அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்

வருவாயே லெட்சுமியே வருவாயே

உன்னை வாயாறப் பாடுகிறோம் வரம் தருவாயே

 

எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்

கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயி லானவளே!

வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லட்சுமியே!

வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்

 

சிந்தனைக்குச் செவிசாய்த்து சீக்கிரமென் னில்லம்வந்து

உந்தனருள் தந்திருந்தால் உலகமெனைப் பாராட்டும்!

வந்தமர்ந்து உறவாடி வரங்கள் பல தருவதற்கே

சந்தான லட்சுமியே தான் வருவாய் இதுசமயம்

 

யானையிரு புறமும்நிற்கும் ஆரணங்கே உனைத் தொழுதால்

காணுமொரு போகமெலாம் காசியனியில் கிடைக்குமென்பார்!

தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்தகஜ லட்சுமியே!

வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்

 

அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம்

உன்றனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ!

இன்றோடு துயர்விலக இனிய தன லட்சுமியே

மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்

 

எங்கள்பசி தீர்ப்பதற்கு இனியவயல் அத்தனையும்

தங்கநிறக் கதிராகித் தழைத்துச் சிரிப்பவளே!

பங்குபெறும் வாழ்க்கையினைப் பார்தான்ய லட்சுமியே

மங்களமாய் என்னில்லம் வருவாய் இதுசமயம்

 

கற்றுநான் புகழடைந்து காசினியில் எந்நாளும்

வெற்றியின்மேல் வெற்றிபெற வேணுமென்று கேட்கின்றேன்

பற்றுவைத்தேன் உன்னிடத்தில் பார்விஜ லட்சுமியே

வற்றாத அருட்கடலே வருவாய் இதுசமயம்

 

நெஞ்சிற் கவலையெலாம் நிழல்போல் தொடர்ந்ததனால்

தஞ்சமென உனையடைந்தேன் தாமரைமேல் நிற்பவளே

அஞ்சாது வரம்கொடுக்கும் அழகுமகா லட்சுமியே!

வஞ்சமிலா தெனக்கருள வருவாய் இதுசமயம்

 

ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும்

சூழுகிற பகையொழிக்கும் தூயவளும் நீதானே!

வாழும் வழிகாட்டிடவே வாவீர லட்சுமியே!

மாலையிட்டுப் போற்றுகின்றேன் வருவாய் இதுசமயம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.