடு, மியாண்டாடுக்கு ஷார்ட் பிட்ச் போடுன்னு என்னவோ இவரு அவனுக்கு கோச் பண்ணுற மாதிரி ஏதாவது அட்வைஸ் குடுத்துகிட்டே இருப்பார்.

ஊருல மொத மொத டீவீ வாங்குனது வேற தப்பா போச்சி. சாயந்தரம் ஆனா எதுத்த ஊட்டுக்காரன் பக்கத்து ஊட்டுக்காரன் தெரிஞ்சவன் தெரியாதவன்னு எல்லாம் வந்து ஒக்காந்திகிறாங்க.

ஊட்ல நடக்க முடியல. நானு ஒரு சீரியல் பாக்கலாம்னா நிம்மதியா ஒக்காந்தி பாக்க முடியல.

இருக்கட்டும்! நாளக்கி இந்த மனுஷன் ஆபீஸ் போனதும் ரிமோட் கண்ட்ரோலை எடுத்து ஒளிய வச்சிட்டா, அப்ப என்ன பன்றார்னு பாக்குறேன்.

2000களில்

ஒருநாள் ஆபீஸ்லேருந்து வந்ததும் வராதாதுமா “காமாச்சீ, அம்பதாயிரம் சீட்டு போட்டு போட்டு கம்ப்யூட்டர் ஒன்னு வாங்கப் போறேன்”னார்.

சரி கம்ப்யூட்டரைப் பத்தி எனக்கென்ன தெரியும்?

ஏதோ இந்த மனுஷன் கம்ப்யூட்டர் கத்துகிட்டு, இன்னும் பெருசா சம்பாரிக்கிற மாதிரி வேற வேல எதுவும் பாக்கப் போறாரோன்னு நெனச்சேன்.

ஆனா அப்படி எதுவும் இல்ல. ஏதோ இன்டர்நெட்டுன்னு புதுசா வந்திருக்காம். ஒலகத்துல நடக்குற அல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்கலாமாம்.

ஆனா இந்த மனுஷன் எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்னாடியே ஒக்காந்திக்கிரார். முன்னாடியெல்லாம் ஒரு நியூஸ் பேப்பர்தான் படிச்சிக்கிட்டிருந்தார். இப்ப ஊர்ல இருக்குற அத்தன பேப்பரையும் படிக்கிறார்.

கம்ப்யூட்டர் வாங்குனதுக்கு கடன் கட்றது மட்டுமில்லாம, இந்த இன்டர்நெட்டுக்கு வேற மாசாமாசம் பணம் கட்டித் தொலைய வேண்டியிருக்குது.

முன்னாடியாவது படிச்ச பேப்பர, மாசக் கடைசியில பழைய பேப்பர் வாங்குறவன் கிட்ட போட்டா, பணம் கொஞ்சம் வந்துது. இப்போ அதுக்கும் வழியில்ல.

கம்ப்யூட்டர் பேப்பரை காசுக்கு யாரு வாங்குவான். கம்ப்யூட்டரையே கொண்டு போய் காயலான் கடைல போட்டா கூட ஒரு காசு தரமாட்டான். ம்ஹும், இந்த மனுஷனுக்கு வர வர கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.

2010களில்

இந்த செல் போன் வந்தாலும் வந்தது வீட்ல எப்பவும் சண்டதான்; ஏட்டிக்குப் போட்டிதான். போன மாசம் இப்பிடித்தான், ஏங்க கரண்டு பில் கட்ட இன்னிக்கிதான் கடசி நாள் மறக்காம கட்டிடுங்கன்னு சொன்னேன்.

அதெல்லாம் எனக்கு தெரியும்டி, நான் போன்லயே கட்டிப்புடுறேன்னார். ஆனா நாலு நாள் கழிச்சி கரண்டு ஆபீஸ்ல இருந்து லெட்டர் வருது. இன்னும் ஒரு வாரத்துல பணம் கட்டாட்டி கரண்டு கட் பண்ணிருவோம்னு.

ஏன் கரண்ட் பில் கட்டலேன்னு கேட்டா, இல்லடி போன்ல பிஸியா இருந்தேன் கட்ட மறந்துட்டேங்குறார். அப்படி என்ன பிஸியோ.

இந்த யூட்யூப் வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம்ன்னு வந்தாலும் வந்தது; ஊர்ல வேலை வெட்டி செய்யாம சும்மா குந்தியிருக்கறவங்க நம்பர் ஜாஸ்தியாயிடுச்சி.

நான் ஏதாவது சொல்லப்போனா நீயுந்தானடி சேலை, நகை, சமையல், அது, இதுன்னு யூடியூப்ல பாக்குற, மணிக்கணக்குல உங்க அக்கா தங்கச்சி ப்ரெண்ட்ஸ்ன்னு எல்லார் கூடயும் போன்ல பேசறன்னு என்கிட்ட சண்டக்கி வருவார்.

சரி இவுருதான் இப்பிடின்னா வூட்டுல ரெண்டு பிள்ளங்க இருக்கே அதுங்க அப்பாவுக்கு மேல. படிக்கிறாங்களோ இல்லையோ கையும் கண்ணும் எப்ப பாத்தாலும் போன்லதான் இருக்குது.

பெரியவ என்னடான்னா ஃபோனயே பாத்துகிட்டு பெட்ல படுத்துகிட்டு அம்மா டிபன் இங்கயே கொண்டுவந்து கொடுத்துடிறியா பிளீஸ்னு கெஞ்சுறா.

போன வாரம் சரஸ்வதி பூஜையில புஸ்தகத்தை கொண்டாந்து வைடின்னு சொன்னேன், அவ என்னடான்னா ஃபோன கொண்டாந்து வக்கறா.

என்னடின்னு கேட்டா இப்பல்லாம் போன்லதாம்மா பாடம்லாம் சொல்லித்தராங்கன்னு பதில் சொல்லுறா.

சரி இவதான் இப்படி, டேய் நீயாவது போனை வச்சுட்டு சாப்பிட வாடான்னு கூப்பிட்டா அவன் அதுக்கு மேல. அம்மா, ப்ரெண்ட்ஸ் கூட வீடியோ கேம் வெளையாண்டுகிட்டு இருக்கேன் கொஞ்ச நேரம் என்ன டிஸ்டர்ப் பண்ணாம இருக்கியான்னு சோபாவுல சாஞ்சி படுத்துகிட்டு பதில் சொல்லுறான்.

வர வர இது வீடா ஆபீசான்னு தெரியாம போச்சு. எப்ப பாத்தாலும் ஏதோ பெருசா வேலை செய்யிற மாதிரி ஆளாளுக்கு ஃபோன கைல வச்சுகிட்டு ஒக்காந்திகிறாங்க. டைனிங் டேபிள் வாங்குனது வேஸ்ட். மாசா மாசம் நாலு ஃபோன் பில் வேற.

ஒருநாள் என் ப்ரெண்ட் கிரிஜாவுக்கு ஃபோன் பண்ணி எங்க வீட்ல இப்படி இருக்காங்கடின்னு சொன்னேன். ஆனா அவுங்க வீட்ல அதுக்கு மேலயாம்.

நடு ராத்திரிலகூட போன்ல ஏதாவது பண்ணிகிட்டே இருக்கார். கேட்டா நீ வேண்ணா ஹால்ல போய் படுத்துக்கோங்கறார்.

நான் மேல ஏதாச்சும் சொல்லப் போனா பில் கேட்ஸ், மார்க் ஜக்கர்பர்க் மாதிரி பெரிய பெரிய ஆளுங்கள்ளாம் போனும் கையுமாகத்தான் இருக்காங்கன்னு, என்னவோ இவரு அவங்க பக்கத்துல இருந்து பாத்த மாதிரி ஆர்க்யூ வேற பண்ணுறார்.

பெருசா சம்பாரிக்காட்டியும் பேச்சுல ஒன்னும் கொறச்சலில்லன்னு அழுவாத கொறையா பொலம்பித் தள்ளிட்டா.

சரி சரி இதுக்கு நம்ப வீடே பரவாயில்லன்னு இப்பல்லாம் நான் வீட்ல போனைப் பத்தி பேச்சு எடுக்கறதையே விட்டுட்டேன்.

கலி முத்திப் போச்சின்னு பெரியவங்க சொல்றது கரெட்டாத்தான் இருக்குது. இப்ப இருக்கறது போதாதுன்னு இன்னும் ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் அது இதுன்னு என்னென்னவோ எழவெல்லாம் போன்ல வரப்போவுதாம்.

இப்பயாவது தெனமும் ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் ஒரு தடவையாவது பாத்துக்கிறோம். இனிமே அது கூட இருக்காது போலிருக்கு.

2020களில்

என் ஹஸ்பண்டுக்கு தான்தான் இந்த உலகத்தையே தாங்கறதா நெனப்பு. பெருமாள் வராஹ அவதாரம் எடுத்து ஒரு காலத்துல பூமியை மூக்கு மேலே தாங்குனாராம்.

இப்பல்லாம் டிவி, இன்டர்நெட், நெட்ஃப்ளிக்ஸ், நியூஸ் பேப்பர்ன்னு எதைப் படிச்சாலும் பாத்தாலும் இதே நியூஸ்தான்.

அமெரிக்காவில் கடும் பனிப் புயலில் நூறு பேர் மரணம், ஆப்பிரிக்காவில் வறட்சியில் ஆயிரக் கணக்கானோர் சாவு. இந்தியாவில் குடிநீருக்காக மூணு கிலோ மீட்டர் நீள கியூ, பிலிப்பைன் நாட்டில் வரலாறு காணாத வெள்ளத்தில் ஆயிரம் பேர் பலி,

ஆஸ்திரேலியாவில் வானிலை மாற்றத்தால் பவளப் பாறைகள் அழிவு, குட்டி பசிபிக் தீவு நாடான துவளு கடலுக்குள் மூழ்கும் அபாயம், இப்படிப் பட்ட நியூஸ் தான் நாள் பூரா வருது.

ஆனா அதுக்கு நம்ப என்ன செய்ய முடியும்? காலம் கெட்டுப் போச்சு.

மனுஷாள் பாவம் செய்யறது ஜாஸ்தி ஆயிடுச்சு. பகவான் புராணங்கள்லயே சொல்லியிருக்கார் இந்த உலகத்துல புண்ணியம் கொறஞ்சி பாவம் ஜாஸ்தியாச்சுன்னா நான் பிரளயத்த உண்டாக்கி பிற்பாடு நல்லவங்கள காப்பாத்துறத்துக்கு வேண்டி கல்கி அவதாரம் எடுத்து வருவேன்னு.

இந்த உலகத்துல நடக்குற நல்லது கெட்டது எல்லாம் நாம செஞ்ச கர்ம பலன் தான். அதனாலதான் இப்போ வானிலை, பருவ காலம் எல்லாம் தல கீழ மாறிகிட்டிருக்கு. மார்கழி மாசம் வெய்யில் கொளுத்தறது. தூத்துக்குடியில மழை கொட்டறது.

ஆனா புராணங்களையெல்லாம் இப்ப யார் நம்பறாங்க. சயின்ஸ்தான் எல்லாம், இயற்கையில நடப்பதற்கும் கடவுளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை, வேதம், புராணம், சாஸ்திரம், கடவுள் எல்லாம் கற்பனை, வெறும் கட்டுக்கதைன்னு வாதம் பண்ணறாங்க.

விஞ்ஞானத்துனால அது இதுன்னு தினம் தினம் புதுசு புதுசா ஏதோ ஒன்னு கண்டுபிடிச்சிக்கிட்டு தானே இருக்காங்க? மக்கள் பிரச்னை கொறஞ்சுச்சா? விலைவாசி இறங்குதா? கூடிக்கிட்டு தானே போகுது. அப்பறம் விஞ்ஞானத்தால என்ன பிரயோஜனம்?

எலான் மஸ்க், ஜெஃப் பேஜோஸ், ரிச்சர்ட் பிரான்சன் எல்லாம் புதுசா ராக்கெட் விடப் போறாங்களாம். கோடிக் கணக்குல பணம் குடுத்தா சந்திரன், செவ்வாய் கிரகத்துக்குல்லாம் கூட்டிகிட்டு போவாங்களாம்.

என்ன பிரயோஜனம்?

கம்மங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே, தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளேன்னு ரஜினி பாடின மாதிரி யார் எங்க போனாலும் கடைசியில எல்லாரும் போகப் போறதென்னவோ சுடுகாடு தானே. இதுக்கெதுக்கு கோடிக்கணக்குல அவுங்குளுக்கு பணத்த கொண்டு போய் கொட்டனும்?

சரி, சயின்ஸ் அது இதுன்னு யாராவது பேசுறவங்க பேசிட்டுப் போகட்டும். இவருக்கு என்ன ஆச்சி?

காத்துல கரியமில வாயு கூடிப் போச்சி, பூமில வெப்பம் அதிகரிச்சிக்கிட்டிருக்கு, பனிப்பாறை யெல்லாம் உருக ஆரம்பிச்சிடுச்சி, கடல் மட்டம் ஏறிடும், ஊரெல்லாம் கடல்ல முழுகிடும், இயற்கை அழிவு அது இதுன்னு எப்போ பாத்தாலும் சுற்றுச் சூழல் புராணம் தான் வாசிக்கிறார்.

உலகத்துல சூடு கொறையிதோ என்னவோ எங்க வீட்டுல தினம் தினம் நடக்குற வாக்கு வாதத்துல நாளுக்கு நாள் சூடு அதிகமாயிக்கிட்டிருக்கு.

இந்த சுற்றுச் சூழல் பேச்செல்லாம் விட்டுட்டு நல்லா சம்பாதிக்கிற வழியைப் பாருங்கன்னு சொன்னா என் பேச்சை எங்க கேக்குறாரு. கல்யாணம் ஆனதுலேருந்து இப்படித்தான்.

முப்பது வருஷம் முந்தியே தங்கம் வெல ஏறிக்கிட்டே போகுது அதுல இன்வெஸ்ட் பண்ணலாம்னு சொன்னேன், கேக்காம புதுசா ஏதோ டாட் காம் கம்பெனிஸ்ல இன்வெஸ்ட் பண்ணினார், போட்ட பணமெல்லாம் போச்சு.

இன்னைக்கும் ஒன்னும் கெட்டுப் போகல, தங்கம் வெல இன்னும் ஏறிக்கிட்டே தானே போகுது இப்பவாவது அதுல இன்வெஸ்ட் பண்ணலாம்னு சொல்றேன்.

கல்யாணத்துக்கு முன்னால காலேஜ் படிச்சப்போ இப்படித்தான் சோசலிசம், பொதுவுடைமை, நாத்திகம், இந்தி எதிர்ப்புன்னு என்னென்னவோ போராட்டத்துலல்லாம் சுத்திக்கிட்டு இருந்தாராம். இவர் திருந்த மாட்டார். என்னவோ, செய்யறத செய்ங்க எப்படியோ போங்கன்னு விட்டுட்டேன்.

அந்தக் காலத்தில காவி உடைய கட்டிகிட்டு கம்பையும் கமண்டலத்தையும் எடுத்துகிட்டு சாமியாராப் போறேன்னு காட்டுக்குப் போனாங்க.

இந்தக் காலத்து ஆம்பளைங்க எல்லாம் கம்ப்யூட்டரை மடியில கட்டிக்கிட்டு, மௌஸையும் ஃபோனையும் கையில வச்சுகிட்டு வீட்டிலேயே சாமியார் ஆயிட்டாங்க. இதுதான் வித்தியாசம்.

இப்படியே போயிகிட்டிருந்தா இந்த உலகம் என்ன ஆகப் போகுதோ, அந்த பகவான் மறுபடியும் எப்ப அவதாரம் எடுத்து வந்து இந்த உலகத்த காப்பாத்தப் போறாரோ?

இந்தப் பூசைகளும் அர்ச்சனைகளும் முடிவற்றவை. காலத்தாலும் அழிக்க முடியாதவை.

வீட்டுக்கு வீடு காலம் காலமாய் நடைபெறும் தொடர்கதை இது.

என்ற கண்ணதாசன் பாட்டு மாதிரி இந்தக் கதை என்றென்றும் தொடரும், கணவனென்றும் மனைவியென்றும் ஒரு உறவு உலகில் உள்ள வரை.

நக்கசேலம் சிட்னி ஜெயச்சந்திரன்