மீசை வச்ச ஆம்பளைங்க ஆசை வைக்கும் பொண்ணுதான்
தூண்டி போட்டு நான் புடிச்ச மீனைப் போல கண்ணுதான்
பேசி வச்ச பேச்செல்லாம் தித்திக்கிற தேனுதான்
பேசாம இருந்து விட்டா பொசுங்கிப் போகும் மனசுதான்
வெள்ளரிக்கா பிஞ்சப் போல விடலைப் பொண்ணு அழகுதான்
வெடிச்சி நிக்கிற சோளக் கதிரா வெளஞ்சி நிக்குற பருவம்தான்
அள்ளிக் கொண்டு போக எனக்கு எப்பவுமே ஆசைதான்
அவஅப்பங்காரன் பாத்துவிட்டா நடக்கும் விவகாரம்தான்
புள்ளிவச்சு கோலம் போட பொண்ணுவரப் பாத்துதான்
பொழுதுங்கூட மெல்ல மெல்ல விடியும் உண்மைதான்
கன்னி அவள காலையில கண்டுக்கிட்ட பிறகுதான்
கஞ்சிக்கலயம் தூக்கிகிட்டு காடு போகத் தோணும்
மஞ்சக்கிழங்க பூசிஅவ மணக்க நிக்கப் பார்த்துதான்
மாலைநேர வெயிலும்கூட மஞ்சளாகிப் போச்சுதாம்
பிஞ்சுபோன நிலவுமங்க அவமுகத்தை தேடித்தான்
பிரிஞ்சு கிடக்கும் கூரை வழி நுழைஞ்சிடத்தான் பாக்குமாம்
மஞ்சக்கயிறும் தாலியெடுத்து மாமன் நானும் தேடித்தான்
மங்கையவள் வீட்டுக்குள்ள நுழைஞ்சி விட்ட பிறகு தான்
பஞ்சப் போல மனசும் லேசா பறந்து போக லாச்சுதாம்
பறக்கும் அதை கட்டிப் போட அவதுணை தான் வேணுமாம்.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)