ஆங்கிலம் உலக மொழியா?

ஆங்கிலம் உலக மொழியா? என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

‘ஆங்கிலம் உலகமொழி யாதலால், அது தமிழகத்திற்கு அன்னியமொழி ஆகாது’ என்கின்றனர். இது கலப்பற்ற பொய்.

இந்தப் பொய்யை மெய்போல முடிவு கட்டிக்கொண்டு, இந்திய அரசியல் சட்டத்தில் காணப்படும் தேசிய மொழிகளின் பட்டியலிலே, ஆங்கிலத்தையும் சேர்த்துவிட வேண்டுமென்று வாதாடுகின்றனர், ஆங்கிலத் தமிழர்கள்!

ஆங்கிலம், இந்திய நாட்டிலுள்ள எந்த ஒரு சாதி சமய, இன மக்களுக்கும் தாய்மொழியாக இல்லை. ஏன்?  ஆங்கிலோ -இந்தியருக்கு ஆங்கிலம் வீட்டு மொழியாக இருப்பதும் சந்தர்ப்ப நிர்ப்பந்தத்தால் ஏற்பட்டதே.

நாளடைவில், ஆங்கிலோ-இந்தியர்கள் எந்த மாநிலத்தில் வாழ்கிறார்களோ, அந்த மாநிலத்து மொழியையே வீட்டு மொழியாகவும் நாட்டு மொழியாகவும் அவர்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டே தீரும்.

இதனை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அவர்கள் வாழ்வாங்கு வாழ இது ஒன்றே வழி.

எனவே, ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள  ஒருநாட்டாரின் தாய்மொழியை, இந்திய நாட்டில் வாழும் எவருக்குமே தாய்மொழி அல்லாத அந்நிய மொழியைத் தேசிய மொழிக்குரிய அந்தஸ்தோடு இந்திய மக்கள் எப்படி ஏற்க முடியும்?

299 கோடியில் 26 கோடிப்பேர்

ஒரு மொழி உலக மொழியாக ஏற்கப்பட வேண்டுமானால், அதற்குச் சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்தத் தகுதிகள் ஆங்கில மொழிக்கு இல்லை.

முதலில், உலக மக்களில் சரிபாதிக்கு மேற்பட்டவர்கள் அல்லது கிட்டத்தட்ட சரிபாதியை எட்டக்கூடிய எண்ணிக்கையினர் அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பின், அது உலக மொழியாகலாம்.

ஆங்கிலத்திற்கு அந்தத் தகுதி இல்லை. சுமார் 290 கோடி மக்களைக் கொண்ட உலகத்தில் ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் 26 கோடிப் பேர்தான்.

அதாவது, உலகில் 12 பேருக்கு ஒருவர்தான், ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கின்றனர். ஆங்கில மொழிக்குரிய நாடுகளும், 1951-ஆம் ஆண்டு குடி மதிப்புக் கணக்குப்படி அந்த நாடுகளின் மக்கள் தொகையும் வருமாறு:

இங்கிலாந்து 5,14,55,000, ஆஸ்திரேலியா 1,36,82,028, நியூசிலாந்து 22,32,591, கனடா 1,40,09,429, அமெரிக்கக் குடியரசு 17,40,64,000.

இந்த ஐந்து நாடுகளைத் தவிர வேறு எந்த ஒரு நாடும் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கவில்லை, கனடாவிலும் மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கினர் பிரெஞ்சு மொழி பேசுகின்றனர்.

உலக முதன்மொழி சீனம், ஆங்கிலமல்ல!

தனியொரு நாட்டின் தாய்மொழியாக விளங்கும் சீன மொழி பேசுவோரின் எண்ணிக்கை 55 கோடி.

சீன நாட்டில் மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள திபேத், மலேயா, பர்மா, இந்தோ-சீனம் ஆகிய நாடுகளிலும் சீனமொழி பேசுவோர் பரவலாகவும், கணிசமான எண்ணிக்கையிலும் வாழ்கின்றனர்.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்த்தால் உலக மொழிகளில் முதன் மொழி என்று சொல்வதற்கான தகுதி ஆங்கிலத்தைவிட சீன மொழிக்கே அதிகமாக இருக்கிறது.

உலக மக்கள் தொகையான 290 கோடியில், சீனம் உள்ளிட்ட ஆங்கிலம் அல்லாத மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டோர் 264 கோடியாவர். இந்தக் கணக்கைப் பார்த்த பிறகும் ஆங்கிலத்தை உலக மொழி என்று சொல்வது அறிவுடைமையாகுமா?.

ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொள்ளாத மக்களிலும், கோடிக் கணக்கானவர்கள் அம்மொழியில் நன்கு பயிற்சி பெற்றுள்ளனர் அவர்கள் வழி வந்தோறும் நன்கு பயிற்சி பெற்று வருகின்றனர் என்பதை நாம் மறந்துவிடவில்லை.

அவர்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால் கூட, சீன மொழிக்குரிய முதலிடத்தைக் கைப்பற்றும் திறன் ஆங்கில மொழிக்கு இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

மழை விட்டும்

உலக நாடுகள் பலவற்றில் குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், பர்மா இலங்கை போன்ற நாடுகளில் ஆங்கில மொழி படிக்கக் காரணம், அந்த நாடுகளெல்லாம் கடந்த காலத்தில் ஆங்கிலப் பேரரசுக்கு அடிமைப்பட்டிருந்ததுதான்.

‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்ற பழமொழிப்படி, ஆங்கில சாதியாரிடமிருந்து அந்த நாடுகள் விடுதலை பெற்ற பின்னரும், ஆங்கில மொழி ஆதிக்கத்தினின்றும் இன்னமும் விடுதலை பெறவில்லை.

விரைவில் விடுதலை பெறப்போவது திண்ணம், ஆம். இந்தியா போன்ற நாடுகளில் ஆங்கில மொழிக்கு இன்றுள்ள செல்வாக்கு நிலையானதல்ல, தேய்ந்து வரும் திங்களைப் போன்றது.

ஆங்கிலசாம்ராஜ்யம், அதிகாரத்தின் துணைகொண்டு மாட்டின் விருப்பத்தையறியாமலே அதன் கழுத்தில் நுகத்தடியைச் சுமத்தும் எசமானைப்போல், தான்அடிமை கொண்ட நாடுகளில் வாழும் மக்களின் விருப்பத்தை அறியாமலே அவர்கள்மீது ஆங்கில மொழியைத் திணித்தது.

அந்த நாடுகளின் சொந்த மொழிகளை அழிக்க முயன்றது. அதனாற்றான், ஆங்கில சாம்ராஜ்ம் வெளியேறிய பின்னர் ஆங்கிலமொழியின் ஆதிக்கத்தையும் வெளியேற்ற வேண்டும் என்ற கிளர்ச்சி விடுதலை பெற்ற நாடுகள் அனைத்திலுமே தோன்றியிருக்கிறது.

அதிகாரத்தின் துணை கொண்டு பெற்ற ஆதிக்கம், அந்த அதிகாரம் மறைந்ததும் அழிவது இயற்கைதானே!

நிலையற்ற வாழ்வு

பொதுவாக, ஆங்கிலமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஐந்து நாடுகளுக்கு வெளியே உள்ள பிறமொழி நாடுகளில் ஆங்கில மொழிக்குத் தற்போதுள்ள அந்தஸ்து நிலையானதல்ல.

ஆங்கில சாம்ராஜ்யம் சுருங்கச் சுருங்க உலகில் ஆங்கில மொழிக்குள்ள ஆதிக்க அந்தஸ்தும் சுருங்கிச் சுருங்கி இறுதியில் மறைந்து போவது இயற்கை.

இப்படி தேய்ந்து கொண்டு வரும் சாம்ராஜ்ய அந்தஸ்தை நினைவில் கொண்டு ஆங்கிலத்தை உலக மொழியென்று சொல்லுவது பிரத்யட்ச ஞானமற்ற பேச்சாகும்.

பரங்கி மொழிப் பக்தர்கள் ஆங்கிலம் அகில உலக மொழி என்று கூறுவதனை உண்மையிலேயே அகில உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறதா? இல்லை, இல்லை, இல்லை என்று மும்முறையும் கூறுவோம்.

ஆங்கிலம் உலக மொழியானால், உலகில் உள்ள நாடுகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள அம்மொழி ஒன்றுமட்டுமே பயன்படுவதாக இருக்க வேண்டும்.

ஆனால், நடைமுறை அனுபவம் இதற்கு மாறாக இருக்கிறது. குறிப்பாகச் சீனா, தன் சொந்த மொழியில் தான் உலக நாடுகளோடு தொடர்பு கொள்கிறது. ஒவ்வொரு நாட்டின் நிலையும் இது போன்றதே!

கடந்த காலத்தில் ஆங்கிலச் சாதியாருக்கு அடிமைப்பட்டு, இன்றும் ஆங்கிலமொழிக்கு அடிமைப்பட்டுள்ள இந்தியாவின் போக்கு மட்டும் இந்த உலக நியதிக்கு விலக்காக இருக்கலாம். அதுவும் ஒரு இடைக்காலத்திற்குத்தான்.

அயல்நாடுகளைப் பார்

இந்தியாவில், மத்தியிலும் மாநிலங்களிலும் இன்று ஆங்கிலம் ஒன்றே ஆட்சி மொழியாக இருந்து வருகின்றது. ஏன்? அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் இந்தியாவில் ஆங்கிலமே ஆதிக்கஞ் செலுத்தி வருகின்றது.

அப்படியிருந்தும் இந்த நாட்டிற்கு வரும் சீனப் பிரதமரோ, சோவியத் பிரதமரோ, அல்லது ஆங்கில மொழிக்குரியதல்லாத வேறு எந்த நாட்டின் அதிபரோ நம்மிடையில் ஆங்கிலத்தில் பேசுவதில்லை.

நாம் அவர்களுக்குத் தரும் வரவேற்பு உபசாரத்திற்குப் பதிலளிக்கையில் தத்தம் தாய்மொழியில்தான் பேசுகின்றனர்.

அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்ல ஒரு மொழிபெயர்ப்பாளரையும் தங்களுடன் கூட்டி வருகின்றனர்.

ஆங்கிலம் தெரியாததால்ல, அது தங்களுக்கு அந்நியமொழி என்பதால், சான்றாக, ஒரு சம்பவத்தை இங்கு கூறுகிறோம்.

எகிப்து அதிபர் திரு.நாசர் சென்னைக்கு வந்த போது, நகரிலுள்ள குழந்தைகள் தியேட்டரில் தமிழகக் கலைஞர்கள் சார்பில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

நாசருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தும், அவர் தம் தாய்மொழியிலேயே வரவேற்புக்குப் பதிலளித்தார். அவரோடு வந்திருந்த மொழிபெயர்ப்பாளர், அவருடைய பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஐ.நா.மன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும் – அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பினும் தங்கள் தாய்மொழியில்தான் அங்கு பேசுகின்றனர்.

இதெல்லாம், ‘ஆங்கிலம் உலகப் பொது மொழி’ என்ற கூற்றைச் சுதந்திர உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டவில்லையா?

ஐ.நா மன்றத்தில்

ஐ.நா. மன்றத்தின் நிர்வாகத்தையே எடுத்துக் கொள்வோம். ஆங்கிலம் ‘உலகப் பொதுமொழி’ என்றால், உலக நாடுகளின் பொதுச் சபையான ஐ.நா.மன்றத்தில் ஆங்கிலம் ஒன்று மட்டுமே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருக்க வேண்டுமல்லவா?.

இப்போது அப்படியில்லை! ஏன் இல்லை?. என்ற கேள்விக்கு நம் நாட்டிலுள்ள பரங்கிமொழிப் பக்தர்கள் பதில் சொல்ல வேண்டும்.

ஐ.நா. மன்றத்தின் அமைப்பு விதிப்படி ஆங்கிலம் பிரெஞ்சு, ருஷிய, சீன, ஸ்பானிஷ் ஆகிய ஐந்தும் அதிகார பூர்வமான மொழிகளாக சம அந்தஸ்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

ஐ.நா.பொதுச் சபையில், யாரும் எந்த மொழியிலும் பேசலாம். ஆங்கிலத்தின்தான் பேச வேண்டுமென்ற நியதியோ நிர்பந்தமோ இல்லை.

அத்துடன், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கீகரிக்கப்படாத மொழிகளில் பேசினால், ஆங்கிலம்-பிரெஞ்சு போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஐந்து மொழிகளில் அந்தப் பேச்சுக்கள் மொழி பெயர்த்துக் கொடுக்கப்படுகின்றன.

இது “ஆங்கிலம் ஒன்றே உலகப் பொதுமொழி” என்ற கூற்றில், உள்ள பொய்யைப் புலப்படுத்திவிடவில்iலா?

ஆங்கிலம் உலக மொழியா

சீனாவிலுள்ள விஞ்ஞானியோ, ஜப்பானிலுள்ள தொழில் நுட்ப நிபுணரோ, தமக்குத் தாய்மொழியாக இல்லாத ஆங்கிலதத்தைப் பயின்றிருக்கலாம்.

அந்த நாடுகளில் விஞ்ஞான-தொழில் நுட்பத் துறைகளில் பயிற்சி பெறும் தொழிற்கல்லூரிகளில் ஆங்கிலமும் விருப்பப் பாடமாகவோ, கட்டாயப் பாடமாகவோ வைக்கப்பட்டிருக்கலாம்.

அதனாலேயே, ‘ஆங்கிலம் உலக பொதுமொழி’ என்று சொல்லிவிட முடியுமா?. மிகப் புராதனமான இந்து சமயத்தின் சாத்திர நூல்களைத் தன்னகத்தே கொண்ட சமஸ்கிருத மொழிகூட ருஷ்யா – ஜெர்மனி போன்ற நாடுகளில் பயிற்றுவிக்கப்படுகின்றது.

அதுபோலவே, பிரெஞ்சு-ஜெர்மன் மொழிகளும் அம்மொழி வழங்காத நாடுகளின் பல்கலைக் கழகங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

அதுபோலத் தான் உலக மேதைகளில் சிலரோ, பலரோ ஆங்கிலம் பயில்கின்றனர். அந்த நிலையில் இந்த நாட்டிலும் ஆங்கில மொழி பயிற்றுவிக்கப்படுவதை யாரும் எதிர்க்கவில்லையே!

ஆகவே, ஆங்கிலம் உலக மொழியா என்ற கேள்விக்குப் பதில் ஆங்கிலம் உலகப் பொது மொழியென்று கூறப்படுவது சுத்தப் பொய் என்பதே ஆகும்.

அநீதி! அநீதி!! அநீதி!!!

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட 26 கோடி மக்கள் வாழுகின்ற ஐந்து பெரிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.மன்றத்தின் நிர்வாகம் கூட ஆங்கில மொழி ஒன்றினால் மட்டுமே நடத்தப்படவில்லையென்றால், ஆங்கில மொழிக்குரிய ஒரு துண்டு நிலத்தைக்கூட அங்க நாடாகவோ, அடிமைக் காலனியாகவோ கொண்டிராத இந்திய யூனியனின் நிர்வாகம், ஆங்கில மொழி ஒன்றில் மட்டுமே நடைபெற வேண்டும் என்று கூறுவது அநீதியல்லவா?.

அதைவிட ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று கட்சி கட்டிப் பேசுவது, வருங்காலச் சமுதாயத்துக்குச் செய்யும் துரோகமல்லவா?.

இன்னும், பரங்கி மொழிப் பக்தர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாகச் சொல்லும் கருத்துக்களை ஆராய்வோம்.

ம.பொ.சிவஞானம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.