அவன்
மிகவும் இளகிய மனம் கொண்டவன்
பிறரின்
கண்வழியும் நீர்ப் பார்த்தால்
அவன்
நதியாகிவிடுவான்
அவனிடத்தில்
துக்கச் செய்திகளைச் சொல்லி விடாதீர்
துயர நிகழ்வுகளை
எக்காரணம் கொண்டும்
கசியக் கூட விடாதீர்கள்
அக்கணமே நெகிழ்ந்து புரண்டு
பேதலிப்பான்
மரணச் செய்தியைக் காலம் தாழ்த்தியும்
மகிழ்ந்து கொள்ளும் செய்தியையும்
உடனடியாக
நேருக்கு நேர் சொல்லிவிட்டால்
நிகழும்
எதற்கும் பொறுப்பேற்க நேரிடம்
குழந்தையின் அழுகை
முதியோர்களின் முடியாமை
எதுவும் சொல்லிவிடாதீர்
வறுமையாளர் பசியும்
வசதிக்கொண்டோர்களின்
முரண்களையும்
பகிர்ந்து கொண்டால்
இரண்டையும்
ஒன்றாகக் கருதி
கதறிக்கொள்ளும் மனோபாவம்
கொண்டவன்
அவன்
பிறர் நிழல் வளைந்தாலும்
நொறுங்கி
உடைந்து விடுபவனாகவும்
இவன்
இரக்கக் குணம் கொண்ட இவன்
பிறர்த் துயரங்களைப் போக்க முயலாமல்
இரக்க சுபாவம் மட்டும் கொண்டுடிருப்பதால் யாது பயன் கொல்
தன்
வலிகளை நிராகரிக்கத் தெரியாமல்
பிறர் துயர்களைப் போக்க முடியாதவனால்
ஆகப் போவது யாதுளதோ பராபரமே…
கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432